ஆடைகளுக்கு நாம் எல்லோருமே பெரிய முக்கியத்துவம் கொடுப்பவர்கள்தான். உள்ளாடைகளுக்கு?
'உள்ளாடை அணிவது நாகரீகத்துக்காக மட்டும் அல்ல. அதுவும் ஒரு வகையில் நம் உடலுக்குப் பாதுகாப்பைத் தருகிறது.
ஆண்களைப் பொருத்தவரையில், பைக், சைக்கிள் போன்ற வாகனங்களை ஓட்டும்போதும் பிற சமயங்களிலும் விதைப் பைகள் அடிபடாமல் காக்கும். உள்ளாடைகள் சுத்தமாக இருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.
அழுக்கான உள்ளாடைகளும் காற்றோட்டத்தைத் தடை செய்யும் உள்ளாடைகளும் தோலில் இருந்து வியர்வை வெளியேறும் துவாரங்களை அடைத்துவிடும். தோலில் இயற்கையிலேயே இருக்கும் பாக்டீரியாக்களும் பூஞ்சைகளும் இதுபோன்ற சூழ்நிலையில் பல்கிப் பெருகி நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும். இதன் தொடர்ச்சியாக சிறு கட்டிகள், கொப்புளங்கள், அரிப்பு ஆகியவை ஏற்படும்.
உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் உள்ளாடைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பருமனாக உள்ளவர்கள் உடலின் உள் உறுப்புகள் கூடுதல் அழுத்தத்துடன் இருக்கும். மிக இறுக்கமாக உள்ளாடைகளை அணிந்திருக்கும் அவர்கள் கனமான பொருட்களைத் தூக்கினாலோ, வேகமாக இருமினாலோ, தும்மினாலோ குடல் இறக்கம் ஏற்பட சாத்தியம் உண்டு. மேலும் மிக அழுத்தமாக உள்ளாடைகளை அணிவதால் விதைப் பைகளின் வெப்பம் அதிகமாகி விந்தணு உற்பத்தி குறையவும் வாய்ப்பு இருக்கிறது. விதைப் பைகளின் அளவையும் இறுக்கமான உள்ளாடைகள் சுருங்கச் செய்யக் கூடும்.
பெண்களைப் பொருத்தவரை உள்ளாடைத் தூய்மை மிக முக்கியம். காரணம்... ஆசனவாய், யோனி மற்றும் சிறுநீர்த் தாரை ஆகியன அருகருகே இருப்பதால் ஓரிடத்தில் இருந்து கிருமிகள் அடுத்த பகுதிக்கு மிக எளிதில் பரவி, பல பிரச்னைகளையும் ஏற்படுத்தக் கூடும். அழுக்கான உள்ளாடைகளை அணிவதால் பெண்களுடைய பிறப்பு உறுப்பில் நோய்த் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
பெண்கள் உள்பாவாடை அணியும்போது நாடா இறுக்கமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாடாவைத் தவிர்த்துவிட்டு லூப் மற்றும் பெல்ட் உள்ள பாவாடைகளைக்கூட அணியலாம். ரிப்பன் போன்ற பட்டையான நாடாவைப் பயன்படுத்தலாம். இதனால் இடுப்புத் தசையின் மீது அழுத்தம் குறையும். ஒவ்வொரு முறையும் முடிச்சு இருக்கும்/இறுக்கும் இடத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
உள்பாவாடையை இடுப்பில் கட்டும் உயரத்தையும் தினசரி மாற்ற வேண்டும். இப்படி ஒரே இடத்தில் அழுந்துவதால் நாளடைவில், அங்குள்ள செல்கள் இறந்துவிடும். இறந்த செல்கள் என்றாலே கிருமிகளுக்குக் கொண்டாட்டம்தான். எனவே, அவை அங்கு வேகமாக வளர்ந்து பல்வேறு தொல்லைகளை ஏற்படுத்தும்.
இடுப்பின் முன்புறத்தையும் பின்புறத்தையும் கயிற்றால் இணைக்கும் 'தாங்’ என்று சொல்லப்படும் உள்ளாடைகளை அணியும் போக்கு மேல்தட்டு வர்க்கத்தில் பிரபலமாகிவருகிறது. இது ஆசனவாய்ப் பகுதியில் இருந்து யோனிக்கு பாக்டீரியாக்கள் பரவி சிறுநீர்த் தாரையில் நோய்த் தொற்று ஏற்பட வழிவகுக்கும். எனவே, இந்த வகை பேன்டீஸ்களை ஒதுக்குவது நல்லது.
தழும்புகளோ தோலில் நிறமாற்றமோ ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும்.
மேலும் வெகு நாட்களாக இப்படி அழுந்திக் காயம் ஏற்பட்டு அது ஆறாமல் இருந்தால் ஒருகட்டத்தில் புற்றுநோய்கூட வர வாய்ப்பு இருக்கிறது. சேலை மற்றும் உள்பாவாடையை இறுக்கிக் கட்டுவதால் புற்றுநோய்க்கு ஆளான 3 பெண்களுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிகிச்சை அளித்ததாக மும்பை கிரான்ட் மருத்துவக் கல்லூரியின் அறுவைச் சிகிச்சைப் பிரிவு பேராசிரியர் ஜி.டி.பக்ஷி என்பவர் ஜர்னல் ஆஃப் இண்டியன் மெடிக்கல் அசோசியேஷன் இதழில் தெரிவித்திருக்கிறார்' என்று சொல்லி முடித்தார் மருத்துவர் தண்டபாணி!
அழகியல் நிபுணரான ஹேமா லட்சுமணன் உள்ளாடைத் தூய்மைக்கு சில டிப்ஸ்களைச் சொன்னார்.
பலவிதமான பாக்டீரியாக்களும் பூஞ்சைகளும் துவைப்பதால் மட்டுமே போகாது; வெயிலில் உலர்த்துவதால் மட்டுமே போகும்.
தினந்தோறும் உள்ளாடைகளை மாற்றுவது மிகவும் முக்கியம். தேவைப்பட்டால் இரு தடவைகள்கூட மாற்றலாம்.
கடையில் இருந்து வாங்கி வரும் புது உள்ளாடைகளை அப்படியே அணிவதைவிட ஒரு முறை நன்கு துவைத்த பிறகு அணிவது நல்லது.
உள்ளாடையால் மறைக்கப்பட்ட இடங்களில் தினசரி தேங்காய் எண்ணெய் பூசி வந்தால் சருமம் மிருதுவாகும்.
என்னதான் நெருங்கிய நண்பர்கள் என்றாலும் ஒருவருடைய உள்ளாடையை இன்னொருவருவர் ஒரு போதும் உபயோகிக்கக் கூடாது.
பருத்தித் துணியால் ஆன உள்ளாடைகள்தான் வியர்வையை முற்றிலுமாக உறிஞ்சக் கூடியவை என்பதால் அவற்றையே அணிவது நல்லது.
அப்போதுதான் வியர்வையினை அந்தத் துணி உறிஞ்சி எடுத்து வியர்வையினால் வரக்கூடிய தொற்று நோயைத் தடுக்கும். இரவில் மிகவும் தளர்வான உள்ளாடைகளை அணிவதே நல்லது.