.

Friday, July 10, 2015

முழங்கை-மணிக்கட்டு வலியை குறைக்க எளிய வழிகள்



மூட்டு வலி, முதுகுவலி போல் சமீபகாலமாக முழங்கை வலியால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் முழங்கைக்கு நல்ல பயிற்சி கொடுக்காததே ஆகும். இந்தியாவை பொறுத்தவரையில் முழங்கை வலியால் பெண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளளனர்.


தற்போது கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி இருக்கிறது. அவர்களை முதலில் தாக்குவது கழுத்துவலி. இதற்கு அடுத்த படியாக வருவது முழங்கை- மணிக்கட்டு வலி. சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி போன்ற பெரு நகரங்களில் லேப்-டாப், கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரில் பெரும்பாலானவர்கள் முழங்கை -மணிக்கட்டு வலியின் பிடியில் சிக்கித் தவிப்பது தெரிய வந்துள்ளது.

இதற்கு காரணம் அவர்கள் கைகளுக்கு ஓய்வு கொடுக்காமல் கம்ப்யூட்டர் மவுசை  தொடர்ச்சியாக பல மணி நேரம் பயன்படுத்துவதுதான் என்கிறார் பிரபல வலிநீக்கியல் மருத்துவ நிபுணர் ஜி.கே.குமார். அவர் மேலும் கூறியதாவது:-

ஏதாவது ஒரு பொருளை இறுக்கமாகப் பற்றி பிடித்தபடி (கம்ப்யூட்டர் மவுஸ், மெஷின்கள்) வேலை செய்வோருக்கு முழங்கை-மணிக்கட்டு வலி ஏற்படும். நரம்புகள் மணிக்கட்டை அழுத்துவதால் இவ்வலி ஏற்படும். முதலில் மதமதப்பாக தெரியும். பின்னர் அது நாளாக நாளாக வலியாக மாறிவிடும்.

இவ்வலி உள்ளவர்கள் எளிய பயிற்சிகள் மூலம் வலியின் தன்மையை ஓரளவு குறைக்க முடியும். தீவிர வலி உள்ளவர்கள் மணிக்கட்டின் உள்ளே மருந்து செலுத்தப் பட்டு நிவாரணம் பெறலாம். இதே போல் மணிக்கட்டு பகுதியில் ஓசோன் வாயுவை செலுத்தியும் வலியை குறைக்கலாம். சில சிறப்பு பேண்டுகள் அணிந்தும் வலியை குறைக்க முடியும்.

முழங்கை வலி அறிகுறி:

சாதாரணமாக முழங்கை வலி வருவதில்லை. ஏதாவது பாரம் தூக்கும்போது, கையை திருப்பும் போதும் வலி இருக்கும். முழங்கை வெளிப்புறவலி டென்னிஸ் எல்போ என்பர். முழங்கை உட்புறவலியை கோல்ப் எல்போ என்பர். டென்னிஸ், கோல்ப் போன்ற வலிகள் விளையாட்டுகளால் மட்டும் வருவதில்லை.

அத்தகைய விளையாட்டின்போது முழங்கை உபயோகிக்கும் முறைகளின்போது வலி வருகின்றதால் இந்த  வலிகளுக்கு விளையாட்டுகளின் பெயரை வைத்துள்ளனர். முழங்கை கழுத்து எலும்பு, நரம்பு அழுத்தப்படுவதால் வரலாம். மேலும் கைப்ரோமையால்ஜியா போல முழங்கை வலி இருக்கும்.

முழங்கையில்  ஏற்படும் வலி பெரும்பாலும் கடுமையாக இருக்கும். ஆரம்பத்தில் பொறுக்கக் கூடியதாக இருக்கும். ஒரு சில மாதங்கள் கழித்து கடுமையாக மாறும். நோய் கடுமையான நிலையில் முழங்கையின் சிறு அசைவு கூட வலியைக் கடுமையாக்கும்.முன்னங்கைகளை அதிகம் உபயோகிக்க வேண்டிய தொழில் செய்பவர்களுக்கு இது ஏற்படும்.

வர்ணம் பூசுவது, இறைச்சி வெட்டுவது, சுத்தியலால் தொடர்ந்து அடிப்பது, நெசவு போன்றவை சில உதாரணங்களாகும். பலருக்கு இந்நோய் எந்தவித சிகிச்சையும் இல்லாது தானாகவே குணமாகி விடும். ஆரம்ப நிலையில் அவ்விடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது வலியைத் தணிக்க உதவும். வலிநிவாரணி மாத்திரைகள், மணிக்கட்டிற்கான வலியை குறைக்க உதவும். விரல்களுக்கும் மணிக்கட்டுக்குமான சில எளிமையான பயிற்சிகள் முழங்கை வலியைத் தணிக்க உதவும். அதற்கான பயிற்சி முறை பற்றி விளக்குகிறேன்.

விரல்களை விரிக்கும் பயிற்சி:

மிகவும் சுலபமான ஒரு பயிற்சியானது ரப்பர் பான்ட் உதவியுடன் உங்கள் விரல்களை விரிக்கும் பயிற்சியாகும். ஒரு ரப்பர் பான்ட்டை உங்கள் கையின் விரல்களைச் சுற்றி அணியுங்கள். இப்பொழுது உங்கள் கை குறுகுகியது போல தோற்றமளிக்கும்.

இனி விரல்களை அகட்டி மெதுவாக கையை விரியுங்கள். இவ்வாறு 10 முறை செய்யுங்கள். சில நிமிட ஓய்வுக்கு பின் மீண்டும் 10 முறை செய்யுங்கள். 3-வது முறையும் அவ்வாறு செய்யுங்கள். இவ்வாறு காலை மாலை இரு முறை செய்ய வேண்டும்.

இறுக்கப் பிடிக்கும் பயிற்சி:

இரண்டாவதாக விரல்களை இறுக்க பிடிக்கும் பயிற்சி செய்யுங்கள். சிறிய உருளை அல்லது பந்து ஒன்றை எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்திப் பிழிவதுபோல இறுகப் பிடியுங்கள். தொடர்ந்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு தொடர்ந்து செய்யுங்கள். காலை மாலையாக தினமும் 2 முறை அல்லது 3 முறை செய்ய வேண்டும்.

மணிக்கட்டு வலி:

பொதுவாகப் பெண்களுக்கு ஏற்படுவது மணிக்கட்டு வலி. இவ்வலி 60 வயது முதல் 70 வயதுடையோரை அதிக அளவில் தாக்கும். கைகளுக்கு செல்லும் நரம்புகள் மணிக்கட்டு பகுதியில் அழுத்தப்படுவதால் இவ்வலி ஏற்படுகிறது. முதலில் சுண்டு விரல், மோதிர விரல் பகுதியில் மதமதப்பும் பின்பு வலியும் ஏற்படும்.

கைகளை பயன்படுத்தும்போது வலி இருக்கும். பொதுவாக மணிக்கட்டு வலி இரவில் அதிகமாக இருக்கும். இவ்வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில நவீன சிகிச்சை முறைகள் மற்றும் எளிய பயிற்சிகள் மிகவும் உபயோகமாக இருக்கும்.

சிகிச்சை:

மணிக்கட்டு-முழங்கை வலிக்கு Rice (ரைஸ்) சிகிச்சை அவசியம். R-rest: ஓய்வு, I-Ice : ஐஸ் ஒத்தடம், Compression: கட்டு போடுதல், E-elevation:  கைகளை உயர்த்தி வைத்தல். மணிக்கட்டு வலியை இந்த நான்கையும் பயன்படுத்தி குணமாக்கலாம். பயிற்சிகள் மூலம் வலி குணமாகவில்லை என்றால் ஓசோன் சிகிச்சை அளிக்கப்படும்.

இது தவிர ஸ்பிரால்டு சிகிச்சையும் நல்ல பலனை தரும். பயிற்சிகளைச் செய்து, வலிநிவாரணி மருந்துகளையும் உபயோகித்த போதும் வலி தணியவில்லை எனில் வலி நீக்கியல் நிபுணர் முழங்கையின் வலியுள்ள பகுதியில் ஊசி மருந்தை ஏற்றக் கூடும். ஊசி மருந்தானது வலியுள்ள பகுதியில் அழற்சியைத் தணித்து நோயைக் குணமாக்கும்.

ஊசி போட்டு வலி தணிந்த பின்னர் குணமாகிவிட்டது என பயிற்சியை கை விட்டுவிடாதீர்கள். தசைகளை நீட்டி விரிக்கும் பயிற்சிகளுக்கும், முழங்கையின் செயற்பாட்டு எல்லையை அதிகரிக்கும் பயிற்சிகளும், தசைகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும். வலி தணியவில்லை என்றால்  அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

அப்போது பழுதடைந்த தசைநார்த் துண்டை அகற்றி நல்லநிலையிலுள்ளதை எலும்பில் வைப்பார்கள்
Disqus Comments