.

Thursday, November 12, 2015

உங்க முடியின் அடர்த்தி குறைகிறதா? அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்...



காற்று மாசுபாடு, அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் நல்ல தரமற்ற தண்ணீரை தண்ணீரை பயன்படுத்துதல் போன்றவற்றால் முடி அதிகம் கொட்டுவதோடு, முடியின் அடர்த்தியும் குறைந்து கொண்டே வருகிறது.


இதனை ஆரம்பத்திலேயே கவனித்து போதிய பராமரிப்புக் கொடுத்து வந்தால், நிச்சயம் முடியின் அடர்த்தி குறைவதைத் தடுக்கலாம். மேலும் முடியின் அடர்த்தி குறைவதற்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், புரோட்டீன் குறைபாடு போன்றவையும் காரணங்களாகும்.


எனவே முடியின் அடர்த்தி குறைவதைத் தடுப்பதற்கு புரோட்டீன் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதோடு, ஒருசில எளிய இயற்கை வழிகளையும் பின்பற்றி வந்தால், நிச்சயம் முடியின் அடர்த்தி குறைவதைத் தடுக்கலாம்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து வந்தால், முடி உதிர்வது நின்று முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடியின் அடர்த்தியும் அதிகரிக்கும். வேண்டுமெனில் கற்றாழை ஜூஸை குடித்தும் வரலாம்.

தேங்காய் எண்ணெய்

தலையில் தினமும் எண்ணெய் வைக்காமல் இருந்தாலும் முடியின் அடர்த்தி குறையும். அதிகம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது தான் மிகவும் நல்லது. அதற்கு வாரம் ஒருமுறை இரவில் படுக்கும் போது தேங்காய் எண்ணெயுடன், சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கரப்பில் படும்படி மென்மையாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி தவறாமல் செய்து வந்தால், முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.

விளக்கெண்ணெய்

முடியை பராமரிக்க உதவும் எண்ணெய்களில் விளக்கெண்ணெய் மிகவும் சிறப்பான ஒன்று. இது எப்படி அடர்த்தியான நிலையில் உள்ளதோ, அதேப்போல் இதனைக் கொண்டு முடியைப் பராமரித்தாலும் முடியின் அடர்த்தி அதிகரிக்கும். அதற்கு வாரம் 2 முறை விளக்கெண்ணெயைக் கொண்டு நன்கு முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.

வெந்தயம்

வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை வாரம் ஒருமுறை தலைக்கு தடவி ஊற வைத்து அலசி வந்தால், முடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, அடர்த்தியும் அதிகரிக்கும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் கூட முடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும். அதற்கு ஆலிவ் ஆயிலை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து ஊற வைத்து அலச வேண்டும். இப்படி தவறாமல் செய்து வந்தால், முடியின் மென்மை அதிகரித்து, முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸை தினமும் குடித்து வந்தால், அவை மயிர்கால்களை வலிமையாக்கி, முடி உதிர்வதைத் தடுத்து, முடியின் அடர்த்தியை அதிகரிக்கும்.

வெங்காயம்

முடி அடர்த்தி குறைகிறதா? அப்படியெனில் இரண்டு வாரத்திற்கு தொடர்ந்து ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற கணக்கில் வெங்காய சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், முடி அடர்த்தி குறைவதைத் தடுக்கலாம்.

ஹென்னா

வாரம் 2 முறை தலைக்கு ஹென்னா போட்டு வந்தால், அதில் உள்ள சீகைக்காய், பூந்திக் கொட்டை போன்றவை முடியின் அடர்த்தி குறைவதைத் தடுக்கும்.
Disqus Comments