.

Friday, June 5, 2015

தினமும் எத்தனை முட்டைகள் நீங்கள் சாப்பிடலாம்?



ஆணழகன் போட்டி மற்றும் போலீஸ் வேலைக்குத் தயாராகிறவர்கள் பெரும்பாலும் முட்டைகளை அடுக்கடுக்காக உடைத்துக்  குடித்து ஆற்றல் பெறுவதைப் போல பல திரைப்படங்களில் பார்த்திருப்போம்.

இப்படி, உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்க  வேண்டியவர்களுக்கு முட்டை ஒரு அத்தியாவசிய உணவு என்றும், தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம்  ஆரோக்கியமான உடல்நலத்தைப் பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது.


அதே வேளையில், ‘முட்டையின் வெள்ளைக்கரு  நல்லது, மஞ்சள் கருவை சாப்பிடக்கூடாது’ என்றும் சொல்கிறார்களே... இது எந்த அளவு உண்மை? ஒருவருக்கு ஒரு நாளைக்கு  எத்தனை முட்டை அனுமதி?

நமது கேள்விகளை உணவியல் நிபுணர் மீனாட்சி பெட்டுகோலாவின் முன்வைத்தோம்...

 ‘‘பாடி பில்டர்கள் டஜன்கணக்கில் முட்டை சாப்பிட்டாலும், அதற்கேற்ற கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால்  அவர்களுக்கு எவ்வித பிரச்னைகளும் ஏற்படாது. தசைகள் செழுமையாகத் தெரிவதற்கு புரதம் அவசியம். முட்டையின்  வெள்ளைக்கருவில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாகவே பாடி பில்டர்ஸ் அடுக்கடுக்காக முட்டைகளை  உடைத்துக் குடிக்கிறார்கள்.

 ஒருவர் எத்தனை முட்டை சாப்பிட வேண்டும் என்பதை அவரது வாழ்வியல் சூழலை வைத்துதான்  முடிவு செய்ய முடியும்.

கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொண்டாலே போதும்.

உடல் உழைப்பு  அதிகமுள்ள வேலைகளில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை சாப்பிடலாம்.  பொதுவாக முட்டையின்  வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 வரை சாப்பிடலாம்.  மஞ்சள் கரு சாப்பிடுவதாக இருந்தால்,  தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும்.

தேவையான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பு  அமிலமான ஒமேகா-3 ஆகியவை இருந்தாலும், சில கெட்ட கொழுப்புச்சத்துகளும் அடங்கியிருப்பதால் மஞ்சள் கருவை அதிகமாக  சாப்பிடக்கூடாது.

இரவு நேரத்தில் முட்டை சாப்பிடக்கூடாது என்று சிலர் சொல்வதுண்டு. இரவு நேரத்தில் முட்டை சாப்பிடுவதில் தவறில்லை.  ஆனால், தூங்கப் போவதற்கு 2 மணி நேரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். மஞ்சள் கருவையும் சேர்த்து முட்டைகளை  அதிகமாக சாப்பிடுபவர்களின் உடலில் கொழுப்புச் சத்து அளவு அதிகமாகி, இதய நோய்கள் வரக்கூடும்.

தேவையான  உடற்பயிற்சிகள் செய்துவிட்டு அதன் பின்னர் முட்டை சாப்பிடுவது உடல் வலிமையை கூட்டும்.

முட்டையை அதிக நேரம் சமைக்கக் கூடாது. 10-15 நிமிடங்கள் கடாயில் போட்டு வறுத்தால் ஒருவித வாசனை வரும். முட்டை  அதன் இயற்கைத் தன்மையை இழந்துவிடும். தண்ணீரில் போட்டு அவித்துச் சாப்பிடும் முட்டையே ஆரோக்கியத்துக்கு உகந்தது.  கொதிக்கும் தண்ணீரில் முட்டையை உடைத்து ஊற்றி   தயாரிப்பார்கள். இதுவும் உடல்நலத்துக்கு ஏற்றது.

காய்கறிகளை நறுக்கிப்போட்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றி ஆம்லெட் தயாரித்தும் சாப்பிடலாம். ஹாஃப் பாயிலோ,  ஆம்லெட்டோ... அதிகமாக வேக வைக்காமல் சாப்பிடுவதுதான் சிறந்தது. முட்டையில் இருக்கும் புரதங்களை உடல் எளிதாக  ஏற்றுக்கொள்ளும். ஆதலால், முட்டை சாப்பிடுங்கள்... உடலுக்கு தேவையான பயிற்சிகளையும் கொடுங்கள்!’’
Disqus Comments