.

Saturday, February 14, 2015

குளியலின் வகைகளும் பயன்களும் உங்களுக்கு தெரியுமா?குளியல்னா என்ன?’ என்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் தட்டிவிட்டால், ‘ஆபீஸ் போறதுக்கு முன்னாடி செய்ற அவசர வேலை’ என்றே பலரிடமிருந்தும் கமென்ட் வரும். ஆனால், ‘நாம் நினைத்துப் பார்க்க முடியாத மருத்துவ குணங்களும் மகத்துவங்களும் கொண்டது குளியல்’ என்று இன்பாக்ஸில் லிங்க் அனுப்புகிறார்கள் மருத்துவர்கள்!

மனு பிரதீஷ் (இயற்கை மருத்துவர்)

‘‘ஹைட்ரோ தெரபி’ என்ற நீர் மூலம் அளிக்கும் சிகிச்சையே மருத்துவத்தில் இருக்கிறது என்றால் குளியல் எத்தனை முக்கியத்துவத்தைப் பிடித்திருக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள். ஹரப்பா, மொகஞ்சதாரோ, நைல் என்று பல்வேறு நாகரிகங்கள் உருவானதே நதிக்கரைகளில்தான். துருக்கியர் இந்த நீர் சிகிச்சையுடன் மசாஜையும் கலந்து 18ம் நூற்றாண்டில் பிரபலமாக்கினார்கள். உணவு, நீர் சிகிச்சை மட்டுமே கொடுக்கிற நிலையங்கள் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் நிறைய இருக்கின்றன. அமெரிக்க பார்வை பட்ட பிறகு, ‘வாட்டர் தெரபி’ உலகம் முழுவதும் இன்னும் பிரபலமாகிவிட்டது. நம் இயற்கை மருத்துவத்தைப் பொறுத்தவரை 3 வகை குளியல்கள் இருக்கின்றன.

ஹிப் பாத்

ஒரு சின்ன தொட்டியில் இடுப்பளவு நீரை நிரப்பி அதனுள் உட்கார்ந்து கொள்ள வேண்டும். கால்கள் வெளியே இருக்க வேண்டும். தொடைக்கு மேலும் வயிற்றுக்குக் கீழும் நீருக்குள் இருக்க வேண்டும். இதே நிலையில் 20 நிமிடங்கள் அமர்ந்து கொண்டு நிதானமாக எழுந்திருக்க வேண்டும். பிறகு, 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி சென்று விட்டு வந்து குளித்தால் புத்துணர்வாக இருக்கும். இந்தக் குளியலின் மூலம் செரிமான சக்தி அதிகமாகும். உடலுக்குத் தேவையான சக்திகளை கிரகித்துக் கொள்வது, தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவது என்று மற்றமுக்கிய பணிகளும் சிறப்பாக நடக்கும்.

ஸ்பைனல் பாத்

ஒரு தொட்டியில் முதுகெலும்பு முழுவதும் நனைவதுபோல குறைவான தண்ணீரை நிரப்பி மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். முதுகெலும்பில் இருக்கும் நரம்புகள்தான் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சேர்கிறது. ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, உடலின் வெப்பநிலை போன்றவற்றைப் பராமரிப்பது போன்ற பல முக்கியப் பணிகளை இந்த நரம்பு மண்டலங்கள் செய்கின்றன. இந்தக் குளியலால் நரம்பு மண்டலங்கள் ரிலாக்ஸாவதால் ஆரோக்கியம்தான்!

ஃபுல் இம்மெர்ஷன் பாத்

இந்தக் குளியலில் மொத்த உடலும் தண்ணீருக்குள் இருக்க வேண்டும். நம் உடலின் நரம்பு மண்டலங்களில் மூன்றில் ஒரு பாகம் தோல் பகுதிக்கு வந்து சேர்கிறது. நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு என்ற பெருமையும் தோலுக்குத்தான் உண்டு. இந்தக் குளியலில் நரம்பு மண்டலங்களும் தோல் பகுதியும் புத்துணர்வாகும். மன அழுத்தம், எலும்பு சம்பந்தப்பட்ட குறை பாடுகள், நீரிழிவுக் குறைபாடு உள்ளவர் களுக்கு இந்தக் குளியல் மிகவும் நல்லது.

இந்த மூன்று குளியல்களையும் வீட்டிலேயே செய்துகொள்ளலாம் என்பது இதில் சிறப்பு. 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை இந்தக் குளியல் எடுத்துக் கொள்ளலாம். வெறும் வயிற்றில்தான் செய்ய வேண்டும். பாத் எடுத்த பிறகு, 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்த பிறகே குளிக்க வேண்டும். இந்த சிகிச்சைகளை  தினமுமோ, வாரம் ஒருமுறையோ செய்யலாம்.

லக்ஷ்மண் (ஆயுர்வேத மருத்துவர்)

மண் குளியல், பஸ்மக் குளியல், புனுகுக் குளியல், நல்லெண்ணெய் குளியல், மந்திரக் குளியல், மூலிகைக் குளியல், தூபக் குளியல், சூர்ணக் குளியல் என்று எட்டு வகைக் குளியலை ஆயுர்வேதத்தின் மிக முக்கியமான நூலான ‘அஷ்டாங்க ஹ்ருதயம்’ சொல்கிறது.

மண் குளியல்

மண் குளியலில் புற்றுமண் அல்லது களிமண்ணில் இளநீர் கலந்து உடல் முழுவதும் பூசிக் கொண்டு, சூரிய ஒளியில் அரை மணிநேரம் உலர வேண்டும். இப்படி வெயில் காயும்போது, உடலில் எங்கு நோய் இருக்கிறதோ அந்த இடத்தில் சிவந்து போகும். அந்தக் காலத்தில் இந்த மண் குளியலின் மூலமே நோயைக் கண்டுபிடித்தார்கள்.

 பஸ்மக் குளியல்

உடல் முழுவதும் விபூதி பூசிக் கொண்டு 20 நிமிடங்களுக்குப் பிறகு குளிப்பது பஸ்மக் குளியல். இதன் மூலம் எண்ணெய் வழிவது, அரிப்பு போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

புனுகுக் குளியல்

புனுகு, கஸ்தூரி, சந்தனம் போன்ற சுகந்த திரவியங்களை உடலில் தேய்த்துக் குளிப்பது  புனுகுக் குளியல். இதை வட இந்தியாவில் அதிகம் பின்பற்றுகிறார்கள். இப்போதும் இஸ்லாமிய சமூகத்தினர் அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்திக் குளிப்பதும் ஒருவகை புனுகுக் குளியல்தான். பசியை உண்டாக்கக் கூடியது, நோயை விரட்டக் கூடியது, உடலுக்கு நறுமணத்தை அளிப்பது இந்தப் புனுகுக் குளியல்.

நல்லெண்ணெய் குளியல்

ஆயுர்வேதத்தில் எல்லோருக்கும் தெரிந்தது நல்லெண்ணெய் குளியல். தலை, தொப்புள், பாதம், காதுகள் ஆகிய 4 இடங்களில் எண்ணெய் முக்கியமாக பட வேண்டும். எண்ணெய்க் குளியலால் தோல் சுருக்கம் நீங்கி உடல் இளமையாகும், உடல் சூடு குறையும்.

மந்திரக் குளியல்

திருவெம்பாவை, திருப்பாவை, விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற மந்திரங்களை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பது மந்திரக் குளியல். தியானத்திலேயே இருக்கும் ரிஷிகள் குளிக்காவிட்டாலும் அவர்களது உடலில் இருந்து நறுமணம் வீசச் செய்யும் சக்தி கொண்டது இந்த மந்திரக் குளியல் என்கிறது அஷ்டாங்கஹிருதயம்.

மூலிகைக் குளியல்

கடுக்காய், வேப்பிலை, புங்க மர இலை ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரில் குளிப்பதற்கு மூலிகைக் குளியல் என்று பெயர்.

தூபக் குளியல்

சாதாரணமாகக் குளித்த பிறகு குங்கிலி யம், பூண்டின் தோல், சாம்பிராணி, கோஷ்டம், வெள்ளைக் கடுகு, வேப்பிலைப் பொடி போன்றவற்றின் மூலம் புகையை ஏற்ப டுத்தி அந்தப் புகையை உடல் முழுவதும் படுமாறு செய்வது தூபக் குளியல். இது மிகச் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.

சூர்ணக் குளியல்

சந்தனம், மஞ்சள், வெட்டி வேர், புங்க மர எண்ணெய் போன்றவற்றைச் சேர்த்து சூர்ணமாகத் தயாரித்துக் குளிப்பதற்கு சூர்ணக்குளியல் என்று பெயர். ஸ்நானப் பொடி என்று இது  கடைகளிலும் இப்போது கிடைக்கிறது.நல்லெண்ணெய் குளியலின்போது சிறிது ஓமம், கொஞ்சம் வெள்ளைக் கடுகு கலந்து, புகை வராமல் சூடு பண்ணிய பிறகு, தேய்த்துக் குளித்தால் உடல் சூடு குறையும்.

விவேக் ஸ்ரீதர் (ஸ்பா மேலாளர்)

ஸ்டீம் பாத் என்கிற நீராவிக் குளியல், ஜக்கூஸி பாத் என்கிற உடலை சுத்தப்படுத்தும் குளியல் என 2 வகைகள் ஸ்பாவில் இருக்கின்றன. முழுக்க மூடப்பட்ட ஒரு அறைக்குள் நீராவி தயாரிக்கும் எந்திரம் ஒன்று இருக்கும். இந்த எந்திரம் தண்ணீரை ஆவியாக்கி அறை முழுவதும் புகை மூட்டம் போல் உருவாக்கிவிடும். அறைக்குள் இருக்கும் நபரின் உடல் முழுவதும் வியர்த்து, செல்களில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி உடல்  புத்துணர்வு பெறும்.

ஜக்கூஸி பாத்துக்கு க்ளீனிங் பாத் என்றும் பெயர் உண்டு.  உடல் முழுவதையும் சுத்தப்படுத்தும் குளியல் இது. இந்த ஜக்கூஸி பாத்தில் ஒரு பெரிய தொட்டியில் பக்கவாட்டில் சின்னச் சின்ன பைப்புகள் இருக்கும். இந்த பைப்புகளில் இருந்து தண்ணீர் மிதமான வேகத்தில் உடல்மேல் தெறிக்கும். இந்த வேகத்தை தேவைப்படும் அளவுக்கு மாற்றி வைத்துக் கொள்ளலாம். அருவி நீர் விழுவது போல், உடலில் தண்ணீர் அழுத்தமுடன் விழுவது ஒருவகை மசாஜ் போலவும் இருக்கும். அழுக்குகளும் நீங்கும். தாய், ஆயுர்வேதிக், ஸ்வீடிஷ் போன்ற ஏதாவது மசாஜ் ஒன்று செய்துகொண்ட பிறகு தான் இந்தக் குளியல் எடுத்துக் கொள்ள வேண்டும். நீராவிக் குளியலுக்கு 2,500 ரூபாயும் ஜக்கூஸி பாத்துக்கு 4,000 ரூபாயும் சராசரியாக வசூலிப்பார்கள்.

மனோகரன் (சரும மருத்துவர்)

காலை, மாலை என நாளுக்கு இருவேளை குளிப்பதன் மூலம் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க முடியும். வியர்வை அதிகம் வெளியேறுவதால் ப்ரிக்லி என்ற தோல் பகுதிகளில் முள் போன்று ஏற்படுவது, உடலில் இருந்து நீர்ச்சத்து அதிகம் வெளியேறுவது, உப்புச்சத்துகள் வெளியேறி செல்களின் பாதையை அடைத்துக் கொள்வது, தோல் உரிவது போன்ற பல பிரச்னைகள் ஏற்படும். குளியலின் மூலம் இந்தக் குறைபாடுகள் வராமல் தடுக்க முடியும். வெப்பம் மிகுந்த நம் ஊரில் குளிப்பதற்குப் பச்சை தண்ணீர் நல்லது. சுடுதண்ணீரில் குளித்தால் புத்துணர்ச்சி ஏற்படுவதுபோல இருக்கும். ஆனால், சிறிது நேரத்திலேயே சோர்வு உண்டாகிவிடும். பச்சைத் தண்ணீர் குளியல் அப்போதைக்கு நடுங்க வைத்தாலும் சில நிமிடங்களிலேயே புத்துணர்ச்சியைக் கொடுத்துவிடும். பச்சைத் தண்ணீர் குளியலால் உடலின் செயல்படும் திறனும் அதிகமாகும். செல்களை மீண்டும் உற்பத்தி செய்யக் கூடிய ஆற்றலும் உண்டு.

குழந்தைகளை குளிக்க வைப்பது எப்படி?குழந்தைகள் நல மருத்துவர் பத்மநாபராவ்

‘‘இரண்டரை கிலோவுக்குக் கீழ் எடையிருக்கிற, குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளை குளிப்பாட்டக் கூடாது. குறிப்பிட்ட நாளும் எடையும் வரும் வரை மிதமான வெந்நீர் வைத்து உடலைத்துடைத்துவிட்டுக் கொள்ளலாம். மூக்கில் தண்ணீர் போய்விடக் கூடாது என்பதற்காக குப்புறப் படுக்க வைத்துக் குளிப்பாட்டுவார்கள். மல்லாக்கப் படுக்க வைத்துக் குளிக்க வைக்கும்போது, குழந்தையின் தலையை சிறிது உயர்த்திப் பிடித்து வைத்துக் கொள்ளலாம். இரண்டு நாளுக்கு ஒரு முறை குளிப்பாட்டலாம். வாரம் ஒருமுறை தலைக்குக் குளிக்க வைத்தால் போதும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டும்போது குழந்தையின் வாய் வழியே எண்ணெயும் தண்ணீரும் உள்ளே சென்று நிமோனியா காய்ச்சலை உருவாக்கும் என்பதால் எண்ணெய்க் குளியலை இரண்டு வயது வரை தவிர்ப்பது நல்லது.’’
Disqus Comments