.

Saturday, May 24, 2014

குழந்தையின்மைக்குக் காரணமாகும் கருக்குழாய் அடைப்பு


குழந்தையின்மைக்கான காரணங்களில் மிக முக்கியமானதும், அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டியதுமான பிரச்னை இது. கருக்குழாய் அடைப்பு பற்றிய விழிப்புணர்வோ, அதைக் கவனிக்க வேண்டிய அவசரமோ, அதை சரிசெய்வதற்கான சிகிச்சை முறைகளோ பலருக்கும் இல்லை.



கருக்குழாயின் மிக முக்கிய செயல் என்ன தெரியுமா?

கருத்தரித்தலுக்கு உதவுவதுதான்.இந்தக் கருக்குழாய்கள் சிலருக்கு இயற்கையிலேயே, அதாவது பிறவியிலேயே அரிதாக இல்லாமல் இருக்கலாம். அதாவது 10 ஆயிரத்தில் 5 பெண்கள் இப்படி இயற்கையிலேயே சினைக்குழாய் இல்லாமல் பிறக்கலாம்.

ஆணின் அணுவும் பெண்ணின் கருமுட்டையும் இணைந்து ஒரு சிசுவை உண்டாக்கும் முக்கிய பாலம்தான் கருக்குழாய் எனப்படுகிற 2 சினைக்குழாய்களும். இது கர்ப்பப்பையின் இடது பக்கம், வலது பக்கம் என இரண்டு பக்கங்களிலும் 8 முதல் 10 செ.மீ. நீளமுள்ள மெல்லிய குழாய்களாக இருக்கும்.

சினைக்குழாயின் ஒரு பக்கம், கர்ப்பப்பையினுள் திறந்த நிலையில் இருக்கும். மறு பக்கம் கருமுட்டைப்பையின் அருகில் இருக்கும். இவற்றில் கர்ப்பப்பையின் வாயில் உள்ள பகுதி குறுகலாகவும், கருமுட்டைப்பையின் அருகில் உள்ளது அகலமாக, கைவிரல் போன்ற திசுக்கள் கொண்ட, உறிஞ்சும் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

கர்ப்பப்பையிலிருந்து உள்வரும் ஆண் அணுக்களை சினைக்குழாய் வழியாக கொண்டு சென்று, மாதாமாதம் வெடிக்கும் கருமுட்டையை கைவிரல் போன்ற மென்மையான ஃபிம்பிரியா (fimbriya) உறிஞ்சி, சினைக்குழாய்க்குள் எடுத்துக் கொள்கிறது. சிலியா போன்ற மென்மையான, மிக சன்னமான மயிரிழைகள் இந்தச் செயலைச் செய்கின்றன. அப்படி உண்டாகும் சிசுவை 48 மணி நேரத்துக்குள் சினைக்குழாயிலிருந்து கர்ப்பப்பை அறைக்குள் சேர்த்து விடுகிறது. கரு, கர்ப்பப் பையில் ஒன்றி, குழந்தையாக வளர ஆரம்பிக்கிறது.

அது சரி… இந்தக் கருக்குழாய் அடைப்பு அப்படி என்னதான் செய்யும்?
குழந்தையின்மைக்கான பிரதான காரணம் இந்தக் கருக்குழாய் அடைப்பு என ஏற்கனவே பார்த்தோம். அடுத்து கருக்குழாயில் கருத்தரிக்கும் சிசு, கருக்குழாயினுள் செல்ல இயலாமல், கருக்குழாயிலேயே தங்கி வளர்ச்சியடையவும் இது காரணமாகலாம். இது பெண்ணின் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும்.

குழந்தை இல்லாத பிரச்னைக்கு இந்த சினைக்குழாய்கள் வேலை செய்யாததுதான் முக்கிய காரணம்.

அது அப்படி வேலை செய்யாமைக்கு என்னவெல்லாம் காரணங்கள்?

* கர்ப்பப்பைக்கும் கருமுட்டைக்கும் தொடர்பே இல்லாமல், இயற்கையிலேயே அடைப்பு இருக்கலாம்.
* சிறு வயதில் பிரைமரி காம்ப்ளக்ஸ் எனப்படுகிற டிபி கிருமிகள் அதிகம் தாக்கிய பெண்களுக்கு, தொற்று ஏற்பட்டு, புண்ணாகி கருக்குழாய்கள் அடைத்திருக்கலாம்.
* சுத்தமான பழக்க, வழக்கங்கள் இல்லாத பெண்களுக்கு, தொற்றுக்கிருமிகள் தாக்கி, வெள்ளைப்படுதல் அதிகமாகி, குழாய்களுக்குள் கிருமிகள் சேர்ந்தும் அடைப்பை உண்டாக்கலாம்.
* எஸ்.டி.டி. போன்ற நோய்களால் கிருமிகள் தாக்கி, குழாயின் தோல் பழுதடைந்து, புண்ணாகி, தழும்பாகி, அதன் விளைவான பாதிப்பாகவும் இருக்கலாம்.
* அப்பென்டிக்ஸ் அறுவைக்குப் பிறகான தொற்று, அடிவயிற்றில் டிபி தொற்று, சீழ் பிடித்தல் போன்று வயிற்றுக்குள் வரும் பொதுவான பிரச்னைகளின் பாதிப்பாகவும் அடைப்பு உண்டாகலாம்.
* குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை ரிங் மூலமோ அல்லது வெட்டி, தையல் போடும் முறை மூலமோ செய்யப் படுகிற போதும், குழாய்களில் அடைப்பு உண்டாகலாம்.

ஒரு மென்மையான உயிரையே உண்டாக்கும் முக்கியமான இந்தக் கருக்குழாய் நன்றாக வேலை செய்வதை எப்படிக் கண்டுபிடிப்பது?

குழந்தையில்லாத தம்பதிக்குப் பரிந்துரைக்கப் படுகிற மிக முக்கியமான சோதனைகளில் ஒன்று, கருக்குழாய் அடைப்புக்கான சோதனை. ஸ்கேன், எக்ஸ் ரே, லேப்ராஸ்கோப்பி மூலம் இதைக் கண்டுபிடிக்கலாம். கருக்குழாயில் அடைப்பின்றி இருந்தாலும், சினைக்குழாய் செயல்திறன் இன்றி இருக்கலாம். சினைக்குழாயின் செயல்திறனைக் கண்டுபிடிக்கும் நவீன பரிசோதனை இப்போது பரவலாக வந்துள்ளது. லேப்ராஸ்கோப்பி மூலம் மிகத் துல்லியமாக குழாயின் வெளிப்புறத் தோலையும், அதன் நிலையையும் (கருப்பையின் அருகில் உள்ளதா) , கருப்பை, குடல் அல்லது மூத்திரப் பையில் ஒட்டியிருக்கிறதா என நேரடியாக லேப்ராஸ்கோப்பி மூலம் கண்டறியலாம். அப்படி ஒட்டியிருந்தால் லேப்ராஸ்கோப்பி மூலம் (adhesiolysis) அகற்றவும் செய்யலாம்.

சினைக்குழாய் சம்பந்தப்பட்ட நவீன சிகிச்சைககளுக்கு டியூபோபிளாஸ்டி (tuboplasty) எனப் பெயர்.
இப்போது ஃபாலோஸ்கோப்பி (falloscopy) என்று குழாய்க்குள் செலுத்திச் செய்யப்படுகிற என்டோஸ்கோப்பி முறை மூலம் சினைக்குழாயின் உண்மையான செயல்திறனையும், அதன் உள்பாகத்தில் உள்ள சிலியா (cilia) இயக்கத்தையும் (மைக்ரோ மயிரிழைகள்) கண்டறியலாம்.



இந்தப் பிரச்னையை எப்படி சரி செய்யலாம்?

* ஆரம்ப காலத்தில் கிருமியால் உண்டாகும் மிகக் குறைந்த அடைப்பு மற்றும் சினைக்குழாய் புண்களை (salphingtis) கிருமிகளுக்கு உண்டான மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம்.

* ஹைட்ரோ சால்பிங்ஸ் (Hydro Salpinx) எனப்படும் பழுதடைந்த சினைக்குழாய்கள் மருந்து மூலமும், Salphingostomy எனப்படுகிற லேசர் மைக்ரோ என்டோஸ்கோபி அறுவை சிகிச்சை முறையிலும் குணப்படுத்தி, இயற்கையாகக் கருத்தரிக்கச் செய்யலாம்.

* கார்னுவல் பிளாக் (Carnual Block) எனப்படும் கருப்பையின் ஆரம்ப இடத்திலுள்ள சினைக்குழாய் அடைப்பை நவீனமான ஹிஸ்டெரோஸ்கோப்பி (hysteroscopy) எனப்படும் என்டோஸ்கோப்பி வழியாக கருப்பையின் உள் செலுத்தி சரியாக்கலாம் (hysteroscopic cannulation).

* சிகிச்சை எதுவும் பலனளிக்காமல், பல ஆண்டுகளாகியும், குழந்தையில்லாத நிலையில், சோதனைக் குழாய் சிகிச்சை முறையில் குழந்தை உண்டாக்கலாம். உலகில் முதன்முறையாக சோதனைக்குழாய் சிகிச்சை முறை, சினைக்குழாய் அடைப்புள்ள பெண்களுக்கு கண்டுபிடிக்கப் பட்ட அற்புதமான சிகிச்சை. கணவன்-மனைவி இருவரது அணுக்களையும் உடலுக்கு வெளியே ஆய்வகத்தில் பொருத்தி, சிசு உண்டாக்கி, 2 முதல் 5 நாட்களுக்குள் கருவறைக்குள் நேரடியாக செலுத்தி, இயற்கையான குழந்தை போல வளர்த்து, பிரசவம் நிகழச் செய்கிற நிகழச்சியாகும். எனவே ஆரம்ப காலத்திலேயே தக்க பரிசோதனைகளைச் செய்து, சிகிச்சைகள் மேற்கொண்டால், பெரும்பாலும் சினைக்குழாய் தொடர்பான பிரச்னைகளைத் தவிர்த்து, குழந்தைச் செல்வம் பெறலாம்.
Disqus Comments