.

Tuesday, June 2, 2015

எந்த உணவுகளை அளவோடு சாப்பிடவேண்டும் தெரியுமா?



இன்றைய அவசர காலத்தில் எந்த ஒரு ஆரோக்கியமான உணவையும் தேர்ந்தெடுத்து சாப்பிடும் பொறுமை யாருக்கும் இல்லை. அதனால் நிறைய மக்கள் இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகின்றனர். அதிலும் அவ்வாறு ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உணவில் சேர்ப்பதால், இதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை போன்றவை ஏற்பட்டு, இதனால் உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கின்றன.

இவை அனைத்திற்கும் காரணம் நாம் உண்ணும் உணவில் சரியான கவனம் இல்லாததே ஆகும். மேலும் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் ஒரு சில உணவுகளை எந்த ஒரு கட்டுப்பாடுமின்றி வாங்கி சாப்பிட்டுவிடுகிறோம். அவ்வாறு கட்டுப்பாடு இல்லாததால், பலருக்கு திருமணத்திற்கு முன்னரே பல நோய்கள் வந்துவிடுகின்றன. அதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியாமல் மிகவும் அவஸ்தைப்படுகின்றனர்.

அதற்காக எந்த ஒரு உணவையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லவில்லை, உண்ணும் உணவில் கட்டுப்பாடு வேண்டும் என்று தான் சொல்றோம். அவ்வாறு கட்டுப்பாட்டுடன் இருந்தால், எந்த ஒரு நோயும் உடலை தாக்காது. அதிலும் நமது முன்னோர்கள் சொல்லும் ஒரு பழமொழியான "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்" என்று சரியாகத் தான் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே அளவோடு சாப்பிட்டால், வளமோடு வாழலாம். இப்போது எந்த உணவுகளில் கட்டுப்பாடு வேண்டும் என்று பார்ப்போமா!!!

காப்ஃபைன் 

நிறைய ஆய்வில் காப்ஃபைன் நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டால், உடலுக்கு கேடு விளையும் என்று சொல்கிறது. ஆனால் அந்த பொருட்களை குறைந்த அளவில் சாப்பிட்டால், எந்த ஒரு தீமையும் ஏற்படாது. அதுவே அதிகமானால், இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, தூக்கமின்மை ஏற்படும். அதிலும் இது ஒரு அடிமையாக்கும் பொருள் என்றும் சொல்லலாம்.

கோலா 

கார்போனேட்டட் பானமான கோலாவில் எந்த ஒரு ஊட்டச்சத்துக்களும் இல்லை. மேலும்அவற்றில் சர்க்கரை மற்றும் அடிமையாக்கும் பொருள் அதிகம் உள்ளது. இவற்றால் வயிற்றில் எரிச்சல் ஏற்படுவதோடு, எலும்புகளுக்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே இந்த வகையான கார்போனேடட் பானங்களை அளவாக பருகுவது நல்லது.

வெண்ணெய் 

வெண்ணெயில் அதிக அளவு கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆகவே இதனை ஒரு நாளைக்கு 1 டீஸ்பூன் மட்டும் உணவில் சேர்த்தால் போதுமானது.

பாஸ்ட் ஃபுட் 

பர்க்கர் பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கலோரிகள், கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை பாஸ்ட் ஃபுட் கடைகளில் சுவைக்காக அதிக ஆரோக்கியமற்ற பொருட்களை சேர்த்து தயாரித்து விற்பதை வாங்கி சாப்பிடுவதை விட, வீட்டிலேயே காய்கறிகளை பயன்படுத்தி, செய்து சாப்பிடலாம்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி 

இந்த மாதிரியான இறைச்சியில் நைட்ரேட்ஸ் அதிகம் உள்ளது. இது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பொருள். அதுமட்டுமல்லாமல் அதில் சாச்சுரேடட் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது. ஆகவே அத்தகைய இறைச்சியை அதிகம் வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.


சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் 

சுத்திகரிக்கப்பட்ட உணவுகளான சர்க்கரை மற்றும் மாவுப் பொருட்களில் மிகவும் குறைவான அளவிலேயே ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆகவே அவற்றில் ஒன்றான சர்க்கரையை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிப்பதோடு, பற்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும்.  

காய்கறி எண்ணெய் 

சமையலில் பயன்படுத்தும் காய்கறி எண்ணெயில் கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் விரைவில் எடை அதிகரித்துவிடும். அதுமட்டுமல்லாமல், அவற்றை உணவில் சேர்த்தால், இதய நோய், புற்றுநோய் போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதிலம் இந்த எண்ணெயை குழந்தைகளுக்கு உணவில் தினமும் 3-4 டீஸ்பூன் சேர்த்தால் போதுமானது.

வெள்ளை பிரட் 

மைதாவால் ஆன வெள்ளை பிரட்டில் மிகவும் குறைந்த அளவிலேயே ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதிலும் இதில் வைட்டமின்கள் 70% மற்றும் நார்ச்சத்து 80% குறைவாகவும் உள்ளது. ஆகவே இத்தகைய உணவுப் பொருளை தினமும் மற்றும் அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
Disqus Comments