“எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம் கட்டுத்தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகுமே விடாவிடில் நான் தேரனும் அல்லவே " என்பது சித்தர் பாடல். இதுபோல பைபிளின் பழைய ஏற்பாடு நூலில் சீரகத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. எகிப்து நாட்டில் பழங்காலம் தொட்டு மணத்திற்காகவும், மருந்திற்காகவும் சீரகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்திய, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் சமையலில் சீரகம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இதன் மருத்துவகுணம் தெரியாமலேயே ஏராளமானோர் சீரகத்தை பயன்படுத்தி வருகின்றனர். உடலின் உள் உறுப்புகளை முக்கியமாக வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் சீரகம் பெரும் பங்காற்றுகிறது. இதனாலேயே இது சீர்+அகம்=சீரகம் என்று பெயர் பெற்றுள்ளது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்ட சீரகம், இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக சமையலில் சேர்க்கப்படுகிறது.
வேதிப்பொருட்கள்
சீரகத்தில் 2.5 சதவிகிதம் எளிதில் ஆவியாகும் எண்ணெய் பொருள் காணப்படுகிறது. இதிலிருந்து ஆல்டிஹைடுகள், பைனினி, ஆல்பா டெர்பினியோல், குயிமினின் போன்ற பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
மருத்துவ பயன்கள்
சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
உடல் உள் உறுப்புகள் சீராக இயங்க:
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. நாட்பட்ட கழிச்சல் தீர மற்ற மருந்துகளுடன் சேர்த்து கொடுக்க நல்ல பலன் தரும். இரத்தத்தைச் சுத்தமாக்குகிறது, தோல் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது, சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடி செய்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும். தொண்டை கம்மல் மற்றும் மண்ணீரல் வீக்கத்தை குறைக்கும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
பெண்களுக்கு ஏற்ற மருந்து
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும். தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்" தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டு ளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரக நீரை சேர்த்துக் கொடுக்கலாம். தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச்செய்யும்.
ரத்த அழுத்த நோய் குணமாகும்
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும். சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சிறிதளவு சீரகத்துடன் திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும். வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம்+சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.