அமெரிக்காவில் அதிக அளவு விற்பனையாகும் உணவுகளில் பர்கர் குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக இந்தியாவிலும் அதன் மீதான ஆர்வம் அதிக ரித்து வருகிறது. ஜங் ஃபுட் வகைகளின் கீழ்தான் வருகிறது பர்கர். அளவுக்கு அதிகமாக பதப்படுத்தப்பட்டு, நிறைய கொழுப்பு, சர்க்கரை, உப்பு, சுவையூக்கிகள், செயற்கை நிறமூட்டிகள் கலக்கப்பட்ட உணவுகளே ஜங் ஃபுட்.
இந்த உணவுகளில் ஊட்டச்சத்து களையும் நார்ச்சத்தையும் தேடினா லும் கிடைக்காது. ஆனாலும், பர்கரை விரும்பாதவர்கள் யார் இருக்கிறார்கள்? ஃபாஸ்ட் ஃபுட் பர்கரின் சுவை எப்படி உங்களை அடிமையாக்குகிறது? எவ்வாறு உங்கள் உடலுக்கு தீங்கிழைக்கிறது?
சீஸ் பர்கர் பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிக்க என்ன செய்யப்படுகிறது?
இரு பன்களுக்கு நடுவே நிறைய சீஸ், சிக்கன் அல்லது காய்கறிகள் கொண்டு செய்யப்பட்ட கட்லெட் துண்டு வைக்கப்படுகிறது. அதிக கொழுப்பு, அதிக உப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளையும் கலவையாக கொண்டிருப்பதால்தான் சீஸ் பர்கர் அதிக சுவையுடன் இருக்கிறது.
ஜங் உணவு உடலுக்கு நல்லதல்ல எனத் தெரிந்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்படி பர்கரின் சுவைக்கு அடிமையாகிறார்கள்?
ஒரு சீஸ் பர்கரானது சாப்பிட்டவுடன் வேகப்பந்து போல சென்று மூளையைத் தாக்குகிறது.
பர்கரில் உள்ள கொழுப்புச் சத்து நிறைந்த இறைச்சித் துண்டை கடித்தவுடன், மூளை டோபமைனை சுரக்கச் செய்கிறது. இது கோகைன் எனும் போதை மருந்து எடுத்துக் கொள்ளும் போது மூளையில் நடக்கும் செயலுக்கு சமமானது! பர்கரில் உள்ள வெள்ளை பன் அதிக சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படுவதால் மூளையில் செரடோனின் என்னும் திரவத்தை சுரக்கச் செய்கிறது. இது எக்ஸ்டசி என்னும் போதை மருந்தை உட்கொள்ளுவதால் ஏற்படும் உணர்வுக்குச் சமமானது.
இதன் விளைவாகவே அதிகச் சுவையும் போதை யும் உருவாக்கும் பர்கர் சாப்பிடுவதை யாராலும் எளிதில் விட முடிவதில்லை.
சமச்சீர் உணவில் 500 கலோரிகள் இருந்தால் போதுமானது. ஒரு பர்கரில் மட்டுமே 500 கலோரிகள், 22 கிராம் கொழுப்பு மற்றும் 1,200 மில்லிகி ராம் சோடியம் இருக்கிறது. பர்கருடன் எடுத்துக்கொள்ளும் சாஸ் வகைகள், நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்களையும் சேர்த்தால், இந்த அளவு பல மடங்கு அதிகமாகும். பர்கரில் அத்தியாவசிய சத்துகளான வைட்ட மின், புரதம், தாது உப்புகள், நார்ச்சத்துகள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன.
அதுமட்டுமல்ல... பர்கரில் பயன்படுத்தப்படும் பன்னில், நீண்ட நாட்கள் கெடாம லிருக்கும்படி வேதியியல் பொருட்கள் கலக்கப்பட்ட கோதுமையே பயன்படுத்தப்
படுகிறது. இது இன்சுலின் சுரப்பை தாறுமாறாக்கி, அதிக உணவு உட்கொள்ளவும் தூண்டும். இதனாலேயே பலருக்கு இடுப்புப் பருமன் அதிகரிக்கிறது.
இன்சுலினை சில நேரம் அதிகமாகவும் சில நேரம் மிகக்குறைவாகவும் சுரக்கச் செய்து, ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகப்படுத்தி நீரிழிவுக் குறைபாடு ஏற்படுவதற்கும் வழிசெய்கிறது.
சீரற்ற இன்சுலின் சுரப்பும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் இணையும்போது, உடற்திறன் குறைபாடு, அதிக சோர்வு, வேலையில்
கவனம் செலுத்த முடியாமை, ஹார்மோன் சுரப்பு சீரற்றுப் போவது மற்றும் பெண்களுக்கு கருப்பை கட்டிகள் வருவதற்கும் காரணமாகிறது.
எல்லா விரைவு உணவு வகைகளிலும் கரையாத கொழுப்பு அமிலங்கள் (Transfatty Acids) இருக்கின்றன என Obesity என்ற ஆய்வு இதழ் கூறுகிறது. குறிப்பாக, பர்கரில் அதிக சுவைக்காக கரையாத கொழுப்பு முக்கிய மூலக்கூறாகச் சேர்க்கப்படுகிறது. இந்தக் கொழுப்புதான் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை அதிகப்படுத்தி, பருமன், இரண்டாம் வகை நீரிழிவு, இதயநாள நோய்கள், மூளைத்தாக்கு நோய் போன்றவை வரக் காரணமாகின்றன.
ஜங் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நார்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு, குடலில் கிருமிகளை அழிக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அளவு குறைந்து, கிருமிகளின் அளவு அதிகமாகி வயிற்றுப்போக்குக்கும் வழி வகுக்கும். இது தொடர்ந்தால் குடல் புற்றுநோய் வரும் அபாயமும் உண்டு.
பர்கரில் பயன்படுத்தப்படும் சீஸ் பதப்படுத்தப்பட்டு, சுவையூக்கிகள் சேர்க்கப்பட்டு, இயற்கைத் தன்மையை இழந்து விடுகிறது.
பர்கரில் பயன்படுத்தப்படும் இறைச்சியும் பல நாட்கள் குளிர் அறைகளில் வைக்கப்பட்டு, கெடாமல் இருப்பதற்கான பிரிசர்வேட்டிவ் பொருட்கள் மற்றும் சுவைக்கான கொழுப்புகள் சேர்க் கப்பட்டுதான் வருகிறது. இதனால் எடை அதிகமாதல், நீரிழிவு, ரத்த அழுத்த நோய் போன்றவை எளிதில் வர அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகி, கால்சியம், கொழுப்பு ஆகியவையும் கூடுதலாகி, ரத்த நாளங்களில் தடை உருவாகி, மாரடைப்பு மற்றும் மூளைத் தாக்கு நோய் (Stroke) வருவதற்கும் காரணமாகி விடும்.
அல்சீமர் (Alzheimer’s disease) எனப்படும் மறதி நோய் வருவதற்கும் பர்கர் போன்ற கொழுப்பு உணவுகளே காரணம். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் உணவுகளை உண்டு, எளிமையான - ஆனால், வலிமையான சத்துகள் நிறைந்த உடலைப் பெற்றால் நாள் முழுவதும் சோர்வில்லாமல் உங்கள் நாளினை இனிமையாக்கலாம்!
ஆரோக்கியமான பர்கர் சாப்பிட விரும்புகிறீர்களா?
வெள்ளை பன்னுக்குப் பதில் தானியங்கள் மற்றும் உலர் விதைகள் கொண்டு செய்யப்படும் பன்களை பயன்படுத்தலாம்.
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் சீஸ் பயன்படுத்துங்கள்.
இறைச்சித் துண்டுகளை குறைவான எண்ணெயில் கொழுப்பின்றி சமைக்கப் பழகுங்கள்.
இறைச்சிக்கு மாற்றாக பழங்கள், காய்கறிகள், உலர் பருப்புகள், முட்டை கொண்டும் பர்கரை நிரப்பலாம்.
மயோனீஸ் போன்ற சாஸ்களை வீட்டில் ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.