.

Friday, March 21, 2014

மாரடைப்பு வந்தால், அறுவைச் சிகிச்சை செய்வது தான் தீர்வா? heart attackமாரடைப்பு வந்து விட்டால், அறுவைச் சிகிச்சை தான் தீர்வு என்பது, சரியான நடைமுறை அல்ல. மருந்து, மாத்திரைகளால், 80 சதவீதம் குணப்படுத்தி விட முடியும். இதய வால்வை மாற்றினாலும், திருமணம் செய்து, குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். வாழ்நாள் முழுவதும், மாத்திரை சாப்பிட வேண்டிய நிலையும் வராது.1. மாரடைப்பு என்றால் என்ன; ஏன் ஏற்படுகிறது?

கொழுப்பு அதிகரிப்பு, மது, புகை பழக்கம் காரணமாக இதயம் வீக்கம் அடைந்து, அதன் செயல்பாடு குறைவதால் மாரடைப்பு ஏற்படுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. ரத்தக் குழாயில் உள்ள மெல்லிய படலம், மிருதுவான தன்மையுடன் இருக்கும். அது, கொழுப்பு படிந்து, தடிமனாவதால் ரத்தம் உறையும். இதனால் ரத்தக் குழாய் முழுவதும் மூடுவதால், மாரடைப்பு ஏற்படுகிறது.

2. மாரடைப்பு வந்தால், அறுவைச் சிகிச்சை செய்வது தான் தீர்வா?

நிச்சயமாக அப்படி ஒரு நிலை இல்லை. புட்டபர்த்தி சத்யசாய் மருத்துவமனையில், உலகம் முழுவதும் உயர்நிலையில் உள்ள, 120 டாக்டர்கள் பங்கேற்ற மாநாடு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அதில், இதுபற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில், மாரடைப்பு ஏற்படுவோரில், 80 சதவீதம் பேருக்கு, உடனடியாக, 'ஆஞ்சியோ பிளாஸ்டிக்' என்ற அறுவைச் சிகிச்சை தேவையில்லை என, உறுதிபடுத்தப்பட்டது. தனியார் மருத்துவமனையில் நுழைந்தாலே, 'மாரடைப்பு வந்து விட்டதா, உடனே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் உயிர் போய்விடும்' என, ஒரு பயத்தை ஏற்படுத்துகின்றனர். இது சரியான நடைமுறை அல்ல. டாக்டர்கள்,
மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

3. மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்தி விட முடியுமா?

பாதிப்புள்ளோருக்கு மாரடைப்புக்கான காரணம், பாதிப்பின் தன்மை குறித்து கண்டறிய வேண்டும். இ.சி.ஜி., மற்றும் எக்கோ பரிசோதனைகள் செய்து, தேவைக்கேற்ப, மருந்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். இரண்டு மாதங்கள் தொடர் சிகிச்சை அளித்தால், குணப்படுத்தி விட முடியும். அப்படியும் சரியாகவில்லை என்ற பட்சத்தில் தான், நாம் அறுவைச் சிகிச்சை என்ற நிலைக்கு செல்ல வேண்டும். மாரடைப்பால் பாதித்தோரில், 20 சதவீதம் பேருக்கு தான் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

4. 'கார்டியோ ஜெனிக் ஷாக்' என்றால் என்ன? அதற்கான நவீன சிகிச்சை என்ன?

இதயத்தின் மூன்று ரத்தக் குழாய்களும் அடைக்கப்பட்டு, மயக்க நிலை ஏற்பட்டால், 'கார்டியோ ஜெனிக் ஷாக்' என்று பெயர். பாதிப்பின் தன்மை அதிகம். இதற்கு, ஐ.ஏ.பி.பி., (இண்டிரா அயோதிக் பலுான் பம்ப்) சிகிச்சை அளிக்கப்படுகிறது. நரம்பு வழியாக, ஒரு பலுானை, மகா தமனியின் இடது பக்கம் செலுத்தி, 'ஹீலியம்' என்ற வாயுவை, அந்த பலுானில் செலுத்தி, இயந்திரத்தில் இணைத்து விடுவர். அந்த இயந்திரம் பலுானை சுருங்கி, விரிவடையச் செய்து, இதயத்துக்கான ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யும். இதனால், இதயம் ஓய்வெடுப்பதால், அது நலம் பெற்று, மீண்டும் சீராக இயங்க முடியும். இந்த அதிநவீன சிகிச்சையால் மட்டுமே, மிகப்பெரிய மாரடைப்பில் இருந்து, ஒருவரை காப்பாற்ற முடியும். இந்த வசதி, ஒரு சில மருத்துவமனைகளில் தான் உள்ளது. அதிலும், தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் மிகக் குறைவே.

5. மாரடைப்பு வராமல் இருக்க, என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்ய வேண்டும்?

மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க வேண்டும். அதற்கு யோகா, தியானம் நல்ல பலன் தரும். எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால், இறைச்சி வகைகளை சாப்பிடுவதை கைவிட வேண்டும். உடற்பயிற்சி செய்வதும் அவசியம். 'நான் அதிகாலையிலேயே வேலைக்குச் சென்று விடுவேன்; உடற்பயிற்சிக்கு எல்லாம் நேரம் கிடையாது' என, பலர் கூறுகின்றனர். அப்படிப்பட்டவர்கள், இரவு, 9 மணிக்கு கூட உடற்பயிற்சி செய்யலாம். குறைந்த பட்சம், 45 நிமிடங்கள் உடற்பயிற்சி அவசியம். அவ்வாறு செய்வதால், மாரடைப்பு பிரச்னை வர வாய்ப்பில்லை.

6. நடுத்தர வயதினருக்கு எளிமையான மருத்துவ முறை என்ன?

தினமும் பல் விளக்கியதும், ஐந்து பூண்டு பற்களை நன்றாக வறுத்து, (எண்ணெய் சேர்க்காமல்) வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்குப்பின் டீ, டிபன் சாப்பிடலாம். இவ்வாறு செய்வதால், கொழுப்பு சேராமல் தடுப்பதோடு, உடல் எடையும் குறையும் என்பதால், பெரிய சிக்கல் ஏதும் வராது.

7. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், உடலுக்கு தீங்கு விளைவிக்காது தானே?

அப்படியெல்லாம் உறுதியாக கூற முடியாது. அதிலும், 'டிரை கிளிசரேட்' என்ற, கொழுப்பு உள்ளது. மாரடைப்பு பாதிப்பு உள்ளோர், முடிந்த அளவு, உணவில் எண்ணெய் சேர்ப்பதை குறைக்க வேண்டும். சாலையோரங்களிலும், கண்ட கண்ட இடங்களிலும் விற்கும் உணவுப் பண்டங்களை வாங்கி சாப்பிடுவதை, கைவிட வேண்டும். ஒரே எண்ணெயை திரும்பத் திரும்ப பயன்படுத்துவதால், அதன் வாயிலாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

8. இதய வால்வு மாற்றம் செய்த பெண்கள், திருமணம் செய்து கொள்ளவோ, குழந்தை பெற்றுக் கொள்ளவோ கூடாது என்கின்றனரே... அது உண்மை தானா?

தொண்டையில் வலி, முட்டுக்காலில் வீக்கம், கை மூட்டுகள் வீக்கம் ஏற்பட்டு, வலியுடன் கூடிய காய்ச்சல் (ரூமாட்டிக் காய்ச்சல்) வரும். இதற்கு, இதய வால்வு பாதிப்பு தான் காரணம். இதை, ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை பெற்றால், முற்றிலும் குணப்படுத்த முடியும்.

அப்படி இல்லை என்றால், இதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி வரும்.
ரத்தம் உறையாமல் இருக்க, 'அசிட்டோன்' என்ற மாத்திரை, வால்வு மாற்றம் செய்வோர், வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும். பிளாஸ்டிக் மாற்றம் செய்வோருக்கு, சாப்பிடும் மாத்திரைகளால் சிக்கல் வரும் என்பதால், குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.


9. நவீன சிகிச்சை முறையில், வேறு வழியில்லை இல்லையா?

நிச்சயம் உண்டு. திருமண வயது, குழந்தை பெறும் வயதில் உள்ள பெண்களுக்கு, வால்வு மாற்றும் போது, பிளாஸ்டிக் வால்வை தவிர்த்து, 'பெரிமவுண்ட்' எனப்படும், திசு வால்வு பொருத்திக் கொள்ளலாம்.

இதற்கு, 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். அப்படி செய்வோர், வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டியதில்லை என்பதால், திருமணம் செய்து கொள்வதிலும், குழந்தை பெற்றுக் கொள்வதிலும், எந்த சிக்கலும் வராது. இது, நவீன சிகிச்சை. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே செய்யப்படுகிறது.

வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டிய நிலை வராது. பொதுவாக அளவான சாப்பாடு, தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு, அதோடு, சரியான துாக்கமும் இருந்தால், எந்த சிக்கலும் இன்றி நிம்மதியாக வாழ முடியும்.

டாக்டர் கே.எஸ்.கணேசன்,
இதய துளைவழி அறுவைச் சிகிச்சை நிபுணர்,
சென்னை அரசு பொது மருத்துவமனை.

நன்றி  ஹலோ டாக்டர் ..! செய்திகள்:

Disqus Comments