.

Monday, May 18, 2015

கர்ப்பப்பை பலமாக. சில உணவுகள்

கர்ப்பப்பை





அக்காலத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் கர்ப்பப்பை பலம் பெறுவதற்காக உழுத்தங்களி கொடுப்பது வழக்கமாக இருந்தது. அது மட்டுமின்றி வயது வந்த உடனேயே முட்டையையும், நல்லெண்ணெயையும் தினமும் வெறும் வயிற்றில் குடிக்கச் செய்வர். இந்தக் களியில் வெல்லம், உளுந்து, நல்லெண்ணெய் சேருவதால் இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து தாதுக்கள் என்று எல்லாம் கிடைத்து கர்ப்பப் பை பலமாக அமையும்.

இதை எப்படி செய்வது? (உழுத்தங்களி)

அரை கப் உழுந்தை வாணலியில் வறுத்து அதோடு அரை கப் அரிசி சேர்த்து மாவாகத் திரித்து சலித்துக்கொள்ளவும். 2 கப் உடைத்த கருப்பட்டி வெல்லத்தோடு தண்ணீர் 2 கப் விட்டு சூடாக்கவும், வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அழுக்கு, மண்நீக்கி, வாணலியைக் கழுவி மறுபடியும் அதிலேயே வெல்லக் கரைசலை ஊற்றவும். அதோடு 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும். கரைசல் கொதிக்கும்போது மாவை மத்தியில் கொட்டிக் கிளறி, ஒரு கரண்டியை அதில் குத்தி மூடி வைக்கவும். குறைந்த தணலில் 7_லிருந்து 10_நிமிடங்கள் வரை வேக விடவும்.

பிறகு அடுப்பிலிருந்து இறக்கி நன்றாகக் கிளறிவிடவும் சிறிது ஆறியதும் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கலந்து உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்கவும்.

சூப் குடியுங்கள் 

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு கப் சூப் பகலிலும், இரவிலும் குடித்தால் மலச்சிக்கல் இல்லாமல், அஜீரணம் இல்லாமல் உண்ட உணவு நன்கு செரித்து ஆரோக்கியமாக இருக்க இயலும்.

பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு சாலட் அல்லது தயிர்ப் பச்சடி சேர்த்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் 11 மணிக்கு உண்ணலாம்.

காய்கறிகள், பழங்கள் விதவிதமாக உண்ணவும். உதாரணத்திற்கு காலை டிபனுடன் 2 துண்டு கொய்யா, ஓர் ஆரஞ்சு சாத்துக்குடி உண்ணலாம். மதிய உணவுடன் வாழைப்பழம், மாலையில் ஆப்பிள்... காய்கறிகளைப் பொரியலாகச் செய்யும்போது ஒரே வகை காய்க்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று வகை காய்களைச் சேர்த்துச் செய்யலாம். முடிந்தவரை 3 வகை பழங்கள், 4 வகை காய்கறிகள், தினமொரு கீரை என்று கிடைக்குமாறு உணவில் மாற்றங்கள் செய்யவும்.

பால், தயிர் குறிப்பிட்டபடி அளவு தவறாமல் உண்ணவும்.
பாதாம், கிஸ்மிஸ், பேரீச்சை போன்றவை உங்கள் பட்ஜெட்டில் முடியுமானால் சேர்க்கலாம். ஆனால் கீரை சேர்த்துக் கொண்டாலே இரும்புச்சத்து கிடைத்துவிடும்.

அடை சாப்பிடுங்கள்

முழு தானியங்கள், பயறு, பருப்பு வகைகள் கலந்த டிபனாகத் தயாரிக்கலாம். அடை, தோசை, விதவிதமான இட்லியுடன் பலவகை சட்னி, சாம்பார் போன்றவை.

சோயாவில் முழுப் புரதம் உள்ளதால் தங்களுக்குப் பிடித்தமானபடி சிறிதளவு ஏதாவது ஒரு உணவுடன் சேர்க்கவும். (சைவமாக உள்ளவர்கள் முக்கியமாக இதைக் கடைப்பிடிக்கவும்)

உப்பு, ஊறுகாய், காரத்தைக் குறைக்கவும். ஃப்ரஷ் பழங்கள், காய்கறி ஜுஸ் சாப்பிடலாம்.

ஓரளவு நன்றாகக் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யவும். நன்றாக நடக்கவும். இதனால் பலவித பிரச்னைகளைத் தவிர்க்க இயலும்.

வீண் வாக்குவாதங்கள், விவாதங்கள் தவிர்த்து நேரம் கிடக்கும்போது நல்ல பாட்டுக்கள், ஸ்லோகங்கள் கேட்கலாம். மனது நிம்மதியுடன் இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

இனி கர்ப்பிணிகளுக்கான ஒரு சில சத்தான, ருசியான உணவு வகைகள்:

தோடம்பழ சர்பத்

கமலாப்பழம் என்னும் தோடம்பழத்தின் சாறு அரை லிட்டருக்கு சீனி ஒரு கிலோ போட்டு பாகுபதத்தில் காய்ச்சி, இறக்கும்போது சிறிது குங்குமப் பூ சேர்த்து கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு சாப்பிடலாம். உஷ்ணத்தினால் உண்டான பேதி, அதிகமான பித்தம், கிறுகிறுப்பு, சுவையின்மை இவை நீங்கும். அதிலும் கருவுற்ற முதல் மூன்று மாதங்களுக்கு இது மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்று.

பூசணிக்காய் சர்பத்

வெள்ளைப் பூசணிக்காயைத் தோல், விதை நீக்கி பிசைந்து மெல்லிய துணி அல்லது மாவுச் சல்லடையில் வடிகட்டி எடுத்து ஒரு லிட்டர். 50 கிராம் இஞ்சியைத் தோல் சீவி இடித்துப் பிழிந்து சாறெடுத்துச் சிறிது நேரம் வைத்திருந்து, அடியில் தங்கியுள்ள வெண்மை நிறமான சத்தை நீக்கிவிட்டு மேலாக எடுத்து பூசணி சாறுடன் கலந்து அதை அரை லிட்டராகக் காய்ச்சி மேலாக ஒரு கிலோ சீனி சேர்த்துத் தேன் போல வரும்போது இறக்கி தினமும் இருவேளை 2 டீஸ்பூன், அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, கர்ப்பிணிப் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், கருப்பைக் கோளாறுகள், கைகால் எரிச்சல், நீர்ச்சுருக்கு குணமாகும்.

முருங்கைக்காய் சூப்

தேவையான பொருட்கள்: முருங்கைக்காய்_3, வெங்காயம்_1, தக்காளி_1, பயத்தம் பருப்பு_லு டேபிள் ஸ்பூன், பூண்டு_1 பல், மிளகு, சீரகப் பொடி_சிறிதளவு, பால்_அரை கப், மக்காச் சோளமாவு _1 டேபிள் ஸ்பூன், உப்பு_தேவையான அளவு, சர்க்கரை சிறிதளவு.

செய்முறை:

முருங்கைக்காய்களைப் பெரிய துண்டங்களாக அரிந்து பிரஷர்குக்கரில் ஆவியில் வேக வைக்கவும். வெந்தபின் அதில் உள்ள சதைப் பற்றை வழித்து எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, இரண்டையும் மிகப் பொடியாக அரியவும், பயத்தம் பருப்பில் தண்ணீர் ஊற்றி, பூண்டு, அரிந்த வெங்காயம், தக்காளி சேர்க்கவும். கரகரப்பாகப் பொடித்த மிளகு, சீரகப் பொடியை ஒரு சிறு துணியில் மூட்டை போல கட்டி பருப்பினுள் போட்டு குக்கரில் வேகவைக்கவும்.

வெந்தபின் துணிமூட்டையை எடுத்து எறிந்துவிட்டு, பருப்பு ஆறியபின் முருங்கைக்காய் விழுதுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்தபின் வடிகட்டி தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும். அரை கப் பாலுடன் 1 டேபிள் ஸ்பூன் மக்காச் சோள மாவைக் கரைத்து அதையும் சூப்புடன் சேர்த்து ருசிக்கேற்ப உப்பு, சிறிது சர்க்கரை சேர்த்து சூடாக்கவும். (கொதிக்கவிடக்கூடாது) கலந்துவிட்டுக் கொண்டே சூப் நன்கு சூடானதும் சூப் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறலாம்)

பாலக் சூப்

(டெல்லி பாலக் கிடைத்தால் அதிக ருசி. இதன் நுனி கூர்மையாக இல்லாமல் அரை வட்ட வடிவில் அமைந்திருக்கும்)

இரண்டு கட்டு பாலக் கீரையை ஆய்ந்து, கழுவிக் கொள்ளவும். ஒரு வெங்காயத்தைப் பொடியாக அரியவும். பிரஷர் பானில் _ ஒரு டீஸ்பூன் வெண்ணெய் விட்டுச் சூடாக்கி, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதங்கியதும் கீரையைச் சேர்க்கவும். (அரிய வேண்டாம்) கீரை சுருங்கியதும் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு முழு பச்சை மிளகாய், கால் அங்குலத் துண்டு இஞ்சி சேர்த்து மூடி, வெயிட் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஆறிய பின் மூடியைத் திறந்து மிளகாய், இஞ்சித் துண்டு இரண்டையும் எடுத்து விடவும். (நெடி அதிகமாக இருந்தால் சூப் நன்றாக இருக்காது) கீரையை வேகவைத்த தண்ணீரோடு அப்படியே மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி தகுந்த உப்பு சேர்க்கவும். ஒருதம்ளர் பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் மக்காச்சோள மாவைக் கரைத்து சூப்பில் ஊற்றி நன்றாகச் சூடாக்கவும். கொதிக்க விடக்கூடாது. சுடச்சுட கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள் மேலே சிறிது கடைந்த பாலேடு (ஃப்ரெஷ் க்ரீம்) மற்றும் துருவிய சீஸ் சேர்க்கலாம்.
Disqus Comments