நினைவில் வாழும் முதல் காதல்
‘எதிர்பாலினர் மீது வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் காதல் வரும்’ என்று சொல்வார்கள். அப்படியானால் அதுதான் முதல் காதல். நமது இந்திய கலாசாரத்தைப் பொறுத்தவரையில் பலரும் அடிக்கடி காதலிப்பதில்லை. அப்படி காதலித்தால் அதை ஒரு ஒழுக்கக் கேடாகவே கருதுகிறார்கள்.
வாழும் வரை ஒருவர் மாற்றி இன்னொருவர் என்று காதலித்துக் கொண்டே இருப்பதும், அடிக்கடி திருமணம் செய்துகொண்டே இருப்பதும் வெளிநாட்டினர் கலாசாரம். அதனால் அங்கு காதலும், கல்யாணமும் பொழுதுபோக்காக இருக்கிறது.
இங்கும் அந்த நிலை இப்போது தோன்றிக்கொண்டிருக்கிறது. ‘சும்மா நேரப்போக்குக்காக காதலித்தேன்’ என்று ஆண்களும், பெண்களும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் முதல் காதல் என்பது அவர்களுடைய ஆன்மாவில் வெகு ஆழமாக பதிவு செய்யப்பட்டுவிடுகிறது.
அதை அவர்களால் மறக்க முடியாது. முதல் காதல் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக பெரும்பாலும் இருப்பதில்லை. இந்த சமூகம் காதலைக்கூட ஒரு வரை முறைக்குள்தான் வரவேற்கிறது என்பது, அந்த முதல் காதலர்களுக்கு தெரியாது. அதனால் இனம், மொழி, ஜாதி எல்லைகளைக்கடந்து, வயதையும், வாழ்க்கையையும் நினைத்துப்பார்க்காமல் முதல் காதலில் மூழ்கிவிடுகிறார்கள்.
அதனால் இந்த காதல் பெரும்பாலும் ஜெயிப்பதில்லை. ஜெயித்தாலும், தோற்றாலும் இந்த முதல் காதல் அழியாமல் நினைவிலே வீற்றிருக்கும். உலக சாதனையாளர்கள்கூட தங்களுடைய முதல் காதலை மறக்க முடியாமல் மனம் சோர்ந்திருக்கிறார்கள் என்பதை சரித்திரம் சொல்கிறது. இதயங்கள் இரண்டு இணைவது மட்டுமே காதல் என்றால் அது அநேகமாக முதல் காதலில் மட்டுமே நிகழும்.
அந்த காதலில் பிரிவு ஏற்படுவதை இதயம் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. முதல் காதல் நிறைவு பெறாத நிலையில் அதன் நினைவுகள் இறுதிவரை தொடரும். அதை யாராலும் அழிக்க முடியாது. காதல் என்பது இயற்கையின் பொக்கிஷம். மனிதர்களின் உள்ளங்களை மென்மையாக்கி பக்குவப்படுத்தும் சக்தி காதலுக்கு உண்டு.
ஜாதி, மதம், மொழி, இனம் ஆகியவை இன்றும் காதலுக்கு எதிரிகள்தான். எந்தக் குறையையும் பெரிதுபடுத்திப் பார்க்கத் தெரியாத முதல் காதல் தெய்வீகமானது. முதல் காதல் வெற்றி என்பது வாழ்க்கை முழுவதற்குமாக கிடைத்த வெற்றி என்று கூற முடியாது.
ஏனென்றால் வாழ்க்கை வெகுநீளமானது. அதற்கு பின்னாலும் வாழ்க்கையில் வேறு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அதுபோல் முதல் காதல் தோல்வி என்பதும், வாழ்க்கை தோல்வி அல்ல. நீளமான வாழ்க்கை காலத்தில் வேறுபல விஷயங்களில் வெல்ல முடியும். மனோதத்துவ நிபுணர்கள் இந்த முதல் காதல் விஷயத்தில் ஆச்சரியப்படவே செய்கிறார்கள்.
“வாழ்க்கையில் மனிதர்கள் எத்தனையோ திருப்பங்களையும், வெற்றி, தோல்விகளையும் சந்திக்கிறார்கள். அதில் பல அப்படியே அழிந்துபோய்விடுகின்றன. சிரமப்பட்டு முயற்சித்தால்கூட சில விஷயங்கள் நினைவில் வருவதே இல்லை. ஆனால் இந்த முதல் காதல் மட்டும் நினைவுகளாக அந்த மனிதன் மரணம் வரை அவனுடனே வாழ்கிறது” என்கிறார்கள். அதற்கு காரணம் இருக்கிறது.
மனிதர்களின் காதல் உணர்வு இன்ப பரவசமானது. அதனால் காதல் சினிமாக்களை பார்க்கவும், காதல் செய்திகளை படிக்கவும், அடுத்தவர்களின் காதலைப் பற்றிஅறியவும் ஆர்வப்படுகிறோம். அப்படி பரவலாக பல இடங்களில் இருந்து காதல் விஷயங்களை பார்க்கும் போதும், கேட்கும்போதும், படிக்கும்போதும் நமக்குள்ளே இருக்கும் காதல் உணர்வு நினைவுக்கு வந்துவிடும்.
இப்படி ஒவ்வொரு முறையும் நாம் அந்த பழைய உணர்வை புதுப்பித்துக்கொண்டே இருப்பதால் ஒரு போதும் அது பழையதாகிப் போகாமல் நினைவிலே இருந்துகொண்டிருக்கிறது. முதல் காதலை இதுவரை அனுபவம் செய்யாதவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் கீழே தரப்படுகின்றன.
இரண்டு உள்ளங்கள் முதல் காதலில் இணைவது ஒரு இயற்கையான விஷயம். ஆனாலும் சூழ்நிலைகளும் ஒன்றுபட்டு போனால்தான் முதல் காதல் ரசிக்கும்படியாக இருக்கும். முக்கியமாக குடும்பச் சூழல், சமூக கட்டுப்பாடு, உறவினர்களின் மனநிலை இவையெல்லாம் ஒன்றுபட்டுவரும் சூழலில்தான் முதல் காதல் வெற்றியை நோக்கி நகரும்.
சமூக கட்டுப்பாட்டை உடைத்து, உறவுகளைப் பிரித்து முதல் காதலில் வெற்றி பெறும் காதலர்களின் காதல் வாழ்க்கை பெரும்பாலும் வெற்றியாக அமைவதில்லை. அதனால்தான் அறிவு பூர்வமாக சிந்திக்கும் சிலர் இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் பவ்யமாக ஒதுங்கி, முதல் காதலை ‘நினைவுக்காதலாக’ மட்டும் ஆக்கிக்கொள்கிறார்கள்.
பக்குவப்படாத மனதில்தான் முதல் காதல் உதயமாகிறது. அதனால் அந்த காதலர்களின் வாழ்க்கை மீது அக்கறை கொண்ட அனைவருமே அவர்களுக்கு உண்மையை புரியவைக்க முயற்சிப்பார்கள். அப்போது அந்த காதலர்கள், அவர்களை காதலின் எதிரிகள் என்று நினைப்பார்கள்.
பால்ய விவாகத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ அதுபோலத்தான் பக்குவப்படாத முதல் காதலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும்.
முதல் காதல் மறக்க முடியாதது என்பது உண்மைதான். ஆனால் முதல் காதல் மட்டுமே வாழ்க்கையாகிவிடாது.