.

Wednesday, June 10, 2015

அப்படி என்னதான் இருக்கிறது இந்த கிரீன் டீயில்?இதைப் பற்றிப் பேசாத மக்களே இருக்க மாட்டார்கள். எடைக் குறைப்பில் தொடங்கி, இளமையான தோற்றம் வரை சகலத்துக்கும் உதவுவதாக  சொல்லப்படுகிற, நம்பப்படுகிற கிரீன் டீ உண்மையிலேயே நல்லதுதானா? வழக்கமான டீயில் இல்லாதது அப்படி என்னதான் இருக்கிறது இதில்?விளக்கமாகப் பேசுகிறார் பொது மருத்துவர் ஈஸ்வரன்...


ஆக்சிஜன் நல்லது என்பது நமக்கெல்லாம் தெரியும். அதே ஆக்சிஜன் இரும்பில் பட்டால் துருப்பிடிக்கிறதல்லவா? ஆக்சிடேஷன் எனப்படுகிற இதே  விஷயம் மனித உடலிலும் நடக்கும். நமது உடலில் உள்ள செல்களிலும் ஆக்சிடேஷன் நடக்கும். நீரிழிவு, கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கும், வெயில்,  சுற்றுச்சூழல் மாசின் பாதிப்புகளாலும், புகை, குடிப்பழக்கம், துரித உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கும் உடலின் செல்களில் ஆக்சிடேஷன் அதிகமாகும்.  அதை ‘ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்’ என்கிறோம். அதன் விளைவாக ‘ரியாக்டிவ் ஆக்சிடேஷன் ஸ்பீசிஸ்’ என்கிற ஒரு ரசாயனம் சுரக்கும். அது  மனிதர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

நீரிழிவையும் கொலஸ்ட்ராலையும் ரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்துவதுடன் சீக்கிரமே முதுமையையும் கொடுத்துவிடும். இவ்வளவு மோசமான  விளைவு களைக் கொடுக்கக்கூடிய இந்தப் பிரச்னைக்கு ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் என்பவை அவசியம்.

 பிலிருபின், வைட்டமின் ஏ, சி, இ மற்றும் டி,  தாமிரம், செலினியம், துத்தநாகம், ஆல்ஃபா லினோலிக் அமிலம் போன்ற எல்லாம் நம் உடலுக்குள்ளேயே இருந்து, இந்த பாதிப்புகளில் இருந்து  காக்கக்கூடியவை. ஆனாலும், நீரிழிவு, கொலஸ்ட் ரால், சுற்றுச்சூழல் மாசுப் பிரச்னைகளுக்கு உள்ளானவர்களுக்கு இதன் அளவு குறைந்து, பாதிப்புகளின்  தீவிரம் இன்னும் அதிகமாகும். ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் என்பவை பழங்கள், காய்கறிகள், தாவர எண்ணெய், காபி, டீ, சோயா, சாக்லெட், ஆலிவ் ஆயில்,  முட்டை போன்றவற்றிலிருந்தே நமக்கு அபரிமிதமாகக் கிடைக்கக்கூடியவைதான்.

ஆனால், இவற்றைப் போதுமான அளவு எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு, மருத்துவர்கள் சமீப காலமாக கிரீன் டீ சேர்த்துத் தயாரிக்கப்பட்ட  மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள். கிரீன் டீயில் உள்ள catechins என்கிற பொருளானது கொலஸ்ட்ராலை குறைத்து, எடைக் குறைப்புக்கு  உதவுகிறது. ஃபாஸ்ட் ஃபுட் ப்ரியர்களுக்கு, அத்தகைய உணவுகளில் சேர்க்கப்படுகிற பலவிதமான செயற்கையான பொருட்களால் புற்றுநோய்க்குக்  காரணமான செல்கள் உற்பத்தியாகிற அபாயம் ஆரம்பமாகும். கிரீன் டீ குடிப்பதன் மூலம், புற்றுநோய் செல்களின் சங்கிலிப் பிணைப்பு  தடுக்கப்படுகிறது.

வாய் துர்நாற்றத்துக்குக் காரணமான மால்டோஸ் அதிகமாவதையும் கிரீன் டீ தடுக்கிறது. வாய்ப்புண் குணமாகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு  புண்களால் உண்டாகிற ரணத்தை ஆற்றுகிறது. பாக்டீரியா தொற்றைத் தவிர்க்கிறது. பார்க்கின்சன் மற்றும் அல்சீமர் நோய்களுக்கு எதிராகவும்  செயல்படுகிறது. தொடர்ந்து கிரீன் டீ குடிப்பவர்களுக்கு கேட்டராக்ட் பிரச்னைகூட தவிர்க்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மிக  முக்கியமாக இளமையைத் தக்க வைக்கிறது. கெட்ட செல்களை அழித்து, நல்ல செல்களின் உருவாக்கத்துக்கு உதவுகிறது. கலப்படமில்லாத, தரமான  கிரீன் டீயில் இந்த அத்தனை நல்ல அம்சங்களும் இருக்கும்.

காலையில் காபி, டீ குடிப்பதற்குப் பதிலாக, சர்க்கரை சேர்க்காத கிரீன் டீ குடிப்பது ஆரோக்கியத்தின் தொடக்கமாக அமையும். கூடவே மருத்துவரின்  ஆலோசனையின் பேரில் உண்மையிலேயே தேவை இருப்போர், கிரீன் டீ மாத்திரைகளை குறிப்பிட்ட காலத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்’’ என்கிற  மருத்துவரின் வார்த்தைகள், பலரையும் சாதாரண டீயிலிருந்து, கிரீன் டீ பழக்கத்துக்கு மாற்றப் போவது உறுதி!

அரிசி, எண்ணெய் மாதிரியே குறிப்பிட்ட மக்களைக் குறி வைத்துக் களமிறங்கும் டீ வகைகள் சமீப காலமாகப் பிரபலமாக ஆரம்பித்திருக்கின்றன.நீரிழிவுக்காரர்களுக்கு, பருமனானவர்களுக்கு,  சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு... இப்படி தேவைக்கேற்ப தனிப்பட்ட முறையில் பலன் தருவதாக உத்தரவாதம் அளிக்கிற தேயிலைகளுக்கு மேல்  தட்டு மக்களிடம் மாபெரும் வரவேற்பு இருக்கிறது.

அழகு முதல் ஆரோக்கியம் வரை ஒவ்வொன்றுக்கும் ஒரு வகையான டீ உதவும்.
Disqus Comments