தின்ன தின்ன திகட்டாதது கரும்பு. இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்ட கரும்பு மருத்துவப் பயன் கொண்டது. மித வெப்பமண்டல தாவரமான கரும்பு சர்க்கரைக்காகவும், பிற தேவைகளுக்காகவும் உலகம் முழுவதும் 200 நாடுகளில் பயிரிடப்படுகிறது. கரும்பு உற்பத்தியில் பிரேசில்தான் உலகத்திலேயே முதன்மையான நாடாக விளங்குகிறது.
கரும்புச்சாறு, சர்க்கரை, வேர் ஆகியவை மருத்துவ பயன் கொண்டது.
உடல் இளைக்கும்
உடல் இளைக்கும் குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயங்கள். உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது.
எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்வதாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கரும்புச்சாறு பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரியவரும். பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விக்கல் கட்டுப்படும்
கரும்பு சாறு விக்கலை நிறுத்தும். உடம்பு எரிச்சலைத் தணிக்கும். இதனுடன் தயிரும் சேர்த்துக் குடிக்கலாம். இது பித்தத்தைப் போக்கிடும். வயிற்றுப் புழுக்களையும், நீரிழிவையும் ஏற்படுத்தும். வெள்ளை, அழற்சி பெருக்கு அடங்கும்.
கரும்பின் சாற்றைக் காயச்சி செய்யப்படும் சர்க்கரை நாட்டு மருந்துகளுக்குத் பயன்படுத்தப்படுகிறது. வாந்தி, பித்தம், சுவையற்ற தன்மையைப் போக்குகிறது. கெட்டியான சளியைக் கரைக்கிறது.
வெண்மை சர்க்கரையானது வாத ஜுரம், வாத நோய், நுண்மையான புழு, விக்கல்களை நீக்குகிறது.
சர்க்கரையைக் கொண்டு தயாரிக்கப்படும் கற்கண்டு மிகச்சிறந்த மருந்துவ குணம் கொண்டது. இதில் சிறிதளவு எடுத்து சிறிதளவு பொரிகாரம் சேர்த்து 7 தினங்கள் சாப்பிட்டு வந்தால், விந்து நீர்த்தல் நீங்கும். மேலும் ஈறுதடிப்பு, இருமல், வாந்தி ஆகியவை தீரும்.
விஷ முறிவு
சர்க்கரையைப் பாகு செய்து உணவுப் பொருட்களை நெடுநாள் சேமித்து வைக்கலாம். ஜலதோஷம், நீர்ப்பீனிச நோய்களைப் போக்கவும் தரலாம். செம்பு, வெள்ளப் பாஷாணம் முதலிய விஷப்பொருட்களை சாப்பிட்டால் ஏற்படும் தொல்லைகளிலிருந்து சர்க்கரை மிகச் சிறப்பான விஷமுறிப்பாக செயல்படுகிறது.
ஆறாத புண்களையும் குணமாக்க வழங்கப்படுகிறது. கரும்பின் வேரை முறைப்படி குடிநீரிட்டு கொடுத்து வந்தால் சிறுநீர் எரிச்சல் தணியும். மஞ்சள் மெழுகும், சர்க்கரையும் சேர்த்து குழம்பாக்கி பருக்களின் மீது தடவி வந்தால் குணமாகிறது.
நெடுநாள் நோயாளிகளாக உள்ளவர்களின் படுக்கை அறையில் சர்க்கரையை போட்டு புகையை ஏற்படுத்தினால் சுத்தமான காற்று ஏற்பட்டு அறை சுத்தமாகும்.
கரும்பு அமிலம்
கருப்பஞ்சாற்றைப் புளிக்க வைத்தது காடி என அழைப்பர். இது அமிலத்தன்மை உடையதால் பசியை உண்டாக்கி ஜீரணத்தை அதிகப்படுத்தும். தாகத்தைக் குறைக்கும். காடி ஒரு பங்கும், சுத்தமான நீர் 5 பங்கும் கலந்து ஈயம் போன்ற விஷங்களால் ஏற்படும் நோய்களுக்குத் தரலாம். சிறுநீரில் இரத்தம் வெளியேறும் நோய்க்கு, காடியை தொடை, இடுக்கு ஆகிய இடங்களில் பூசினால் குணமாகும்.
தேள், குளவி, தேனீ போன்றவை கொட்டினாலும், சில பயிர் பொருட்களின் உராய்வலால் ஏற்படும் தினவு, நமைச்சல் நோய்களுக்குப் பூசலாம். இதனைப் போன்றே மார்பக வீக்கத்தையும் கரைக்கலாம். தலைவலி, மயக்கம், தொண்டைப் புண், மூக்கில் நீர் ஒழுகல், ஆகியவற்றிற்கு இதன் ஆவியை நுகர வைத்தால் குணமேற்படும்.
கரும்பு பஸ்பம்
கரும்பினை சரிபாதியாகப் பிளந்து திப்பிலிப் பொடி, ஏலக்காய்ப் பொடி இவற்றை நடுவாக வைத்து செம்மண் சீலையால் கட்டி கும்பி நெருப்பிலிட்டு பதமாகச் சுட்டு, பின்னர் சீலையை எடுத்து பின் பிழிந்து எடுத்த சாற்றினை விக்கலுக்குக் கொடுத்து வந்தால் தீரும். இதனைப் பல துண்டுகளாக வெட்டி, சுத்திகரிக்கப்பட்ட செம்புத்தூளை சட்டியிலிட்டு வறுத்து வெட்டிய துண்டுகளால் கடைந்தால் ஒருவகை பஸ்பம் உண்டாகும். இதனைச் செய்ய ஒரு பலம் செம்பு தூளுக்கு 4 கரும்புகள் கூட தேவையாகும். இதனைக் கொண்டு பல நோய்களைத் தக்க இணை மருந்துகளால் தீர்க்கலாம்.