இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும் ஹர்மோனையும், ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும், எலும்புகளின் உறுதிக்கு பயன்படும் ஹார்மோனையும் சுரக்கசெய்வது உள்ளிட்ட பணிகளில் சிறுநீரகம் தீவிரமாக பங்கேற்கிறது. செல்கள் புரதத்தை பயன்படுத்தியது போக எஞ்சிய கழிவுகள், நைட்ரஜன் அடங்கிய யூரியாவாக மாறி இரத்தத்தில் கலந்துவிடும். இவற்றை பிரித்தெடுத்து வெளியேற்றுவது தான், சிறுநீரக மண்டலத்தின் முக்கிய வேலையாகும்.
நமது உடம்பில் சேரும் அசுத்த இரத்தத்தில் இருந்து யூரியா போன்ற கழிவுகளை அகற்றி உடம்பை நல்ல நிலையில் வைப்பது தான் நெப்ரான்களின் பணியே. பொதுவாக, வெளி சிறுநீரக குழாய் அமைப்பில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டு. இது பெண்களுக்கு வெறும் சிறுநீரை வெளியேற்றும் குழாயாக மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு பிறப்புறுப்பின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறது. உடலை பொறுத்தவரையில் கழிவுகள் என்பவை உடலை விட்டு வெளியேற்றப்பட வேண்டியவை. இவை இரத்தத்தில் சேர்ந்தால் உடல் முழுமையாக சீரழிந்துவிடும்.
உலகின் மிக சிறந்த, நுண்ணிய சுத்திகரிப்பு தொழிற்சாலையான சிறுநீரகங்கள் பாதிக்கப்பட என்ன காரணம்.?
இன்னதுதான் என்று ஓரே ஒரு காரணத்தை மட்டும் சொல்லிவிட முடியாது... இந்த செயலிழப்பு கொஞ்சம் கொஞ்சமாகவும் ஏற்படும்.... திடீரெனவும் ஏற்படும். முதலில் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழப்பதற்கான காரணங்களை பார்ப்போம்.
நமக்கு நாமே மருத்துவராகி மருந்து கடைகளிலும் உள்ளுர் பெட்டிக்கடைகளிலும் வாங்கி விழுங்கும் மாத்திரைகள்... கொண்டாடவோ, துக்கத்தை போக்கவோ என ஏதாவது காரணத்திற்காக குடிக்கும் மது, சிகரெட், ஆகியவை மிக முக்கிய காரணங்கள்.... கவனிக்காமல் விட்ட நாட்பட்ட உயர் இரத்த அழுத்தம், சர்க்கரைவியாதிகள்.. இப்படியாக பற்பல காரணங்களால் சிறுநீரகம் பழுதடைகிறது.
நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவுப் பொருட்களை, சிறுநீரனை வெளியேற்றும் தன்மை, மற்றும் உடலில் உள்ள கனிமப்பொருட்கள் சிறுநீரில் வெளியேறாமல் தடுத்து பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படியாக இழந்து, செயல் அற்ற தன்மை அடையும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மூட்டுவலி, தலைவலி, முதுகு வலிக்கு தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். சர்க்கரைநோய் மற்றும் உயர்இரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக தொடர்ந்து எடுத்துக்கொள்ளப்பட்ட முறையற்ற மருந்துகளினால் சிறுநீரகங்கள் செயலிழந்து, உடலில் திரவம் மற்றும் தேவையற்ற கழிவுகள் இரத்தத்தில் சேர்ந்து அசோடிமியா, மற்றும் யூரிமியா ஏற்படுகிறது. அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூரியா போன்ற நைட்ரஜன் பொருட்கள் அதிகரிப்பதாகும். யூரியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும். முக்கியமாக இரத்தஅழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை சரியாக கவனிக்காமல் விட்டு விடுவதால் சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
வருடக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல் முக்கிய காரணமாகும். கருத்தடை மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்பவர்களுக்கு சிறுநீரகங்கள் கண்டிப்பாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக முதுகு வலி அல்லது மூட்டுவலி என்று தவிப்பவர்கள் வலி நிவாரணிகளைச் சாப்பிட்டாலும் மாற்று மருத்துவர் துணையின்றி மற்றவர் கூறும் ஆலோசனைப்படி அதிக அளவில் உலோகங்கள் கலக்கக்ப்பட்ட தரமற்ற லேகியங்களை உட்கொண்டாலும் அதுவே சிறுநீரகத்தை பாதிக்கும். இணைப்பு திசுக்கள் நோய்களினாலும் எய்ட்ஸ் நோயினாலும் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். உடல் வலியை போக்க உதவும் மருந்துகள், காசநோய்க்கான பல்வேறு வகையான மருந்துகள் ஆகியவற்றினாலும் சிறுநீரக நோய்கள் உண்டாகி சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயலிழக்க நேரிடும்.
புகைபிடிக்கும் போது சிறுநீரகத்துக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்துவிடும்..தேவைக்கு குறைவான இரத்தம் சிறுநீரகத்துக்கு செல்வதால் சிறுநீரகத்தின் செயல் திறன் குறையும். சீரான இரத்த ஓட்டம் இல்லாததால் சிறுநீரகப்புற்றுநோய், சிறுநீரகப்பை புற்றுநோய், வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். புகை தான் சிறுநீரகம், சிறுநீரகப்பையின் முதல் எதிரி..
நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம், நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ, எடுக்கும் போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறும் பாதைகளில் படிந்து நாளடைவில் இவையே படிகங்களாக சிறுநீர் வெளியேறும் பாதைகளில் படிந்து பின் கற்களாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. பாரா தைராய்டு மிகுதி நோயும், சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள், சிறுநீரகநோய்கள் போன்ற நோய்களும் சிறுநீர்ப்பையில் கற்கள் ஏற்பட முக்கியமான காரணமாகும். சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம், சிஸ்டீன் போனடற வேதியல் பொருட்கள் மிகுதியாக வெளிவரும். இவைகளும் கிட்னியில் கல் உருவாக காரணமாகிறது-. இருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்றாலும் அதை நம் அக்குபஞ்சர் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்து திரும்ப வராமல் தடுக்கலாம்..
மேற்கண்ட அனைத்தும் சிறுநீரகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்படுவதற்கான காரணங்கள். இவற்றை நமது விழிப்புணர்ச்சியின் மூலமும், யோகா, தியானம் போன்றவற்றின் மூலமும் குணப்படுத்த முடியும். ஆனால் ஏதேனும் விபத்து ஏற்பட்டு அதிகப்படியான இரத்த இழப்பு ஏற்பட்டால் சிறுநீரகத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவு குறைந்து, சிறுநீரகங்கள் உடனடியாக செயலிழக்கும்.
சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்புண்டு.. சில வலிகளுக்கு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறு இல்லை என்றாலும் பக்கவிளைவுகள் கண்டிப்பாக உண்டு அத்துறை சார்ந்த மருத்துவர்களே ஏற்றுக்கொள்கின்றனர்.. எனவே கவனமுடன் இருந்து சிறுநீரக செயலிழப்பை தவிர்ப்போம்.