.

Monday, October 17, 2016

யாரெல்லாம் எம்.சி.ஆர். காலணி பயன்படுத்தலாம்?



நமது  முழு எடையையும் தாங்கக் கூடியவை பாதங்கள். பாத வலி வந்தவர்கள் நடக்கவே கஷ்டப்படுவார்கள். ஓய்வில் இருக்கும் போது கூட பாதத்தில் வலி இருக்கும். மருத்துவரிடம் காட்டினால் வலி நிவாரணி மாத்திரைகளோடு, பாத வலியை குறைக்கும் வகையில் பிசியோதெரபி உள்ளிட்ட சில சிகிச்சைகளையும் கொடுப்பார்கள்.


சிலருக்கு எம்.சி.ஆர். காலணி எனப்படும் `Micro cellular rubber chappal’ அணியச் சொல்வார்கள். எம்.சி.ஆர். காலணிகளின் பயன்பாடு, கால் வலியைத் தவிர்ப்பதில் அவற்றின் பங்கு போன்றவற்றை விளக்குகிறார் எலும்பியல் அறுவை  சிகிச்சை மருத்துவர் நல்லி கோபிநாத்...

பாத வலி உள்ளவர்கள் வலிக்கான காரணத்தை தெரிந்து கொண்ட  பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே செருப்புகளை தேர்ந்தெடுக்க  வேண்டும். எல்லா வகையான பாத வலிகளுக்கும் எம்.சி.ஆர். காலணிகளை அணியக்கூடாது.

நீரிழிவு நோயாளிகளோ, தொழுநோயாளிகளோ  உள்ளங்காலில் உணர்ச்சியற்று இருந்தால் மட்டுமே எம்.சி.ஆர். காலணியைப்  பயன்படுத்தலாம். உள்ளங்காலில் உணர்ச்சி உடையோர் இதைப் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் உள்ளங்கால் மிருதுவாகி, காலணி இன்றி  நடக்கவே முடியாதபடி ஆகிவிடும். பாதத்தில் வேறு சில பகுதிகளிலும் வலியை  ஏற்படுத்திவிடும்.

குதிகால் வலியும் எல்லா வயதினரால் ஏதோ ஒரு காலத்தில்  உணரப்படுகிறது. குழந்தைகளுக்கு வரும் குதிகால் வலியானது தட்டைப்  பாதத்தினால் வரலாம். உள்ளங்காலில் உள்ள சதை வளைவு தட்டையானால் இது வரக்கூடும். அதற்கு பயிற்சிகளும், பாத உள்பகுதிக்கு மேடு வைத்த  செருப்பையும் பயன்படுத்தி சரி செய்யலாம். மிக அதிக அளவு வளைவு உள்ள  குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்.

பெரியவர்களுக்கு  வரும் குதிகால் வலியானது பாதத்தின் பின்புறமோ, உள்ளங்காலின் உள்புறமோ, வெளிப்புறமோ ஏற்படலாம். குதிகாலின் பின்புற வலி அல்லது வீக்கம் உள்ளவர்கள் பின்புறம் உயர்ந்த காலணிகளை பயன்படுத்தி வலியைக் குறைக்கலாம். அதற்கு மேலும் வலி இருந்தால் இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி),  மாத்திரைகள் மூலம் வலியைக் குறைக்கலாம்.உள்ளங்காலில் உள்ள  வலி உள்புறமாக இருப்பின், அது உள்ளங்கால் சவ்வினால் ஏற்பட்ட அழற்சி அல்லது  தொய்வினால் இருக்கலாம்.

உடற்பயிற்சி மற்றும் இயன்முறை மருத்துவம்  மூலம் இதை சரிசெய்யலாம். சிலருக்கு குதிகாலில் ஊசி போட்டு வலியை சரி செய்ய  வேண்டியிருக்கும். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் வலி சரியான பிறகும்,  பாதத்துக்கான பயிற்சிகளை கொடுத்து பாதத்துக்கு தொய்வு இல்லாமல் பார்த்துக்  கொள்ள வேண்டும். இவர்களுக்கு வலியைக் குறைக்க சிலிக்கான் ஜெல் காலணிகள் மிகவும் பயன்படும்.

உள்ளங்காலில் வெளிப்புறம் ஏற்படும் வலி உள்ளங்காலில் கொழுப்பு குறைவால் வருகிறது. இவர்கள் மருத்துவர்களின்  அறிவுரைப்படி காலணி மாற்றம் செய்து, இயன்முறை மருத்துவ பயிற்சிகள் எடுத்து  வலியை சரிசெய்ய வேண்டும்.

உள்ளங்காலில் பாதத்தில்  வரும் வலியானது, நீரிழிவு, பருமன், ரத்தத்திலோ, சிறுநீரிலோ கிருமிகள் இருந்தாலும் ஏற்படும். வாத நோய் இருந்தாலும், சிறுநீரில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருந்தாலும் பாதத்தில் வலி வரலாம். இவர்களுக்கு இந்தப் பிரச்னைகளை சரிசெய்து விட்டால் குதிகால் வலி தானாகவே சரியாகிவிடும்...’’

நன்றி - சேரக்கதிர்
Disqus Comments