வீட்டில் பாயாசம், கேசரி போன்றவற்றை சமைக்கும் போது உங்கள் அம்மா கை நிறைய முந்திரி, பாதாம் சேர்ப்பதை பார்த்திருப்பீர்கள். இன்னும் சில வீடுகளில் உள்ள அம்மாக்கள் பாதாமை இரவில் படுக்கும் போதே ஊற வைத்து, மறுநாள் காலையில் சாப்பிட கொடுப்பார்கள்.
இதற்கு காரணம், பாதாம் சருமத்தின் அழகை அதிகரிக்க உதவுவதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கும். மேலும் பாதாமை சாதாரணமாக சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வேண்டிய பல்வேறு சத்துக்கள் கிடைத்து, உடல் வலிமையோடு ஆரோக்கியமாக இருக்கும். இங்கு பாதாமை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துப் பாருங்களேன்...
செரிமான மண்டலத்தை சுத்தம் செய்யும் செரிமான மண்டலம் நன்கு ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதை நம் முகமே வெளிக்காட்டிவிடும். செரிமான மண்டலம் பலவீனமாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படக்கூடும். அப்படி மலச்சிக்கல் ஏற்பட்டால், முகப்பருக்கள் வர ஆரம்பிக்கும். ஆனால் தினமும் காலையில் ஊற வைத்த பாதாமை உட்கொண்டு வந்தால், அது வயிற்றில் வளரும் பாக்டீரியாக்களின் அளவை அதிகரித்து, செரிமானத்தை சீராக்கி, இதனால் அழகான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவும்.
வைட்டமின் ஈ நிறைந்தது உங்களுக்கு முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை அதிகம் இருந்து, மருத்துவரிடம் சென்று அதற்கான மருந்தை கேட்டால், அவர் பரிந்துரைப்பது வைட்டமின் ஈ மாத்திரைகளைத் தான். ஏனெனில் வைட்டமின் ஈ தான் சருமத்திற்கு அழகையும், ஆரோக்கியத்தையும் தருகிறது. இத்தகைய வைட்டமின் ஈ பாதாமில் அதிக அளவில் உள்ளது. ஆகவே தினமும் பாதாமை உட்கொண்டு வந்தால், முகப்பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.
முதுமையைத் தடுக்கும் பாதாமில் முதுமையைத் தடுக்கும் பொருள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே தினமும் பாதாமை சாப்பிடுவதோடு, பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும். மேலும் கருவளையங்கள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கி, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.
இதயத்திற்கு ஆரோக்கியமானது சிம்பிளாக சொல்ல வேண்டுமானால், இதயத்திற்கு சிறந்த பாதுகாப்பை பாதாம் வழங்கும். ஏனெனில் அதில் உள்ள நார்ச்சத்து, உடல் கொழுப்புக்கள் உறிஞ்சுவதைத் தடுக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் ஈ, மோனோ அன் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், மக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும். கொழுப்புக்கள் உறிஞ்சுவது தடுக்கப்படுவதால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.
ஞாபக சக்தி மற்றும் ஆற்றல் பாதாம் ஞாபக சக்தியை அதிகரிப்பதுடன், உடலின் ஆற்றலையும் அதிகரிக்கும். ஏனென்றால் இதில் ரிபோஃப்ளேவின் மற்றும் மக்னீசியம் போன்ற உடலின் எனர்ஜியை அதிகரித்து நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவிபுரியும். சுருக்கமாக சொல்லப்போனால் பாதாம் உங்களின் ஆற்றல் திறனை அதிகரிக்கும்.
எடையைக் குறைக்கும் அன்றாடம் பாதாம் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம். ஏனெனில் இவற்றில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர சத்துக்கள் நிறைந்திருப்பதால், இவை அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும். இதனால் கண்ட கண்ட உணவுகளின் மேல் நாட்டம் வருவது தவிர்க்கப்படும். ஆகவே உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் பாதாமை சாப்பிடுங்கள்.