வாழைப்பழம் சுவையானது. முக்கனிகளில் ஒன்று. எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். உலக மக்களினால் அதிகமாக உண்ணப்படும் பழங்களில் இது ஒன்று. இதிலே 300க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.‘தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்’ என்ற புதிய தாரக மந்திரம் இப்போது உருவாகியுள்ளது.
வாழைப்பழம் உண்மையில் மிகச் சிறந்த தாவர இனத்தைச் சேர்ந்ததாகும். சரிநுட்பமான, முழு நிறைவான உணவுமாகும் இது. புரதத்துடன் மாவுச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள் முதலியன போதுமான அளவு இப்பழத்தில் உள்ளன.
நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டவுடன் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அடுத்த 15 நிமிடங்களுக்குள் ஜிவ்வென்று (35%) அதிகரிப்பதால் உடலும் மனமும் சுறுசுறுப்பாகி விடுகின்றன. மற்ற உணவு என்றால் இன்னும் அதிக நேரம் ஆகும். இந்தச் சக்தி அடுத்த 40 நிமிடங்கள் வரை உடலில் இருக்கும்
சத்துக்கள்:
பொட்டாசியம் 400 மில்லி கிராம், Folocin 20 மைக்ரோ கிராம், விட்டமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி 6-.6 மில்லி கிராம்.இன்று, விஞ்ஞானிகளும், சத்துணவு நிபுணர்களும், உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம்தான் என்கிறார்கள்.
நரம்புகள் தளராமல் இளமை நீடிக்க கால்சியம், இரத்த சோகையைத் தடுக்கும் இரும்புச்சத்து, இதயம் சீராய்ச் சுருங்கி விரிவடைய மக்னீஷியம், பாக்டீரியாக்களை அழிக்கும் ஹைடிரோ அமிலம், சோடியம் உப்பு, இரத்தத்தைத் திரவ நிலையில் இருக்க உதவும் பொட்டாசியம், மூளை வளர்ச்சிக்கும், பார்வைத் திறனுக்கும் பாஸ்பரஸ், A, B, C என மூன்று வைட்டமின்களும் வாழைப்பழத்தில் உள்ளன.
மருத்துவக் குணங்கள்:
விளையாட்டு வீரர்களின் கடைசி நேர மனநிலையை வெற்றியா, தோல்வியா என நிர்ணயிப்பது, அதன்படி முழு வேகத்துடன் செயல்படுவது என அனைத்தையும் நிர்ணயிப்பது அவர்களின் உடலில் உள்ள பொட்டாசியம்தான்.
பொட்டாசியம் அறிவு குறையாமல் இருந்தால் நான்காவதாக ஓடி வரும் வீரர் அந்தக் கடைசி நொடியில் முடிவு எடுத்து முதல் ஆளாக ஓடி வந்து வெற்றி பெற்று விடுவாராம்.
விளையாட்டு வீரர்களுக்கும், தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற உறுதியானவர்களுக்கும் முழுமையான சக்தி நிரப்பப்பட்டுள்ள பழம் வாழைப்பழம்தான் என்கிறார் பிரிட்டிஷ் சத்துணவு நிபுணர் ஜேன்கிரிஃப்பின்.
நெஞ்செரிப்பு நோய் உள்ளவர்கள், வாழைப் பழம் சாப்பிடலாம். வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் விரைவில் குணமாகிவிடும்.
கர்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.
மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.
இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.
குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள். இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது.
கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம். பொட்டாசியம் இருந்தாலும் உப்புச் சத்து குறைவாக இருப்பதால் இது இரத்த அழுத்தத்தைச் சீர்செய்யவும், மூளை விழிப்புடன் இருந்து சிந்தனைத் திறனை மேம்படுத்தவும், சிகரெட் கைவிட்டவர்கள் நிக்கோட்டின் ஆதிக்கத்திலிருந்து விரைவில் விடுபடவும் உதவுகிறது.
வாழைப்பூ, தண்டு இரண்டும் கணையத்திலும் சிறுநீரகத்திலும் கற்கள் வராமல் பாதுகாக்கும். வைட்டமின் B அதிகம் இருப்பதால் நரம்பு மண்டலத்தைச் சீராக வைத்திடவும் வாழைப்பழம் உதவுகிறது.
வேலையில் உண்டாகும் அழுத்தத்தினால் சிலர் அதிகமாக சாக்லேட்டுகளை உட்கொள்ள எத்தனிப்பர். இவர்கள் வாழைப்பழத்தை சிற்றுண்டி போல உட்கொண்டால் உடல் எடை அதிகரிப்பிலிருந்தும், குடற்புண் ஏற்படுவதிலிருந்தும் தப்பலாம்.
கொசு கடித்த இடத்தில் வாழைப்பழத் தோலின் உள்பகுதி கொண்டு தேய்த்தால் அரிப்பும் தடிப்பும் போகும்.
உடற்பருமனாக இருப்பவர்களும், மெலிந்த தேகம் கொண்டவர்களுக்கும் வாழைப் பழம் பயன்தரும். அதாவது உடற் பருமனாக இருப்பவர்கள் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு நிலையான தன்மைக்கு கொண்டு வருவதால் உடற்பருமன் குறைவதாக அந்த மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், ஒல்லியான தேகம் கொண்டவர்கள் தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும் என்றும் அறியப்படுகிறது.
அல்சர் எனப்படும் குடற்புண் ஏற்பட்டவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.
. உடலின் தட்பவெப்பநிலையை சீராக வைப்பதிலும் வாழைப்பழம் அதிகம் உதவுகிறது. வெப்பமான பகுதியில் வேலை செய்பவர்களும், உடல் சூடு கொண்டவர்களும் வாழைப் பழம் சாப்பிடலாம். வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் என்ற பெயரும் உண்டு.
ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்த நோய் தாக்கியவர்களுக்கு வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் விரைவில் நீங்கும் என்பது தெளிவாகிறது.
காலையில் சிலரால் எழுந்திரிக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இதனை காலை தூக்க நோய் என்று குறிப்பிடுவோம். இதற்கு அவர்கள் ஒவ்வொரு உணவு இடைவேளைக்கு ஒரு முறை வாழைப் பழத்தை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும், எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ-யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.
மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம்.
எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.
திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும்.
ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் ஏ(A) உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் ஏ(A) உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.
வாழை வெப்ப சீதோஷ்ண பகுதியில் தான் அதிகமாக விளையும். குளிர்பிரதேசத்தில் வராது. இதனால்தான் இந்தியாவில் அதிகமாக விளைகிறது. அதுவும் தென்னிந்தியர்களின் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வாழை இல்லாமல் எந்த சுப, அசுப காரியங்களும் இடம்பெறுவதில்லை.எது எப்படியோ வாழைப்பழம் ஓர் இன்றியமையாத உணவுப்பொருள் என்பதை எவரும் மறுக்க இயலாது.
எனவேதான் அந்த காலத்திலேயே, வெற்றிலையுடனும், சாமிக்குப் படைக்கவும், தாம்பூலம் வைத்துக் கொடுக்கவும் இவ்வளவு சிறப்பு வாய்ந்த வாழைப் பழத்தை பயன்படுத்தியுள்ளனர். எனவே இந்த பழத்தை சாப்பிடும்போது பலருக்கும் நல்ல பயன் கிடைக்கும் என்ற சிந்தனையோடு வாழையின் பயன்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளனர்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வாழைப்பழத்தை ஒதுக்கி வைக்க வேண்டும்.