.

Tuesday, May 3, 2016

வாய்ப்புண் உடல்சூடு குடல்புண் போக்க மணத்தக்காளி கீரையை எவ்வாறு பயன்படுத்தவேண்டும்?




நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் கீரை வகைகளில் மணித்தக்காளி மிகவும் முக்கியமான மூலிகையாகும். உஷ்ணவியாதி உள்ளவர்கள் வாய்ப்புண், வயிற்றெரிச்சல், கண் எரிச்சல், மலவாய் எரிச்சல், தேக நமைச்சல் இப்படி உஷ்ணத்தால் பாதித்தவர்கள் மணித்தக்காளி இலையை அடிக்கடி உணவில் சேர்த்து வர உஷ்ணவியாதிகள் சரியாகும்.


வாய்ப்புண், வாய்ரணம் இப்படி உள்ளவர்கள் இந்த கீரையை பச்சையாக மென்று தின்ன வாய் ரணம் ஆறும். இப்படிப்பட்ட மருத்துவதன்மைவாய்ந்த கீரைகளை நாம் பயன்படுத்தி வந்தால் பலவித வியாதிகளிலிருந்து தப்பலாம்

இதன் இலைகள், பழங்களின் முக்கியத்துவம் கருதி வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. மணித் தக்காளி, மஞ்சரா, மிளகுத் தக்காளி, வாயசம் ஆகிய மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு. காயை உலர வைத்து, பதப்படுத்தி தயாரிக்கப்பட்ட மணித்தக்காளி வற்றல் மளிகை மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இலை, காய், பழங்கள் ஆகியவை மருத்துவத்தில் உபயோகமாகின்றன.

மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்  :

இலை, காய் ஆகியவை இந்திய மருத்துவத்தில் முக்கியமானதாகும். இலை, இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. வைட்டமின்கள் பி, பி2 சத்து மிகுந்தது. வயிற்றுப்போக்கையும், வயிற்றுப்புண் மற்றும் வயிறு சம்பந்தமான பிற நோய்களையும் குணப்படுத்தும். சிறுநீர் மற்றும் வியர்வையைப் பெருக்கும். தோல் நோய்களைக் கட்டுப்படுத்தும். பழம் பேதி மருந்தாகும். உடலைப் பலப்படுத்தும். காசநோய், தோல் நோய்கள் தாகத்தைக் குறைக்கும். சிறுநீரை வெளியேற்றும்.

வாய்ப்புண் குணமாக :

மணித்தக்காளியின் பசுமையான இலைகளை, தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து, வதக்கி, துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். பசுமையான 5 இலைகளை மென்று சாற்றை விழுங்கலாம். இது போல ஒரு நாளைக்கு 6 முறைகள் செய்ய முழுமையான குணம் ஏற்படும்.

உடல்சூடு குணமாக :

இலைச்சாறு 5 தேக்கரண்டி அளவு, தினமும் மூன்று வேளைகள் குடித்து வர வேண்டும்.

நாக்குப்புண், குடல்புண் குணமாக :

மணித்தக்காளி இலையை ஏதாவது ஒரு வகையில், உணவில் சேர்த்துக் கொண்டுவர வேண்டும். இந்தக் காலத்தில் காரம் அதிகமில்லாத உணவாகச் சாப்பிட வேண்டும்.

நாக்குச் சுவையின்மையை நீக்கும் தன்மையும் வாந்தியுணர்வைக் கட்டுப்படுத்தும் தன்மையும் மணித்தக்காளி வற்றலுக்கு உண்டு. ஆதலால், கர்ப்பிணிகள் குறைந்த அளவில், தினமும் வற்றலை உணவில் சேர்த்துக் கொண்டு வரலாம். மார்புச்சளி இளகி வெளிப்படவும், மலச்சிக்கல் குறையவும் மணித்தக்காளி வற்றலை உபயோகிக்கலாம்.
Disqus Comments