காலையில், காலைக்கடனை முடித்துவிட்டு நடைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும். குழந்தைகள், 40 வயதுக்கு உட்பட்டவர்கள், இதய நோய், மூட்டு வலி போன்ற பிரச்சனை இல்லாதவர்கள் நடைப்பயிற்சிக்குப் பதில், ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.
40 வயதைக் கடந்தவர்கள், வயதானவர்கள் நடைப்பயிற்சி செல்லலாம். அதுவும் 'பிரிஸ்க் வாக்' எனப்படும் வேக நடைப் பயிற்சி செல்வது அவசியம். சாதாரணமாக நடப்பதால், எந்த பலனும் இல்லை. 'பிரிஸ் வாக்' செய்யும்போதுதான், உடலுக்கு அதிக அளவு நன்மை கிடைக்கும்.
மழை நேரத்தில் வீட்டுக்குள்ளேயே நடைப்பயிற்சி செய்யலாம். வசதியிருந்தால், நல்ல தரமான ட்ரெட்மில் இயந்திரத்தில் வாக்கிங் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யும்போது மூட்டுகள், தசைகள், எலும்புகள் வலுவடையும். எலும்பு உறுதியாக இருக்க, கால்சியம் அவசியம்.
உடற்பயிற்சி செய்வதால், கால்சியத்தை எலும்பு நன்கு கிரகிக்கும். இல்லையெனில் என்னதான் கால்சியம் சத்து மாத்திரை எடுத்துக்கொண்டாலும் அத்தனையும் வெளியேறிவிடும்.
நடைப்பயிற்சி என்பது 30 முதல் 45 நிமிடங்களுக்கு இருக்க வேண்டும். மெதுவாக நடைப் பயிற்சியை ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். அதேபோல், வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து நடைப்பயிற்சியை முடிக்க வேண்டும்.
இதன் பிறகு, ஜிம் உடற்பயிற்சிகள் செய்யலாம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஜிம்மில் செய்யக்கூடிய எடைப் பயிற்சிகளை செய்யலாம். 90 வயதினர்கூட ஜிம் பயிற்சியைச் செய்யலாம்.
அவர்களுக்கு ஏற்ற வகையில் எடை குறைவாக வைத்து செய்யும்போது தசைகள் வலிமையாக, இளமையாக, ஆரோக்கியமாக இருக்கும். யோகா, தியானம் போன்ற பயிற்சிகளிலும் ஈடுபடலாம். அனைத்துப் பயிற்சிகளையும் விட சிறந்தது நீச்சல் பயிற்சி. இந்தப் பயிற்சி செய்யும்போது, மூட்டுகளுக்கு அழுத்தம் செல்லாது.