.

Tuesday, April 21, 2015

நமக்கு போதுமான அளவு தூக்கம் இல்லை என்றால் என்ன நடக்கும்?

நமக்கு போதுமான அளவு தூக்கம் இல்லை


நமக்கு போதுமான அளவு தூக்கம் இல்லை என்றால் தேவை இல்லாமல் கோபம் வரும். எதிர்ப்படுபவர்களிடம் எல்லாம் எரிந்து விழுவோம்.

கண்களில் கருவளையம் விழும். உடல் பலவீனம் அடைவதோடு பைத்தியம் பிடித்தது மாதிரி இருக்கும். மொத்தத்தில் தூக்கம் இல்லாவிட்டால் ஊக்கம் குறைந்துடும்.


உறக்கத்தின் அவசியம் குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும்  (மார்ச் 15ம் திகதி) உலக உறக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த வேளையில் உங்கள் கண்களிலும் ஆரோக்கியமான உறக்கம் தழுவ இதோ சில குறிப்பு

* இரவில் தூங்குவதும், காலையில் விழித்து எழுவதும் தினமும் ஒரே நேரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது

* தூக்கத்தில் குறட்டைவிடுவது 'ஸ்லீப் ஆப்னியா’(Sleep apnea) என்ற நோயின் அறிகுறி. இதனைக் குணப்படுத்தவும் சிகிச்சை முறைகள் உள்ளன.

* தூக்கமின்மையால் ரத்தக்கொதிப்பு (Blood Pressure), சர்க்கரை நோய் (Sugar), மாரடைப்பு (Heart Attack) போன்ற பல்வேறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

* சீக்கிரமே தூங்கி, சீக்கிரமே எழுந்துவிடும் பழக்கம் உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். ஒரு வாரம் இந்தப் பயிற்சியைக் கடைப்பிடித்தால் போதும். பின்னர் அதுவே வழக்கமாகிவிடும்.

* தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே இரவு உணவை முடித்துக்கொண்டால் நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

* காபி, டீ போன்ற பானங்கள் விழிப்பு நிலையைத் தூண்டி தூக்கத்தைத் துரத்தியடிக்கும். எனவே மாலை 4 மணிக்குப் பின்பு இதுபோன்ற பானங்களை அருந்த வேண்டாம்.

* மது குடித்து உடனே தூங்கச் செல்வோருக்கு அரைத்தூக்கமும், அதிகாலைத் தலைவலியும் நிச்சயம்

* காலை அல்லது மாலை நேரங்களில் தினமும் உடற்பயிற்சி செய்வது இரவில் நிம்மதியாகத் தூங்க உதவி புரியும். இசை, தியானம், புத்தகங்கள் படித்தல், ஓவியம் வரைதல்... என்று மனதை ரிலாக்ஸ் செய்யும் நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டால் இரவில் அனாவசியமான சிந்தனை ஓட்டங்கள் குறைந்து நல்ல தூக்கம் கிடைக்கும்.

* இரவு வேளைகளில், தொலைக்காட்சி, கணனி போன்ற சாதனங்களில் இருந்து வெளிவரும் பிரகாசமான வெளிச்சம் தூக்கத்தைத் தடை செய்யும். விளக்குகளை அணைத்துவிட்டு கணனியில் வேலை செய்வது கண்களுக்கும் தூக்கத்துக்கும் பாதகமான விடயம்.

* சாக்லெட் மற்றும் குளிர்பானங்களில் விழிப்பைத் தூண்டுகிற 'காஃபின்’ இருக்கிறது. எனவே, தூங்குவதற்கு முன்பு இவற்றைச் சாப்பிட வேண்டாம்.

* இரவில் தூங்குவதற்கு முன்பாக தண்ணீர் அருந்தினால், நள்ளிரவில் அடிக்கடி டாய்லெட் போக வேண்டிய உந்துதல் ஏற்படும். இதனால், ஆழ்ந்த தூக்கம் தடைப்படும். எனவே, தூங்கச் செல்லும் முன் டாய்லெட் சென்றுவிட வேண்டும். இன்சோம்னியா பிரச்னை இருப்பவர்கள் தூங்குவதற்கு முன்பு அதிகமாகத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

* தூக்கத்தில் பிரச்னை உள்ளவர்கள், பகலில் குட்டித் தூக்கம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

* நடைப்பயிற்சி நல்லதுதான். ஆனால், இரவு வேளையில் வீட்டுக்கு வெளியே சென்று நடைப்பயிற்சி செய்தீர்கள் என்றால் தூக்கத்துக்குப் பதிலாக விழிப்பு நிலை தொடர்வதற்கு வாய்ப்பு உண்டு. எனவே தூக்கம் வராமல் தவிக்கக் கூடும்.

*'குளித்துவிட்டுத் தூங்கினால் நிம்மதியான தூக்கம் வரும் என்பார்கள் சிலர். குளித்துவிட்டு உடனே தூங்கப் போனால் தூக்கம் வராது. தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே குளிப்பதுதான் நல்லது.

* தூக்கம் வராமல், தவிப்பவர்கள் படுக்கையைக் கண்டாலே பதற்றம் ஆவார்கள். இவர்கள், தூக்கம் வருவதாக உணர்ந்தால் மட்டுமே படுக்கையில் சாய்கிற பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. இது படுக்கை மீதான பதற்றத்தைக் குறைக்கும்.

Disqus Comments