திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35 – 40% வரைதான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20-25% வரை தான் ஆண்கள் காரணமாக இருந்தார்கள்.
ஆனால் இன்று 40% வரைக்கும் குழந்தையில்லா பிரச்சனைக்கு ஆண்கள்தான் காரணமாக இருக்கின்றனர். 15-20% வரை பிரச்சனைக்குக் காரணம் யாரென்றே தெரியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பத்தில் தம்பதிகள் இருவருமே நார்மலாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் காரணத்தினாலோ குழந்தை பிறக்காமலேயே போகும்.
தம்பதிகளும் தயக்கப்படாமல் தங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு மருத்துவரிடம் சொல்ல வேண்டும். அதிலும் அவர்கள் கொடுக்கும் தகவல்கள் உண்மையாக இருக்கவேண்டியது அவசியம்.
சிலருக்கு அந்த உறவு பற்றிய போதிய அளவு விஷயம் தெரியாமல் இருக்கலாம். முட்டை வெளிப்படும் OVULATION PERIOD தான் உறவுக்கு உகந்த சமயம். அந்தச் சமயத்தில் உறவு கொண்டால்தான் கருதரிப்பு ஏற்படும். அந்த தேதிகளை தவற விடும்போது சில தம்பதிகளுக்குக் கருதரிக்காமல் போகலாம்.
அதுவும்கூட கருதரிக்காமல் போகக் காரணமாகும் என்பதால், இந்தத் தகவலையும் மறைக்காமல் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும். சில நேரங்களில் குழந்தை இல்லையா என்ற சமூகத்தின் கேள்வியை கூடத் தம்பதிகள் மனதில் ஒருவித பாதிப்பு ஏற்படுத்தி, கருத்தரிப்பு உண்டாவதில் பிரச்சனைகள் ஏற்படுத்தலாம்.
சிலர் அந்த உறவு முடிந்தவுடன் சுத்தமாக இருக்கிறேன் பேர்வழியே என்று, தங்கள் அந்தரங்க பாகங்களை தண்ணீராலோ வேறு கெமிக்கல் திரவத்தாலோ சுத்தப்படுத்தி வரலாம். இப்படி செய்யும்போது விந்தணு அழிந்துபோகும் வாய்ப்புள்ளது. இதனாலும் கருத்தரிப்பு தள்ளிப் போகலாம்.
இதுபோன்ற பல காரணங்களினால் உடலளவில் பிரச்சனைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்சனைகள் உண்டாகலாம். மருத்துவரிடம் இது பற்றி ஒளிவு மறைவில்லாமல் பேசி பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காணலாம்.