.

Monday, April 21, 2014

எடைக் குறைப்புக்கு உதவுமா புரோட்டீன் பவுடர்?செய்தித்தாளைத் திறந்தால் உள்ளே புரோட்டீன் பவுடர் உபயோகிக்கச் சொல்கிற விளம்பர நோட்டீஸ்… ‘சிரமமின்றி எடை குறைய வேண்டுமா? புரோட்டீன் பவுடர் குடியுங்கள்’ என அழைக்கின்றன பேருந்து மற்றும் ஆட்டோ விளம்பரங்கள். போன மாதம் வரை உடல் பருமனுக்கு உதாரண உருவமாக இருந்த தோழியோ, உறவினரோ, திடீரென அடையாளம் தெரியாத அளவுக்கு இளைக்கிறார். ‘புரோட்டீன் பவுடர்தான் ரகசியம்’ என்கிறார். அதையே உங்களுக்கும் பரிந்துரைக்கிறார். ‘நீங்கள் அதை நான்கு பேருக்குப் பரிந்துரைத்து விற்பனை செய்தால், உங்கள் பருமன் குறையும், பேங்க் பேலன்ஸ் கூடும்’ என பிசினஸ் பேசுகிறார். இப்படி திரும்பின பக்கமெல்லாம் புரோட்டீன் பவுடர் புராணம்.

அதென்ன புரோட்டீன் பவுடர்? அது என்ன செய்யும்? யாருக்குத் தேவை? பக்க விளைவுகள் கொண்டதா? 

எல்லாவற்றையும் விளக்கமாகப் பேசுகிறார் பொது மருத்துவர் கிருத்திகா சுப்புராஜ்.

உங்களுக்கான புரதம் எது? 

புரதச் சத்து என்பது நம் ஒவ்வொருவரின் உணவிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று. தசைகள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு புரதம் மிக அவசியம். நமது வளர்சிதை மாற்றத்திலும், நச்சுக்கள் வெளியேறும் செயல்பாட்டிலும், புரதங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தசைகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும், செல்களை சரியாக இயங்கச் செய்யவும்கூட புரதம் தேவை. நமக்கு அதி அத்தியாவசியமாக தேவைப்படுகிற சில வகை அமினோ அமிலங்கள், உணவிலுள்ள புரதத்திலிருந்து கிடைப்பவையே. அத்தகைய புரதங்களை உடல் உருவாக்குவதில்லை. தேவையான புரதத்தைத் தவறாமல் எடுத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது, அந்தப் புரதம் எதிலிருந்து பெறப்படுகிறது என்பதும்.

தினசரி 2 அல்லது 3 முறை புரத உணவுகளை எடுத்துக் கொள்வது, புரதத் தேவைப் பற்றாக்குறை வராமல் தடுக்கும். விலங்குகளிட மிருந்து பெறப்படுகிற இறைச்சி, முட்டை, சீஸ், தயிர், பால் மற்றும் மீன் ஆகியவை முழுமையான புரத உணவுகள். தானியங்கள், காய்கறிகளில் இருந்து கிடைப்பது முழுமையடையாத புரதம். அதனால் சைவ உணவுக்காரர்கள் பயப்படத் தேவையில்லை. முழுமையடையாத இரண்டு, மூன்று புரத உணவுகளை சேர்த்து சாப்பிடுகிற போது, முழுமையான புரதத் தேவை பூர்த்தியாகி விடும்.

 புரோட்டீன் சப்ளிமென்ட்ஸ்? 

புரோட்டீன் ஷேக், பவுடர் மற்றும் சப்ளிமென்டுகள் சமீப காலமாக வெகுவாகப் பிரபலமாகி வருகின்றன. இவை சப்ளிமென்ட்டுகள் என்பதால் அமெரிக்காவில் உள்ள எஃப்.டி.ஏ(ஃபுட் அண்ட் டிரக் அட்மினிஸ்ட்ரேஷன்)னின் பாதுகாப்பு அங்கீகாரம் இல்லாமலேயே மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்துவிடுகின்றன.

யாருக்கு? 

ஆரோக்கியமான உடல் நிலையில் இருக்கிற யாருக்கும் புரோட்டீன் சப்ளிமென்ட் தேவையில்லை. தீவிரமான விளையாட்டு வீரர்கள், பாடி பில்டர் மற்றும் நாள்கணக்காக பட்டினி இருந்து உடல்நலம் மோசமானவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள் போன்றோர் மட்டும் புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொள்ளலாம்.

எடைக் குறைப்புக்கு உதவுமா புரோட்டீன் பவுடர்? 

புரோட்டீன் பவுடர் கலந்த பானங்கள் வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்தும். பசியெடுக்காது. விரைவாக உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு விரைவான பலனைத் தரும் என்பதால் பலரும் இதை உட்கொள்கிறார்கள். ஆனால், காலத்துக்கும் இதையே சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது. இதைக் குடிப்பதை நிறுத்திவிட்டு, மறுபடி வழக்கமான உணவுக்கு மாறும் போது, இழந்த எடையெல்லாம் மீண்டும் வந்து சேரும். தனியே புரோட்டீன் சப்ளிமென்ட் எடுத்துக் கொள்ளத் தேவையின்றி, நமது உணவின் மூலமே அதை ஈடுகட்டலாம் என்கின்றன ஆராய்ச்சிகள்.

காலை, மதியம் மற்றும் இரவு என 3 வேளைகளுக்கும் புரதம் நிறைந்த பேலன்ஸ்டு உணவுகளை எடுத்துக் கொள்ளப் பழகுவதன் மூலம், ஆபத்தில்லாத முறையிலும், மெதுவாகவும் எடையைக் குறைக்கலாம். உணவு தருகிற புரதமானது ஆபத்தில்லாதது. சப்ளிமென்ட்டுகளில் மறைந்திருக்கிற ஆபத்துகளும் இதில் இல்லை.

எப்படித் தேர்வு செய்ய வேண்டும்? 

தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொள்ள நேர்ந்தால், முதலில் நம்பிக்கையான, பிரபலமான நிறுவனத் தயாரிப்பாகத் தேர்ந்தெடுக்கவும்.

உங்களுடைய புரோட்டீன் பவுடரில்… சர்க்கரையோ, செயற்கை இனிப்போ சேர்க்கப்பட்டிருக்கக் கூடாது.

செயற்கை கலர் இருக்கக் கூடாது.

கால்நடைகளில் இருந்து பெறப்பட்ட புரதமாக இருக்க வேண்டும். அந்தக் கால்நடைகளுக்கு ஹார்மோன் மருந்துகளோ, கெமிக்கலோ கொடுக்கப்படாமல், தாவர உணவளித்து வளர்க்கப்பட்டவையா என்பதற்கான குறிப்பு இருக்க வேண்டும்.

மரபணு மாற்றம் செய்யப்பட்டவையாக இருக்கக் கூடாது.

உலகிலேயே மிகப்பிரபலமான புரதம் சோயா. ஆனால், அது குறித்த சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. சோயாவிலுள்ள அதிகப்படியான ஃபைட்டோ ஈஸ்ட்ரஜன்கள், ஹார்மோன் கோளாறு களை உண்டாக்குவதாக சொல்லப்படுவதால் அதையும் தவிர்ப்பதே பாதுகாப்பானது.

உணவின் மூலம் கிடைக்கிற புரதத்துக்கும், புரோட்டீன் பவுடர்களுக்கும் என்ன வித்தியாசம்? 

ஒரு கப் உணவு சாப்பிடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். உணவில் உள்ள புரதமானது மெதுவாக செரிமானமாகி, அதிலுள்ள அமினோ அமிலங்கள் உடலுக்குள் போகும். அமினோ அமிலமானது மெதுவாகவும் சீராகவும் ரத்தத்தில் கலக்கும். எடையைக் குறைப்பதில் இந்த வேலை மிக முக்கியமானது. பெரும்பாலான அமினோ அமிலங்கள் குளூக்கோஜெனிக் தன்மையுடையவை. அதாவது, கல்லீரலில் குளூக்கோஸாக மாற்றப்பட்டு, கார்போஹைட்ரேட்டாக உபயோகிக்கப்படும். புரோட்டீன் பவுடராக எடுத்துக் கொள்ளும் போது, அமினோ அமிலமானது வேகமாக உறியப்பட்டு, இன்சுலின் சுரப்பை பாதிக்கும். எனவே, உணவின் மூலம் கிடைக்கிற புரதமே பாதுகாப்பானது. பக்க விளைவுகள் இல்லாதது. –


Disqus Comments