.

Sunday, August 24, 2014

இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள்


அம்மா, இந்த விளம்பரம் எதப் பத்தினது?! அந்த அக்காவுக்கு ஏன் வயிறு வலிக்குது?! இப்படி உங்கள் வீட்டு சின்னப் பெண் கேள்வி கேட்டால் கோபப்படாதீர்கள். அதற்கு பதிலளிப்பதை தவிர்க்காதீர்கள்.

அவளிடம் பேசுங்கள். நிறைய பேசுங்கள். சில விஷயங்களில் தெளிவற்ற அறிவு தவறான புரிதலை ஏற்படுத்திவிடும். அது ஆபத்தானதும்கூட. எனவே தயக்கம் இன்றி பேசுங்கள்.


உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்க வேண்டும் இங்கு நாம் எதைப் பற்றி பேசப்போகிறோம் என்று. பூப்படையும் தருவாயில் இருக்கும் சிறுமிகளிடம் உடலியல் மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகமிக அவசியம்.

எப்படிச் சொல்வது?

கேள்விகளுடன் உங்கள் மகள் அணுகும்போது, நீ கைக்குழந்தையாக இருந்தாய், பின்னர் தவழ்ந்து, நடந்து வளர்ந்தாய். குழந்தை வளர்வது இயற்கை. அந்த இயற்கையின் விளைவே பெண் பிள்ளைகள் பூப்படைவதும் என முதலில் ஆரம்பியுங்கள்.

பின்னர் பூப்படைவதற்கு முன்னர் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் குறித்து சொல்லுங்கள். உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் வளர்ச்சியின் அடையாளங்கள் என்ற அடிப்படை அறிவியலை எடுத்துரையுங்கள். அதனாலேயே நீங்கள் அவள் பெட்டிகோட், ஸ்லிப் அணிய வேண்டும் என வலியுறுத்துவதாகவும் கூறுங்கள்.

மருத்துவர் அட்வைஸ்:

இப்படி அடிப்படை புரிதலை ஏற்படுத்திவிட்டாலும்கூட ரத்தப்போக்கு பற்றி எப்படி அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் சிறு பிள்ளையிடன் எடுத்துரைப்பது என்பது குறித்து குழந்தைகள் நல மருத்துவரும், செஸ் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் பி.மனோரமா சில அறிவுரைகள் கூறுகிறார்.

சிறுமிகளுக்கு இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகமிக அவசியம். இது அவர்களது சுய பாதுகாப்புக்கும் உதவும். பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த இடத்தை பாதுகாக்க வேண்டும் என்ற முதல் பாடத்தை ஒரு குழந்தை உள்ளாடை அணிய வேண்டும் என்று வலியுறுத்தும்போதே பெற்றோராகிய நாம் ஆரம்பித்து விடுகிறோம். எனவே பெண் பிள்ளைக்கு மாதவிடாய் பற்றி எடுத்துரைப்பது இரண்டாவது பாடம்.

பெண் குழந்தையிடம், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் உன் உடலில் இருந்து தேவையற்ற ரத்தம் பிறப்புறுப்பு வழியக வெளியேறும். இது சிறுநீர் போல் அவ்வப்போது வெளியேறாமல் தொடர்ந்து 3 நாட்கள் முதல் 4 நாட்கள் வரை வெளியேறும் என்பதால் பாதுகாப்புக்காக நாம் பயன்படுத்துவதே சானிட்டரி நாப்கின். தொலைக்காட்சிகளில் நீ விளம்பரங்களில் பார்ப்பது இவற்றிற்கானதே. இது உன் சுகாதாரத்தை பேணும். இதை பயன்படுத்தும்போது உன் வழக்கமான மகிழ்ச்சி தடைபடாமல் நீ சவுகரியமாக இருக்கலாம். அந்த மூன்று நாட்களில், உனக்கு வயிற்று வலி ஏற்படலாம். அதற்கேற்ப சத்தான உணவு முறைகளை பழக்கிக் கொள்வது நல்லது, என எளிமையாக எடுத்துக்கூறுங்கள்.

அப்போது அவள் குறுக்கு கேள்விகள் கேட்டால். அதற்கும் பொறுமையாக பதிலளியுங்கள். பள்ளியில் தோழிகளுடன் அவள் இதுபற்றி பேசியிருக்கலாம் ஆனால் சில நேரங்களில் அது அவளுக்கு முழுமையான புரிதலை ஏற்படுத்தியிருக்காது.

நீங்கள் தெளிவாக விளக்கிவிட்டால், உங்கள் செல்ல மகள் முதன்முதலில் ரத்தக்கசிவை எதிர்கொள்ளும்போது அச்சமடையமாட்டாள் என்றார்.

கலாச்சாரத்தை கற்றுக்கொடுங்கள்:

இதற்கு அடுத்த பருவம் வளர் இளம்பருவம். இந்த காலகட்டத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு நம் கலாச்சாரத்தை சொல்லிக் கொடுப்பது மிகமிக அவசியம். ஒரு பெண் பூப்படைந்த பிறகு அவளது உடல் குழந்தையை உருவாக்கவும் தயாராகிவிடுகிறது. ஆனால், குழந்தைப்பேறு என்பது திருமணத்திற்கு பிறகே ஏற்பட வேண்டும். பொருந்தாத வயதில், அங்கீகரிக்கப்படாத முறையில் பிறக்கும் குழந்தைக்கு சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்ற கலாச்சாரத்தை எடுத்துரைப்பதும் பெற்றோரின் கடமையே. இது அவளை சமூகத்தில் அவளே பாதுகாத்துக் கொள்ள. தைரியமாக உலவ வழிவகுக்கும் எனவும் மருத்துவர் மனோரமா கூறுகிறார்.

உணவு, உடை, உறைவிடம், கல்வி, லேட்டஸ்ட் கேட்ஜட்ஸ் என அனைத்திலும் தங்கள் பிள்ளைகளுக்கு தி பெஸ்ட் கொடுக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோர்கள் இதுபோன்ற அடிப்படை உடற்கூறியல், அடிப்படை பாலியல் கல்வி ஆகியனவற்றையும் எடுத்துரைப்பது அவசியம்.

பெண் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல அட்வைஸ் ஆண் பிள்ளைகளுக்கும் தேவையானதே. உன் தோழியை கவுரவமாக நடத்து என எப்போதுமே கண்ணியத்தை அவர்களுக்கு சொல்லிக் கொண்டே இருந்தால் வளமான சமுதாயத்தை உருவாக்க முடியும் தானே.

நன்றி: தி இந்து
Disqus Comments