.

Saturday, May 7, 2016

அல்சரை போக்கும் எளிமையான சித்தமருத்துவம்
இன்றைய அவசரமான உலகில் வயது வித்தியாசமின்றி அனைவரும் சந்திக்கும் ஆரோக்கியப் பிரச்சினை அல்சர். அதிலும் குறிப்பாக விரைவு உணவுகள், ரெடிமேட் உணவுகள் ஆகியவற்றின் வருகைக்கு பின்னர் அல்சரால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன. இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக ‘பெப்டிக் அல்சர்’ (Peptic ulcer) என்கிறோம். இரைப்பையில் புண் ஏற்பட்டால் ‘கேஸ்ட்ரிக் அல்சர்’ (Gastric ulcer) என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் ‘டியோடினல் அல்சர்’ (Duodenal ulcer) என்றும் அழைக்கிறோம்.
காரணங்கள் : சாப்பிடும் வேளைகளில் உணவைத் தவிர்த்து காபி, தேநீர் என அதிகம் பருகுவது... தொடர்ந்து பீடி, சிகரெட் புகைத்தல்... பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்ட பானங்களை அதிகமாகப் பருகுவது... ஊறுகாய் உள்ளிட்ட காரமான உணவுகள் சாப்பிடுவது. பர்கர், ஃபிரைட் ரைஸ் போன்ற செரிக்கக் கடினமான உணவுகளை உண்பது. ஆஸ்பிரின், ப்ரூஃபின் உள்ளிட்ட வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வது அறிகுறிகள் : முதல் அறிகுறி வயிற்று வலிதான். பற்றி எரிவது போன்ற கடுமையான வலி வயிற்றில் ஏற்படும். புண் ஏற்பட்ட இடத்தில் அமிலம் படுவதால் இந்த வலி ஏற்படுகிறது. அடி வயிறு முதல் நெஞ்சுக்கூடு வரையிலான இடத்தில் வலி ஏற்படலாம். வெறும் வயிறாக இருக்கும் நேரத்தில் வலி இன்னும் அதிகரிக்கும். வலி தொடர்ந்து இருக்கும் என்று இல்லை, ஒரு நாள் இருக்கலாம், அடுத்து சில நாட்களுக்கோ, வாரத்துக்கோ வலி இல்லாமல் இருக்கும். பிற்கு, மீண்டும் வலி ஏற்படும். வாந்தியில் ரத்தம் கலந்து வெளியேறுவது, மலத்தில் ரத்தம் வெளியேறுவது, குமட்டல் அல்லது வாந்தி, காரணமின்றி உடல் எடை குறைவது, பசியில் மாறுபாடு போன்றவை ஏற்படலாம். அல்சருக்கான சித்த மருத்துவத்தில் தீர்வுகள்: வால்மிளகை பொடி செய்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம். அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம். காலையில் கண் விழித்ததும் திராட்சைப்பழத்தை சாறு எடுத்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் முழுவதும் குணமாகும். ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம். சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.
கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம். பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம். கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம். மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம். பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம். சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம். அல்சர் வராமல் இருக்க கடைப்பிடிக்க வேண்டியவை : காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும். பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம். அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள் ஆகியவற்றை அதிகமாக உண்ணுவதை தவிர்ப்பது நல்லது.
Disqus Comments