.

Monday, September 29, 2014

இயற்கையான முறையில் உடல் சூட்டை தணிக்க வழிமுறைகள்


சிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை உடற்காங்கை என்பார்கள்.

உடலுக்கு இயற்கையான சூட்டை தருவது உணவு. உடல் இயங்கிக் கொண்டே இருப்பதால், சூடு ஒரே நிலையில் இருக்கும். இந்த சூடு வேறு, உடற்காங்கை என்பது வேறு!

உடற்காங்கை தான் பல நோய்களுக்கு காரணமாகிறது. அஜீரணம், மூட்டுவலி, இளநரை, பாலியல் கோளாறுகள், மாதவிடாய் கோளாறுகள் வாய்வுத்தொல்லை, மூலம் இவைகள் உண்டாகும் காரணங்களில் அதீத உடல் உஷ்ணமும் ஒரு காரணம். உடல் உஷ்ணம் கண்களை பாதிக்கும்.

உடற்காங்கை அதிகமாக காரணங்கள் கோபம், மனக்கவலை, பயம், தாபம் இவை உடற்சூட்டைக் கூட்டும். உள்ளங்கை, விலா, தலை நெற்றி இவற்றை தொட்டுப்பார்த்தால் சூடு தெரியும்.

அடுத்த முக்கிய காரணம் உடலிலிருந்து வெளியேறாமல் தங்கி விடும் மலப்பொருட்கள் தான். உடலில் நச்சுப் பொருட்கள் தங்குவது எப்போது கெடுதலை வினைவிக்கும்.

1. உடலுக்கு எண்ணை பதமிடுதல் அவசியம். தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க, உடற்சூட்டினால் பொலிவிழக்கும் தலைமுடி மீண்டும் கருமையடையும். இளநரையை தவிர்க்கலாம். ஈரமுள்ள தலையில் எண்ணை தடவாமல், உலர்ந்த கேசத்தில் எண்ணை தடவி பின் குளிக்க வேண்டும். தலையின் எண்ணை தடவாமல் ஸ்நானம் செய்வதும், ஸ்தானத்திற்கு பின் ஈரத்தலையில் எண்ணை தடவுவதும், நீர்கோர்வை, சளி, நரை இவற்றை வரவழிக்கும். கேசத்திலும், தோலிலும், எண்ணைப் பசை இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது உடல் உஷ்ணம் குறையும்.

2. இரவு படுக்கப் போகும் போது உள்ளங்கால்களில் நல்லெண்ணை தடவி, தேய்த்து பிடித்து விட்டுக் கொண்டால், கண்களின் எரிச்சல், காங்கை குறையும்.

3. எண்ணை குளியலுக்கு உகந்தவை சூடாக்கப்பட்ட நல்லெண்ணை, திரிபலாதி தைலம், பிருங்காமல தைலம், பொன்னாங்கண்ணி தைலம், போன்றவை பல பலன்களை அளிக்கும். ஆயுர்வேத மருத்துவரின் உதவியோடு, உங்களுக்கு பொருந்தும் தைலத்தை தேர்ந்தெடுக்கவும். கரிசிலாங்கண்ணி, இலைகள், நெல்லி முள்ளி, மருதாணி, எள், இவற்றை தனியாக அரைத்தோ, இல்லை பால்விட்டு அரைத்தோ, சிறிது சூடு செய்து, குளியலுக்கு உபயோகிக்கலாம்.

4. உடலில் தங்கியுள்ள விஷமாகும் கழுவுப் பொருட்களை வெளியேற்ற விரேசன மருந்துகளை, டாக்டரின் அறிவுரைப்படி உட்கொள்ளவும். தினமும் மலம் கழிக்க இவை உதவும். மாதம் ஒரு முறை பேதி மருந்து உட்கொண்டால், வயிறு சுத்தமாகும். திராஷை கஷாயம் போன்றவை இயற்கையாக பலன்தரும்.

5. எண்ணை குளியலை மேற்கொள்ளும் போது, எண்ணையை காய்ச்சி தேய்த்துக் கொள்வதே நல்லது. மிளகு, ஓமம், இவற்றை போட்டு எண்ணையை காய்ச்சுவது வழக்கம். கொம்பரக்கை போட்டு காய்ச்சிய எண்ணையை உபயோகித்தால் உடற்காங்கை குறையும்.

6. எண்ணை தேய்த்துக் கொண்டு குளிக்கையில் சூடான நீரையே பயன்படுத்த வேண்டும்.

7. ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஒரு இரவு ஊற வைக்கவும். மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்ளவும். இதை இரண்டு நாட்களுக்கு செய்யவும்.

8. மதியம் உணவில் மோர் கலந்த சாதத்தில் இரண்டு மூன்று சிறு வெங்காயத்தை சேர்த்து, மூன்று நாட்களுக்கு சாப்பிடவும்.

9. தினமும் இரண்டு மூன்று நெல்லிகாயை உட்கொள்ளவும்.

10. வெள்ளரி சாறு, கேரட் சாறு, இவைகள் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

11. இளநீர் உடல் உஷ்ணத்தை குறைப்பது சிறந்தது.

12. கசகசா விதைகளை பாலில் அரைத்து இந்த களிம்பை தலையில் தடவிக் கொண்டு குளிக்கலாம்.

13 . மேகம் முற்றினால் வெள்ளை, வெள்ளை முற்றினால் வெட்டை,வெட்டை முற்றினால் கட்டை.-கிராமத்து பழமொழி.

மேகம் என்றால் சூடு, உஷ்ணம் என்று பொருள். உடலில் உஷ்ணம் அதிகரித்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் தோன்றும்.இந்நிலை நீடித்தால் வெள்ளை,வெட்டையாக மாறும். இந்நிலை நீடித்தால் உடல் மெலிந்து வேறு பல நோய்கள் தோன்றி இறக்கும் நிலை உருவாகும்.

சரி இதற்கு பழமொழியில் உள்ள மருத்துவம் எது என்றால்,இதில் உள்ள கடைசி வார்த்தைதான் மருந்து, அதாவது கட்டை இது சந்தனக்கட்டையை குறிப்பதாகும். இன்று சராசரியாக அதிகமாக பெண்களிடம் காணப்படும் நோய்களில் இதுவும் ஒன்று....

முற்றிய நிலை வெள்ளை வெட்டைக்கு தரமான சந்தன கட்டையை சிறிது பன்னீர் விட்டு அம்மியில் தேய்க்க தேய்க்க விழுது போல் வரும்.அதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரிஜினல் சந்தன அத்தர் மூன்று சொட்டு விட்டு ஒரு தம்ளர் பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்

இப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட அதிக நாள்பட்ட வெள்ளை வெட்டை நோய் குணமாகும்....அம்மா சொல்படி கேட்டு,வெள்ளிக்கிழமை நல்லெண்ணெய் அரப்பு போட்டு குளிச்சீக்கிட்டு இருந்தா,உடல் சூடும் ஆகாது..வெட்டையும் வராது.. ஷாம்பு போட்டு குளிச்சிட்டு,மென்மையான உணவான இட்லியை மறந்து ஜீரணமாகாத பீட்ஸா வை சாப்பிட்டா எல்லாமே வரும்!!

14 . உடல் சூட்டை தணிக்க : இரவு சிறிது அளவு பாதாம் பிசின்னை தண்ணீரில் ஊறவைத்துக், மறுநாள் காலையில் பருக வேண்டும், சூடு தணியும் வரை எடுத்துக்கொள்ளவும் !
Disqus Comments