.

Wednesday, February 25, 2015

சளியும் இருமலும் எப்பொழுது பிரச்சனைகுரியதாகிறது?



உடலியல் பற்றி கொஞ்சம் நுட்பமாக ஆராய ஆரம்பித்தால் பல ஆச்சரியங்கள் நமக்குக் காத்திருக்கும். ஒவ்வொரு உடல் உறுப்பும் எத்தனை புத்திசாலித்தனமாக செயல்படுகிறது என்பதும், தன்னைத் தற்காத்துக் கொள்கிறது என்பதும் முடிவில்லாத மகா மெகா ஆச்சரியம். சளித்தொல்லை என்று நாம் சாதாரணமாக நினைத்தாலும் உடலியலில் அதன் பங்கு எத்தனை முக்கியமானது என்பது நுரையீரல் மருத்துவர் திருப்பதியிடம் பேசியபோது இன்னும் தெளிவாகப் புரிந்தது.


‘‘நம் உடலில் சுவாசத்துக்கு என்று காற்றுக்குழாய்களும் உணவு செல்வதற்கு என்று உணவுக்குழாய்களும் இருக்கின்றன. காற்று, உணவு இரண்டும் சுலபமாக சென்று வருவதற்கு ஒரு ஈரத்தன்மை இந்தக் குழாய்களுக்குத் தேவை. அந்த ஈரத் தன்மையை அளிக்கும் வேலையையே சளி (Sputum) செய்கிறது. நாம் நினைப்பது போல் அது உடலுக்குத் தேவையில்லாதது அல்ல. இது மட்டும் அல்ல; காற்றில் இருக்கும் வைரஸ், பாக்டீரியா, தூசிகள் ஆகியவை சுவாசத்தின் மூலமோ, உணவின் மூலமோ உடலுக்குள் சென்று விடாமல் தடுக்கும் வடிகட்டியாகவும் சளி செயல்படுகிறது’’ என்று சளியின் முக்கியத்துவத்தை விளக்க ஆரம்பிக்கிறார் திருப்பதி.

பருவகாலத்தில்தான் சளி உண்டாகிறதா?

‘‘பொதுவாக மழை காலத்திலோ, பனிகாலத்திலோதான் சளி ஏற்படும் என்றும் நினைப்பார்கள். ஆனால், காற்றுக் குழாயிலும் உணவுக்குழாயிலும் இருக்கும் மியூகஸ் க்ளாண்ட்ஸ் (Mucus glands) வருடம் முழுவதும் சளியை உடலில் சுரந்து கொண்டேதான் இருக்கும். இல்லாவிட்டால் உணவு, சுவாசம் இயல்பாக நடைபெறாது. சளியின் அளவு அதிகமாகும் போதுதான் நமக்குத் தெரிகிறது.’’

சளி எப்போது பிரச்னைக்குரியதாகிறது?

‘‘நாளொன்றுக்கு 150   மி.லி. சளி வெளியேறுவது இயல்பானது. காலையில் எழுந்தவுடன் தொண்டை கட்டினாற்போல் இருப்பதும் சாதாரணமானதுதான். பருவகால மாற்றங்களால் ஒருநாள், இரண்டு நாள் சளி இருப்பதிலும் பயப்பட வேண்டியது ஒன்றும் இல்லை. ஆனால், வெளியேறும் சளியின் அளவு 150 மி.லி.க்கும் அதிகமாக இருந்தால் அது பிரச்னைக்குரியது. இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் இருந்தாலும் அதை உடனடியாக கவனிக்க வேண்டும். இது காசநோயின் அடையாளமாக இருக்கும். அதேபோல் சளியின் நிறம் மாறுவதை வைத்தும் சில நோய்களைக் கண்டறிய முடியும். வெள்ளை, சாம்பல் நிறம், தண்ணீர் போன்ற நிறங்களில் இருந்தால் அது வழக்கமானது. ஆனால், அடர் பச்சை, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருந்தால் அது நோயின் அடையாளமாக இருக்கும். உடலில் தொற்றுகள் ஏற்பட்டிருந்தால்தான் பச்சை நிறத்திலோ மஞ்சள் நிறத்திலோ மாறும். இதுபோல் நிறம் மாறும் போது காய்ச்சலுடன் கூடிய சளி உண்டாவதை வைத்து உஷாராகிவிடலாம்.’’

என்னென்ன நோய்களைக் கண்டுபிடிக்க முடியும்?

‘‘பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகள் உடலில் ஏற்பட்டிருந்தால் சளி பரிசோதனையின் மூலம் பார்க்க முடியும். முக்கியமாக, காசநோயை எளிதாகக் கண்டு பிடிக்க உதவுவது சளி பரிசோதனைதான். முற்றிய காசநோய் என்பதைக் கண்டுபிடிக்க நிறைய பரிசோதனைகள் இருந்தாலும், அவைகளில் எளிதானது சளி பரிசோதனை. குறிப்பாக, ‘டி.பி. கல்ச்சர்’ என்ற செல் வளர்ப்பு மூலம் காசநோயைக் கண்டுபிடிக்க மூன்று மாதங்களாவது ஆகும். ஆனால், நான்கு மணி நேரங்களில் சளி பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்துவிடலாம். சளியில் ரத்தம் கலந்து வருவது காசநோய், புற்றுநோய் போன்ற பெரிய பிரச்னைகளின் அடையாளமாக இருக்கும். சளியில் துர்நாற்றம் இருந்தாலும் உடலில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விடலாம். நுரையீரலில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்கவும் சளி பரிசோதனை உதவுகிறது. இதை ‘ஸ்பூடம் சைட்டாலஜி’ என்பார்கள். அதிகபட்சமாக 300 ரூபாயில் சளி பரிசோதனையை செய்துவிடுவார்கள்.’’

இருமல் மருந்தைப் பயன்படுத்தலாமா?

‘‘சிலருக்கு சளி வெளியேற வேண்டியிருக்கும். சிலருக்கு அடங்க வேண்டியிருக்கும், சிலருக்கு வறட்டு இருமலாக இருக்கும். அதனால், சளி இருக்கிறது என்று உடனடியாக ஒரு இருமல் மருந்தை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. என்ன வகையான இருமல் என்பதைத் தீர்மானிக்க மருத்துவரின் ஆலோசனை முக்கியம்.’’

சளி பரிசோதனையின் முக்கியத்துவம் என்ன?

‘‘உடனடியாக இதயம் செயலிழந்து போகிறவர்களுக்கு சோப் நுரை போல வாயிலிருந்து சளி வெளிவரும். இதை ‘பல்மனரி எடிமா’ என்று சொல்வோம். இது ஆபத்தானது என்பதால் உடனடியாக கவனிக்க வேண்டும். சளியில் ரத்தம் வருவதும் ஆபத்தானது என்பதால் உடனடியாக கவனிக்க வேண்டும். இதுதவிர நாள்பட்ட இருமல் உள்ளவர்கள், புகைப்பழக்கம் இருப்பவர்கள், காசநோயாளிகள், காசநோய் என்பது எளிதில் மற்றவருக்குத் தொற்றக் கூடியது என்பதால் காசநோயாளிகளுக்கு அருகில் இருப்பவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், வயதானவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது!’’

நன்றி தினகரன்  மற்றும் டாக்டர் திருப்பதி
Disqus Comments