.

Monday, July 4, 2016

மார்பக புற்றுநோய் ஒவ்வொரு பெண்ணும் தெரிந்துகொள்ள வேண்டியவைபெண்களை மிரட்டும் மார்பகப்புற்று பற்றிய அடிப்படைத் தகவல்களை விரிவாகப் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த மார்பகப் புற்றுநோய் சிறப்பு நிபுணர் செல்வி ராதாகிருஷ்ணா.

 ‘‘மார்பக வளர்ச்சி மற்றும் மார்பகம் தொடர்பான அடிப்படை புரிதல்களை அறிந்துகொள்வது முதல் படி!’’ என்றபடி ஆரம்பித்தார் டாக்டர்…


“பெண் குழந்தைகளுக்கு சுமார் 10 – 11 வயதில் மார்பகங்கள் வளர ஆரம்பிக்கும். பூப்படையும் காலத்தில் சினைப்பைகள் (ஓவரிகள்) ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனைச் சுரக்கும். இதனால் மார்பகக் கணையங்களும், இணைப்பு திசுக்களும், கொழுப்புச் சத்தும் சேர்ந்து மார்பகங்களுக்கு அழகிய வடிவம் கொடுக்கும்.

எது சரியான மார்பக அளவு என்பது குறித்து ஏராளமான கட்டுக்கதைகள் உள்ளன. உண்மையில் ஒவ்வொருவருடைய மார்பகமும் ஒவ்வொரு அளவு, வடிவத்தில் இருக்கும். அது இயல்பான ஒன்று.

கர்ப்பகாலம் மற்றும் பாலூட்டும் காலத்தில் மார்பகங்கள் பெரிதாகும். சிலருக்கு இருமடங்காகவும் ஆகலாம். மார்புக்காம்பு, அடர் நிறத்தை அடையும். பால் சுரப்பு செல்கள் பெருகுவது, நாளங்கள் விரிவடைவது, ஹார்மோன் மாற்றங்களால் மார்பகத்தில் உண்டாகும் மாற்றங்கள் இவை.ஒருவருடைய ஆயுள் காலத்தில் மார்பகங்கள் பல வகைகளில் பாதிப்புக்குள்ளாகும். ‘ஃபைப்ரோடெனோமா’ எனப்படும் கட்டிகள் தோன்றுவது இளவயதில் சகஜம். பால் கொடுக்கும் காலகட்டத்தில் பால் கட்டி கிருமித் தொற்று ஏற்படலாம். இதனால் மார்பகத்தில் சீழ் கட்டும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஏற்பட்டால் அதை மருந்துகள் மூலமாக அல்லது தீவிரத்தைப் பொறுத்து அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தலாம்.

வயதாக ஆக உடலில் உள்ள திசுக்கள் அனைத்தும் தளர்வாக ஆரம்பிக்கும். மார்புகள் தொய்வடையவும் இதுவே காரணம்.

மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தில் (மெனோபாஸ்) பால் சுரப்பிகளும் சில நாளங்களும் சுருங்குவதால் மார்பகங்களில் ஏற்படக்கூடிய வெற்றிடத்தில் நீர்க்கோவை ஏற்படக்கூடும். இதைப் பொதுவாக நீர்க்கட்டி என்று சொல்வோம். இது நோய் அல்ல.

சிலருக்கு மார்பகக் காம்பு இயல்பிலேயே உள்வாங்கி இருக்கும். இது பால் புகட்டுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், அப்போது நிப்பிள் ஷீல்டு பயன்படுத்திக்கொள்ளலாம். மற்றபடி இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை.

இந்த மாற்றங்கள் அனைத்துமே ஒரு பெண்ணுக்கு அவள் ஆயுட்காலத்தில் மார்பகத்தில் ஏற்படும் இயல்பான மாற்றங்களே!

இயற்கையின் தவறு!

மிகமிக அரிதாக இயற்கையிலேயே சிலருக்கு கூடுதல் மார்பகக் காம்புகளும், அக்குள் முதல் அடிவயிறு வரையிலான பகுதியில் அதிகப்

படியான மார்பகத் திசுக்களும் (கூடுதல் மார்பகம்/துணை மார்பகம்) இருக்கக்கூடும். இயல்பான மார்பகங்களுக்கு நேரும் எல்லா மாற்றங்களும், பிரச்னைகளும் இந்த சதைத் திரட்சிக்கும் ஏற்படலாம். சம்பந்தப்பட்டவர்களுக்குப் பெரும் பதற்றத்தையும் வேதனையையும் கொடுக்கும், இந்த இயல்பு மீறிய தன்மை. கொழுப்புக்களும், திசுக்களும் அடங்கிய இது கர்ப்பகாலம் மற்றும் பாலூட்டும் காலத்தில் அதிக வலியையும் அசௌகரியத்தையும் ஏற்

படுத்தும். உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்பை உருவாக்கக்கூடிய இந்த துணை மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலமாக நீக்கி

விடலாம். எனினும், கூடுதல் மார்பகங்கள் இருந்தால் மார்பகப்புற்று ஏற்படும் என்பதில்லை.

சிறிய மார்பகம்… பிரச்னையே அல்ல!

எல்லா காலங்களிலும் இளம்பெண்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் விஷயங்களில் மிக முக்கியமானது, சிறிய மார்பகங்கள். தாழ்வு மனப்பான்மையில் இருந்து, பாலுறவு, குழந்தைப் பிறப்பில் இதனால் சிக்கல் ஏற்படுமா என்ற சந்தேகங்கள் வரை, பல பெண்களும் இதனால் அநாவசியக் குழப்பம் அடைவார்கள். உண்மையில் சிறிய மார்பகங்கள் என்பது 100% இயல்பானதே. அது எந்தக் குறையின் வெளிப்பாடும் அல்ல. இதனால் பாலுறவிலோ, குழந்தைப் பிறப்பிலோ, பாலூட்டுவதிலோ எந்தப் பிரச்னையும் ஏற்படாது. என்றாலும், இளம்பெண்கள் பலர், மார்பகங்களைப் பெரிதாக்குவதற்காக மார்க்கெட்டில் விற்கப்படும் மாத்திரைகள், எண்ணெய்கள், க்ரீம்களை நாடுவது வேதனை. இவற்றால் எந்தப் பலனும் கிடைக்காது என்பதுடன், இது பக்கவிளைவுகளை ஏற்படுத் தக்கூடும் என்பதையும் கவனத்தில்கொள்ளவும்.

மாதம் ஒரு முறை!

ஒவ்வொரு பெண்ணும் தன் மார்பகம் குறித்து, அதன் அளவு, நிறம், வடிவத்தை முழுமையாக அறிந்துவைத்திருப்பது அவசி யம். அப்போதுதான், அதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதை உணர முடியும்.

மேலும், 30 வயதுக்கு மேல் ஒவ்வொரு பெண்ணுமே சுயமார்பகப் பரிசோதனை செய்துகொள்வது, ஒருவேளை மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப் பதற்கும், அதிலிருந்து முழுமை யாக  குணம் பெறுவதற்குமான வழி.

பொதுவாகப் பெண்கள் மாதவிலக்கு நாட்களுக்கு முன்பாக, மார்பகம் கனமானது போன்று உணர்வார்கள். இது ஒருவித அசௌகரி யத்தை ஏற்படுத்தும். இந்த நாட்களில் சுய பரிசோதனை மேற்கொண்டால் அது தேவையற்ற பதற்றத்தையே உண் டாக்கும் என்பதால், ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு முடிந்த பிறகு மார்பக சுயபரிசோதனையை மேற்கொள்ளலாம். அப்போது கவனிக்க வேண்டிய விஷயங் கள் பின்வருமாறு…

சுயபரிசோதனை செய்வது எப்படி..?! கண்ணாடி முன் நின்று மார்பகங்கள் அளவில், நிறத்தில், வடிவத்தில் இயல்பாக உள்ளனவா, இல்லை இவற்றில் ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் தென்படுகின்றனவா, கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஏதேனும் உருவ மாறுபாடு, வீக்கம் தெரிகிறதா என்பதை ஒரு முறைக்கு பல முறை கவனிக்கவும்.

 நின்ற நிலையிலும், உட்கார்ந்த நிலையிலும் மார்பகங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகின்றனவா என்பதை கவனிக்கவும்.

 அடுத்ததாக, மல்லாந்து படுத்த நிலையில் மார்பகங்களை பரிசோதிக்கவும். ஈரமாக, வழவழப்பாக இருக்கும் மார்பகங்களை பரிசோதனை செய்வது எளிது என்பதால், கையின் ஆள்காட்டி விரல் மற்றும் மோதிர விரலில் ஏதாவதொரு க்ரீம் அல்லது சோப் கூழை தடவிக்கொண்டு, வலது கையால் இடது மார்பகத்தையும், இடது கையால் வலது மார்பகத்தையும் தடவிப் பார்க்கவும். வலது மற்றும் இடது மார்பகத்தை நான்கு பகுதிகளாப் பிரித்துக்கொண்டு, சுயபரிசோதனையை அக்குள் பகுதியிலிருந்து ஆரம்பிக்கவும். ஒரு சிறு பகுதியைக்கூட விடாமல் மார்பகம் முழுக்கப் பரிசோதிக்கவும்.

 மார்பகக் காம்புகளை மெதுவாக அழுத்தி ஏதாவது திரவம் (பால் போன்ற, மஞ்சள் நிற திரவம் அல்லது ரத்தம்) வெளிவருகிறதா என்பதைக் கவனிக்கவும்.

என்னென்ன மாற்றங்கள்..?

 மார்பகத்தின் வெளிச்சுற்று அல்லது வடிவத்தில் ஏதேனும் மாற்றம்.

 கைகளை அசைக்கும்போது மடிப்புகள் அல்லது குழிவு போல் தென்படுவது.

 மார்பகத்தோலில் குழிவு, சுருக்கம், புடைப்பு.

 ஏதேனும் ஒரு மார்பகத்தில் அசௌகரியம், வலி மேலும் அந்நிலை தொடர்ந்து சில வாரங்களுக்கு நீடிப்பது. ஒரு மார்பகத்தில் இல்லாத ஒரு அம்சம், மற்றொரு மார்பகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தென்படுவது.

 மார்புக் காம்பின் அமைப்பில் மாற்றம், உள்பக்கமாக குழிந்தது போலவோ, இயல்புக்கு மாறாக உள்ளிழுத்துக்கொண்டோ, வேறு திசையில் இழுத்துக்கொண்டோ தென்படுவது.

 மார்பகக் காம்பைச் சுற்றிய பகுதி சிவந்து தடித்துக் காணப்படுவது.

 செந்நிறம், வெம்புண், தோல் பகுதியில் வெடிப்பு மற்றும் வீக்கம்.

மேலே சொன்ன மாற்றங்கள் தென்பட்டால், உடனடியாக மருத்து வரை அணுகவும். மாதவிலக்கு தொடர்பான அறிவுரைகள் பெண் குழந்தைகளுக்குத் தரப்படுவது போலவே, மார்பக சுயபரிசோதனை பற்றிய விழிப்பு உணர்வும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியமான ஒன்று.


மார்பகப்புற்றால் இறப்பு விகிதம் அதிகரிக்கக் காரணங்கள்!

 நோய் குறித்த விழிப்பு உணர்வு இல்லாமை.

 நோயை முன்கூட்டியே கண்டறியவும், அதன் பிறகு தொடர்ந்து ஃபாலோ-அப் செய்யவும் போதிய மருத்துவ வசதிகளும், நிபுணர்களும் இல்லாமை.

 நாள் கடந்து முற்றிய நிலையில் நோயைக் கண்டறிவது.

 சிகிச்சை கிடைப்பதில் ஏற்றத்தாழ்வுகள்.

 சிகிச்சைக்கான செலவு மிக அதிகம்.

இந்தியாவின் கவலையான  நிலை!

உலகளவில் பெண்களை பாதிக்கும் நோய்களில் முக்கியமானது, மார்பகப் புற்றுநோய். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 80,000 பேருக்கு மேல் இந்நோயால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரம் கூறுகிறது.


ஆனால் இந்தியாவில், மார்பகப் புற்றுநோய்க்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவே இது. எனவே, இது நிச்சயமான எண்ணிக்கை அல்ல. மார்பகப்புற்றால் பாதிக்கப்பட்ட எத்தனையோ பெண்கள் அதை உணராமலும், அல்லது சிகிச்சையை முன்னெடுக்காமலும் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். எனவே, இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை, இந்த ஆய்வு முடிவைவிட அதிகமாகவே இருக்கும்.

இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 50 சதவிகிதம் பேர் இறந்துவிடுகிறார்கள். ஆனால், அதுவே அமெரிக்காவில் 25 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே மரணத்தைத் தழுவுகிறார்கள். எனவே, இறப்புக்குக் காரணம் நோய் அல்ல, மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வு இல்லாததே என்பதை அறியலாம்.


Disqus Comments