.

Saturday, December 27, 2014

நெஞ்சு கரித்தல் மருந்துகள் antacids பற்றி தெரிந்துகொள்ளுங்கள்ஒரு காலத்தில் விருந்துகளில் வயிறு புடைக்க உண்ட உணவு ஜீரணிக்க வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு என தாம்பூலம் தந்து உபசரித்தார்கள். இன்று ராஜஸ்தானி ஜிப்பாவுடன் தலையில் டர்பன் கட்டியவர் திருமண வீடுகளில் கடைசி உபசரிப்பாளனாக பீடா தருகிறார். அதோடு, தொலைக்காட்சி விளம்பரம் பார்த்துவிட்டு Pifizer கம்பெனியின் Gelusil MPS, Abbolt கம்பெனியின் Digene, GSK கம்பெனியின் Eno போன்ற மாத்திரைகளும் மருந்துகளும் தாராளமாக உணவோடு சாப்பிடும் விருந்தாக மாறிவிட்டன.


பொதுவாக நல்ல மனநிலையில் இருப்பவர்களுக்கும் வேளாவேளைக்கு நேரம் தவறாமல் சாப்பிடுபவர்களுக்கும் எப்போதும் அளவோடு உண்பவர்களுக்கும் உணவு ஜீரணமாவது எளிது. திட உணவான சாதம், காய்கறிகள், மாமிச உணவு மற்றும் வறுவல், பொரியல்களுடனான உணவைக் கூழாக்கி, திரவ உணவாக மாற்றி, உணவுக்குழாயின் ரத்தக்குழாய்கள் மூலமாக உறிஞ்ச (Hcl) ஹைட்ரோகுளோரிக் அமிலம் இரைப்பையில் சுரந்து ஜீரணமாதல் நடக்கிறது. உணவு நேரம் தவறி தாமதமாக உணவு அருந்துவதாலும் அளவுக்கு அதிகமாக உண்பதாலும் அந்த உணவில் அளவுக்கு அதிகமாக எண்ணெய், காரம், புளிப்பு இருப்பதாலும் வலி மருந்து உட்கொள்ளுவதாலும் அதிகமாக அமிலம் சுரந்து வலி வரலாம். 

மேலே கூறிய எந்தக் காரணமும் இல்லாமல் இருப்பவர்களுக்குக்கூட மன அழுத்தத்தினால் மட்டுமே இப்பிரச்னை ஏற்படலாம். எல்.கே.ஜி. குழந்தைக்குக்கூட பரீட்சை நேரத்தில் வயிற்றுவலி ஏற்படுவது இதனால்தான்.அமிலம் அதிகமாக சுரப்பதனால் நெஞ்சு கரித்தலோடு, நடு நெஞ்சில் வலி, இரைப்பை வலி, மேல் வயிறு வலியும் ஏற்படலாம்.  இப்பிரச்னையை ஆன்டாசிட் (Antacid) எனப்படும் மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம். இது இரைப்பையின் அதிக அமிலத்தன்மையை (Hyperacidity) சமன்படுத்த உதவுகிறது. அமிலத்தன்மை அதிகமானால் அது இரைப்பையின் சுவரை அரித்து புண்ணாக்கும். 

பொதுவாக அமிலத்தன்மைக்கு இரைப்பையின் சுவர்கள் மற்றும் குடலின் ஆரம்பப் பகுதியின் (duodenum)  சுவர்கள் பாதுகாப்புத் தன்மை உடையவை. உணவுக் குழாயிலோ (Oesophagus), குடலின் மற்ற பகுதிகளிலோ அமிலத் தன்மைக்கு பாதுகாப்பு கிடையாது. அதனால், நேரம் தவறி சாப்பிடும்போது அமிலம் அதிகமாக சுரந்து, தாமதமான உணவுடன் உணவுக்குழாய்க்கு வரும்போது நெஞ்சு கரித்தல், ஏப்பம் போன்றவை ஏற்படுகின்றன. உணவுக்குழாயில் அமிலம் படும்போது உணவுக்குழாய் புண்ணாகிறது. இதுவே குடலிலும் ஏற்படுகிறது.அதே நேரத்தில் Digene (Mg 185mg Al 830mg), Gelusil (Mg 250mg Al 250mg) போன்ற மருந்துகளில் அதிக அமிலத் தன்மையை நடுநிலையாக்கும் அலுமினியம், மெக்னீசியம் போன்ற காரத்தன்மையுடைய உலோகங்களே உள்ளன. 

இப்போது, ‘ஒரே வேளை’ மருந்தில் அமிலம் சுரக்கும் சுரப்பிகளை நிறுத்தும் Proton pump inhibitors (PPIs) மருந்துகள் இருப்பதால், ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்னும் அமிலத் தன்மையை குறைத்து நடு நிலையாக்கும் Digene, Gelusil போன்ற மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. மருத்துவர்கள் இந்த ஆன்டாசிட் (antacid) மருந்து களை, பட்ட இடத்தில் மரத்துப்போகச் செய்யும் நவீன மருந்துகளாக ஓரிருவேளை அல்லது ஓரிரு நாள் மட்டும் உட்கொள்ளத் தருவதால் Digene, Gelusil, ணிஸீஷீ போன்ற மருந்துகளை விளம்பரங்கள் வாயிலாக கூவிக் கூவி விற்கிறார்கள். ஆனால், மாரடைப்பு போன்ற உயிர்கொல்லி நோய்க்குக்கூட இதே மாதிரியான நடுநெஞ்சுவலி, எரிச்சல், நெஞ்சு கரித்தல் போன்ற அறிகுறிகளே இருக்கும். 

இந்த அறிகுறிகளுக்காக கை வைத்தியமும் ஆன்டாசிட் மருந்துகளை மட்டும் உட்கொள்ளுவதும் சரியல்ல. உடனடியாக மருத்துவரிடம் பரிசோதிப்பதே நல்லது. ஆன்டாசிட் மருந்துகளை இரைப்பை, உணவுக்குழாய் புண்ணைக் குணப்படுத்தும் மருந்தாக பயன்படுத்துவதை குறைத்துள்ளனர். ஏனெனில், இதை ஒரே நாளில் அடிக்கடி அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டி இருப்பதுதான். உணவுக்குழாயின் பாதிப்புகளை குறைப்பதற்காகவே மருத்துவர்கள் இதைத் தவிர்க்கின்றனர். எதுக்களிப்பை ஏற்படுத்தும் (GerdGastroeso phageal Reflux disease) நோயிலிருந்து ஆன்டாசிட் மருந்துகள் விரைவாக குணம் அளித்தாலும் நோயைக் குணப் படுத்துவதில்லை.

பக்க விளைவுகள்?

இதிலுள்ள மெக்னீசியம் வயிற்றுப்போக்கு உபாதையை தரலாம். வயிற்று அசைவைக் குறைக்கும். அலுமினியம் உப்போ மலச்சிக்கலை உருவாக்கும். வயிற்று அசைவைக் கூட்டும். ஆன்டாசிட் மருந்துகளை தினசரியோ, அடிக்கடியோ அதிகமாக உட்கொள்ளுவதன் மூலம் பல மருந்துகளின் (இரைப்பையிலிருந்து ரத்தத்தில்) ஊடுருவும் திறன் குறையும்... மற்ற மருந்துகளின் செயல்படும் சக்தி குறையும். அதனால், ஆன்டாசிட் மருந்துகளை வெறும் வயிற்றில் உட்கொண்டு உணவுக்குப்பின் மற்ற மருந்துகளை உட்கொள்ளலாம்.

இந்த மருந்துகளை சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களோ, இதய நோய் உள்ளவர்களோ, உப்பு குறைவாக சாப்பிட அறிவுறுத்துபவர்களோ மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். அலுமினியம், மெக்னீசியம் போன்றவற்றை உள்ளடக்கிய gelusil, digene போன்ற மருந்துகளை பீடா போலவோ, மிட்டாய் போலவோ சாப்பிடுவது மிகப்பெரிய தவறு. சிறுநீரகப் பிரச்னைகளும் வரக்கூடும். ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழியை நினைவுபடுத்திக் கொள்ளவும்!   

நன்றி டாக்டர் மு.அருணாச்சலம்         
Disqus Comments