.

Tuesday, May 19, 2015

உணவுப் பழக்கமும் மலச் சிக்கலும் எப்படி மூல நோயை உருவாக்கும்?உணவின் மூலம் வரலாம் 'மூலம்'!
ஓரு இடத்தில் உட்கார முடியாது. நெளிவதும் சங்கடப்படுவதுமாக நிமிடங்கள் நகரும். யாரிடமும் சொல்லவும் முடியாது. கழிப்பறை போகத் தோன்றும். மொத்தத்தில் மூலப் பிரச்னையில் தவிப்பது, முள்ளின் மீது அமர்ந்திருப்பதற்குச் சமமானது. மூல நோய்க்கு என்ன காரணம்? எப்படித் தவிர்க்கலாம்? என்பது பற்றி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி. நாகராஜன் சொல்கிறார்.

''மூல நோய் என்றால் என்ன?''

''மூல நோயின் மருத்துவப் பெயர் ஹெமராய்ட்ஸ்(Haemorrhoids). முறையான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்காமல் போவதும், மலச் சிக்கல் பிரச்னை பெரிய அளவில் தொடர்வதுமே மூல நோய்க்கு முக்கியக் காரணம்.''

''உணவுப் பழக்கமும் மலச் சிக்கலும் எப்படி மூல நோயை உருவாக்கும்?''

''நம்முடைய உணவு சரிவிகிதச் சமச்சீர் உணவாக இருப்பது உடல் வலுவோடு இருக்க மட்டும் அல்ல; அதன் சீரான இயக்கத்துக்கும் முக்கியம். குறிப்பாக, நீர்ச் சத்தும் நார்ச் சத்தும் உள்ள உணவை எடுத்துக்கொள்ளாவிட்டால், மலம் வெளியேறுவது சிக்கல் ஆகும். உடலில் சூடு அதிகரிக்கும். செரிமானம் கோளாறாகும். மலம் கெட்டிப்பட ஆரம்பிக்கும்.

நம்முடைய ஆசன வாயைச் சுற்றிலும் நிறைய ரத்தக் குழாய்கள் இருக்கும். இவை இயல்பாக இருக்கும்போது பிரச்னை எதுவும் இல்லை. அதாவது தினமும் உடற்கழிவுப் பொருட்கள் மலக்குடலை வந்து அடையும்போது, அவை சற்றே நெகிழ்வாக நீர்ப்பதத்துடன் இருக்கும். குறிப்பிட்ட நேரத்துக்குள் மலம் வெளியேறிவிட்டால் பிரச்னை இல்லை.

அவ்வாறு வெளியேறாமல், மலச் சிக்கல் ஏற்பட்டால்,  அதில் உள்ள நீர் காய்ந்துவிடும். இதனால், மலம் இறுகிக் கெட்டியாகிவிடும். அதன் பின் அதை வெளியேற்ற மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும். இப்படிக் கூடுதல் அழுத்தம் கொடுத்து, முக்கி மலத்தை வெளியேற்றும்போது மலத் துவாரம் இயற்கையாக ஏற்படுகின்ற வழவழப்புத் தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து அந்த இடத்தில் இருக்கும் ரத்தக் குழாய்கள் சேதமாகிப் புடைக்க ஆரம்பிக்கும். மிகவும் சிரமப்பட்டு மலம் கழிக்கும்போது குழாய்களில் ரத்தக் கசிவு ஏற்படும். இதன் விளைவே மூலநோய்.

''மூல நோயில் நிலைகள் உண்டா?''

''நான்கு நிலைகள் இருக்கின்றன. முதல் இரு நிலைகளில், முதலில் ரத்தம் வடிய ஆரம்பிக்கும், பெரிதாக வலி இருக்காது. அதன் பின் கொஞ்சம் வெளியே புடைக்கும். ரத்தம் வடிவதுடன் வலியும் சேர்ந்துகொள்ளும். அடுத்த இரு நிலைகளில், மலப் பாதையின் கடைசிப் பகுதி வெளியே வந்து துருத்திக்கொண்டு இருக்கும். தொடர் வலி, ரத்தம் கசிதல், அரிப்பு, எரிச்சல் என்று வாட்டி எடுத்துவிடும்.''

''மூலம் எதனால் வருகிறது?''

''தவறான அல்லது உடலுக்கு ஒவ்வாத உணவுப் பழக்கம். தொடர்ந்து நார்ச் சத்து குறைவான உணவுகளை உட்கொள்வதாலும், அடிக்கடி ஃபாஸ்ட் புட் உணவு வகைகளை உட்கொள்வதாலும், தண்ணீர் குடிக்காமல் இருப்பதாலும், மாமிச உணவுகளை அதிகமாக உட்கொள்வதாலும் வரலாம். அடுத்து, அதீத சூடு. நேரம் தவறிய தூக்கம். கடுமையான வேலை. ஒரே இடத்தில் ஆணி அடித்ததுபோல் உட்கார்ந்து வேலை பார்ப்பது. மலம் வரும்போது, வேலைநிமித்தம் தள்ளிப்போடுவது. இப்படி பல காரணங்களால் வரலாம்.''

''இந்த நோய் யாருக்கு வரக்கூடும்?''

''எந்த வயதிலும் யாருக்கும் வரலாம்.''

''இதற்கு என்ன சிகிச்சை?''

''ஒரு நாளைக்கு ஏழு மணி நேர ஆழ்ந்த தூக்கம், இரு முறை குளியல், நேரத்துக்கு அதிகக் காரம் இல்லாத சாப்பாடு. வாழைப் பழம், கீரை, மோர் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இப்படி ஓர் ஒழுங்கைத் தவறாமல் கடைப்பிடித்தாலே மூலத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மலச் சிக்கல் பிரச்னை இல்லாமல் இருப்பது ஒரு நல்ல அறிகுறி.

மருத்துவச் சிகிச்சை என்பது ரத்தக் குழாய்கள் சுருங்குவதற்கும், அந்தப் பகுதியில் வழுவழுப்புத் தன்மையை அதிகரிப்பதற்கும், வலுவிழந்திருக்கும் ரத்தக் குழாய்களுக்கு வலிமையைக் கூட்டவும் அளிக்கப்படும்.

வேறு வழியே இல்லாவிடில், வெளிமூலத்துக்கு லேசர் சிகிச்சை மூலம் அந்த இடத்தைச் சுருக்கிவிடலாம். இது எளிமையானது. ஒரே நாளில் சகஜ நிலைக்குத் திரும்பி வேலைக்குப் போகலாம். ஆனால், செலவு அதிகம். இது முடியாத சூழலில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டி இருக்கும். ஆனால், அறுவைசிகிச்சை செய்துகொண்டாலும்கூட உணவுக் கட்டுப்பாடு முக்கியம். இல்லை என்றால், மீண்டும் மூலப் பிரச்னை சில வருடங்கள் கழித்து எட்டிப் பார்க்கலாம்!''
Disqus Comments