ஒரு சமூகத்தின் முக்கியமான அங்கமாக இருந்து குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்ளும் ஆண்களின் ஆரோக்கியம் இன்றியமையாதது. ஆண்களும் பெண்களும் சரிசமமாக இருக்கும் இந்தக் காலத்தில். பெண்களின் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஆண்களின் ஆரோக்கியமும் முக்கியம்.
அதிகரித்து வரும் உடல் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் மனச்சோர்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆண்கள் 30 அல்லது 40 வயது வரை காத்திராமல், தங்கள் ஆரோக்கியத்தை இளம் வயதிலேயே பேணத் துவங்க வேண்டும்.
இங்கே ஆண்களுக்கு ஆரோக்கியம் ஊட்டும் இயற்கையான 20 வகை உணவுகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றைப் பின்பற்றி, உடலை ஆரோக்கியமாகவும், எளிதில் நோய் தாக்காதவாறும் பார்த்துக் கொள்ளுங்கள்.
மிதவெப்ப பழங்கள்
மிதவெப்ப பழங்களான மாம்பழம், பப்பாளி போன்ற பழங்களின் தோலில் பயோஃப்ளேவோனாய்டுகள் மற்றும் பல சத்துப்பொருட்கள் உள்ளன. ஆகவே ஆண்கள் வெயில் காலத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் இந்தப் பழங்களை தவறாது உட்கொள்வது அவசியம்.
சிகப்பு குடைமிளகாய்
ஆரஞ்சு பழச்சாற்றை விட மூன்று மடங்கு அதிகமான அளவில் வைட்டமின் சி சத்தானது சிகப்பு குடமிளகாயில் உள்ளது. அதிலும் குடைமிளகாயை பச்சையாக உட்கொள்வது உடலில் பயோஃப்ளேவோனாய்டுகளைச் சேர்க்கும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
பூண்டு
பலவகைகளில் மிகச்சிறந்த உணவாக பூண்டு கருதப்படுகிறது. பூண்டின் நோய்தடுப்பு குணத்தை அறிந்திருக்கும் நம் உணவு முறை, அதன் மருத்துவ குணங்களை அறிந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது சீரான இரத்த ஓட்டத்திற்கும் பூண்டு உதவுகிறது.
ப்ராக்கோலி
பூவைப் போன்ற தோற்றத்தில் சுவையின்றி இருக்கும் இந்த பச்சைக்காய்கறி பல சத்துக்களை உள்ளடக்கியது. இதில் உள்ள ஐசோதியோசைனேட்டுகள் ஈரலை ஊக்குவித்து என்ஜைம்கள் எனப்படும் நொதியூக்கிகள் சுரக்க வழி செய்து, புற்றுநோய் திசுக்களின் உருவாக்கத்தை தடுக்கிறது.
க்ரீன் டீ அல்லது கருப்பு டீ
பாலிஃபீனால்கள் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமுள்ள க்ரீன் டீ புற்றுநோய் செல்கள் பிரிவதை தடுக்கிறது. கருப்பு டீ எனப்படும் பால் கலக்காத டீயிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன. அதிலும் பாலிஃபீனால்கள் அதிகமுள்ள க்ரீன் டீ வயிறு, நுரையீரல், குடல், ஈரல் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுக்கிறது.
பால் மற்றும் பால் பொருட்கள்
சீஸ், தயிர், பால் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நலம். ஒரு பகுதி பாலில் 8 அவுன்ஸ் கார்னிடைன் உள்ளது. அதுமட்டுமல்லாது கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற சத்துகளும் உள்ளன.
அவகேடோ பழம்
நிரம்பாத கொழுப்புச் சத்துக்கள் அதிகம் உள்ள அவகேடோ பழம் இதயத்திற்கும், இரத்த நாளங்களுக்கும் வலு சேர்க்கிறது. அதில் உள்ள நார்ச்சத்து செரிமான பாதையை சீர் செய்கிறது.
மாட்டுக்கறி
கார்னிடைன் அதிகமுள்ள மாட்டுக்கறியில் அமினோ அமிலம், புரதம், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.
தக்காளி
செடிகளில் உள்ள லைகோபைன் எனப்படும் இயற்கையான வேதியியல் பொருள் தக்காளியில் அதிகம் உள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான இது விரை, நுரையீரல், வயிற்று புற்றுநோயை தடுக்கிறது.
ரெட் ஒயின்
ஆல்கஹால் இல்லாத ரெட் ஒயினிலும் பல வகையான புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கும் பாலிஃபீனால்கள் உள்ளது. இது நோய் உண்டாக்கும் முடிவுறா மூலக்கூறுகளில் இருந்து காக்கிறது.
மாதுளை பழச்சாறு
விரை புற்றுநோய்க்கு இது மருந்தில்லை என்றாலும் புற்றுநோயின் பரவலை தடுக்க உதவுகிறது. அதிலும் தினமும் 8 அவுன்ஸ் மாதுளை சாறு குடித்தால், விரையின் ஸ்திரத்தன்மை மேம்படும்.
முழு தானியங்கள்
நம் உணவில் பெரும்பங்கு வகிக்கும் முழு தானியங்களில் ஜிங்க் சத்து நிறைய இருக்கிறது. ஆண்களின் ஆண்தன்மையை மேம்படுத்த உதவும் துத்தநாகம் உடலில் குறைந்தால், மலட்டுத்தன்மை ஏற்படும். எனவே இதனை அதிகம் உணவில் சேர்ப்பது இன்றியமையாதது.
வேர்க்கடலை
வேர்க்கடலையில் துத்தநாகச் சத்து அதிகம் இருப்பதோடு, உடலுக்கு வேண்டிய அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், இதனை ஆண்கள் அதிகம் உட்கொண்டால், சரும வறட்சி, மலட்டுத்தன்மை, மூளை திசுக்கள் குறைபாடு ஆகியவற்றை தடுக்கலாம்.
மீன்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள மீன் உணவானது புரதத்திலும் சிறந்து விளங்குகிறது. அதிலும் மீனில் உள்ள புரதச்சத்து, HDL எனப்படும் இதய நோய்களை தவிர்க்கும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.
கேழ்வரகு
கேழ்வரகில் கால்சியம் மிக அதிகமாக உள்ளது. அதாவது 300 கிராம் கேழ்வரகில் 100 கிராம் கால்சியம் உள்ளது. மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு நோய் வருவதை கேழ்வரகு தடுக்கிறது. அதுமட்டுமின்றி இதில் உள்ள துத்தநாகம் மற்றும் நார்ச்சத்து, டிஸ்லிபிடிமியா, நீரிழிவு மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றை தடுக்கிறது.
சியா விதைகள்
(Chia seeds) கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவான சியா, உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. அதே நேரம் இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம், திசுக்கள் குறைபாட்டை தவிர்த்து அல்சைமர், டிமென்ஷியா போன்ற நோய்களில் இருந்து காக்கிறது.
சோயா
சோயாவில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் விரைப்பை புற்றுநோயை தடுக்கிறது. தினமும் 25 கிராம் சோயா சாப்பிடுவதன் மூலம் உடல் கொழுப்பை பெருமளவு குறைக்கலாம்.
பூசணி விதைகள்
மொறுமொறுப்பான பூசணி விதைகளில் கலோரி அதிகமுள்ளது. 100 கிராம் பூசணி விதையில் 559 கலொரிகள் உள்ளன. மேலும் நார்ச்சத்து, தாதுக்களும், பலவகையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன.
இளநீர்
வெளியே கடினமாகவும், உள்ளே மிருதுவாகவும் உள்ள இளநீர், உடலின் மின்பகுளி அளவை சீராக வைக்கிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றில் இருந்து காக்கிறது. மேலும் வயிற்றுப் போக்கின் மூலம் ஏற்படும் நீர் குறைபாடு ஆகியவற்றில் இருந்தும் காக்கிறது. அதுமட்டுமல்லாது மக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீஸ், வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் நிரம்பி உள்ளன. கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் நீர் குறைபாட்டில் இருந்து பாதுகாக்கிறது.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் நுண்ணியிர்கள் வளர்வதை தடுக்கின்றன. டைப்-2 நீரிழிவு நோயை தடுக்கவும் லவங்கப்பட்டை பயன்படுகிறது.