.

Thursday, June 4, 2015

சில காய்கறிகளை தோல் நீக்காமல் சாப்பிடவேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா?



சிலர் சாப்பிடும் காய்கறிகளை தோலுரித்துவிட்டு சாப்பிடுவார்கள். ஆனால் சிலரோ காய்கறிகளை தோலுடன் சாப்பிட்டால் தான் நல்லது என்று சொல்வார்கள். ஏனெனில் காய்கறிகளின் தோல்களில் தான் சத்துக்கள் அதிகம் உள்ளது.

குறிப்பாக ஒருசில காய்கறிகளின் தோல்களில் நார்ச்சத்துக்களும், இதர ஊட்டச்சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது. அதற்காக தோல் கசப்பாக இருந்தால், அதனை சாப்பிடக்கூடாது.
அப்போது அந்த தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும். முக்கியமாக இயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டு செழிப்பாக விளைய வைத்த ஆர்கானிக் காய்கறிகளை தேர்ந்தெடுத்து வாங்கி சாப்பிட வேண்டும்.

• கேரட்டின் தோலில் பீட்டா கரோட்டீன் மற்றும் பீனோலிக் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது. எனவே கேரட்டை எப்போதுமே தோலுடன் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால், இதய நோய், புற்றுநோய், பார்வை கோளாறு போன்றவற்றை சரிசெய்துவிடலாம்.

• வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாகவும், வைட்டமின் கே மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாகவும் உள்ளது. மேலும் வெள்ளரிக்காயின் தோலில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே வெள்ளரிக்காயை தோலுடன் சாப்பிட்டால், மலச்சிக்கல் மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கலாம்.

• பீட்ரூட்டின் தோலில் பீட்டாலெயின் என்னும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் அதிகளவில் உள்ளன. எனவே பீட்ரூட்டின் தோலை நீக்காமல், அதனை துண்டுகளாக்கி, அதில் ஆலிவ் ஆயில் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, வேக வைத்து பிரட்டி சாப்பிட வேண்டும்.

• உருளைக்கிழங்கின் தோலில் தான் நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்றவை அதிகம் உள்ளது. மேலும் வைட்டமின் கே, பொட்டாசியம், காப்பர் மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் வளமாக உள்ளது. எனவே உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு சமைத்து சாப்பிடுவதைத் தவிர்த்து விடுவது நல்லது.

• ஊதா நிற கத்திரிக்காயில் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே கத்திரிக்காய் வாங்கும் போது, ஊதா நிற கத்திரிக்காயை வாங்கி சாப்பிடுங்கள்.
Disqus Comments