.

Tuesday, April 5, 2016

அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுபவர்களின் கவனத்துக்கு




அடிக்கடி வெளியிடங்களில் சாப்பிடுகிறவர்களுக்கு வருகிற வயிற்றுப் பிரச்னை... சுகாதாரமில்லாத இடங்களில் தண்ணீர் குடிப்பது,  கையேந்தி பவன் தொடங்கி, கண்ட ஓட்டல்களிலும் சாப்பிடுவது போன்றவற்றால் ஏற்படுகிற இந்தப் பிரச்னை பற்றியும், அதைத்  தவிர்க்கும் முறைகள், சிகிச்சைகள் பற்றியும் பேசுகிறார் குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் பட்டா ராதாகிருஷ்ணா.


அமீபா எனப்படும் நுண்ணுயிர் கிருமி பெருங்குடலின்  ஆரம்பப் பகுதியான சீக்கம் அல்லது பெருங்குடலின் முடிவு வளைவு  பகுதியான சிக்மாய்டு ஆகியவற்றில் தங்கி புண்களை உருவாக்கிவிடும். இதனால் ஏற்படும் பிரச்னையே அமீபியாசிஸ். இதை  தமிழில் சீதபேதி என்கிறார்கள். மலம் சரியாக போகாது. கொஞ்சம் கொஞ்சமாக போகும். அப்படி போகும் போது வலியும்  இருக்கும். முக்கி போக வேண்டியிருக்கும்.  சிலருக்கு மலத்தோடு ரத்தமும் வரும்.

சுத்தமில்லாத தண்ணீரை குடிப்பதால்தான் அமீபா கிருமி குடலுக்குள் எளிதாக பரவுகிறது. சுத்தமில்லாத பிளாட்பார கடைகளில்  தொடர்ந்து சாப்பிடுவதும் இன்னொரு காரணம். ஓட்டல்களில் உணவு சமைப்பவர்களுக்கு குடலில் அமீபியாசிஸ்  பிரச்னை இருந்து, அவர்கள் கைகளை சுத்தமாக கழுவாமல் உணவு சமைத்தால் கூட, சாப்பிடுபவர்களுக்கும் பரவிவிடும்.  அதனால் அமீபியாசிஸ் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். முடிந்த வரையில் கண்ட இடத்தில்  தண்ணீர் குடிப்பதையும், சுத்தமில்லாத ஓட்டல்களில் சாப்பிடுவதையும் தவிர்த்து விடுவது நல்லது.

அமீபியாசிஸ் பெருங்குடலில் மலம் தேங்கிப் போகும் சிக்மாய்டு பகுதியை அதிகம் தாக்கும். பெருங்குடலின் வழுவழுப்புத்  தன்மையை அமீபா கிருமி கெடுப்பதால் மலம் எளிதில் வெளியேற முடியாமல் அடைத்துக் கொள்ளும். இதனால்தான் மலம்  கழிக்கும் போது அவதியும் வலியும் ஏற்படுகிறது.  கவனிக்காமல் விடுபவர்களுக்கு மலத்தில் ரத்தம் வர ஆரம்பிக்கும்.  இவர்களுக்கு கிருமித் தொற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். சிலருக்கு சீக்கத்தில் கட்டி கூட ஏற்படும்.

இதை சிலர் கேன்சர் கட்டி என நினைத்துக் கொள்வார்கள். அமீபா கிருமித்தொற்று அதிகமாவதால்தான் உருவாகிறது இந்தக்  கட்டி. இதற்கு `அமீபோமா’ என்று பெயர். மலத்தில் அதிக ரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு, கட்டி உள்ளவர்களுக்கு  லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை செய்துதான் சரிசெய்ய முடியும். ஆரம்ப நிலையில் வெறும் மருந்து, மாத்திரை கள் கொடுத்தே  குணப்படுத்திவிடலாம். அமீபியாசிஸ் பிரச்னையை மலப் பரிசோதனை செய்வதன் மூலம் எளிதாக கண்டுபிடித்து விடலாம்.

அதிக மன அழுத்தம் உள்ள துறைகளில் உள்ளவர்களுக்கு திடீரென எடை பெருமளவு குறையும். உதாரணத்துக்கு 50 கிலோ  எடை உள்ளவர் 10 முதல் 15 கிலோ வரை எடை குறைவார்கள். அவரைப் பரிசோதித்து பார்த்தால் அமீபியாசிஸ் இருக்கும். அதீத  எடை குறைவதற்கும் இது ஒரு காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை உபாதையைக் கழிப்பதில் எந்தப்  பிரச்னை இருந்தாலும் சுய மருத்துவம் செய்து காலத்தை கடத்தாமல் குடலியல் மருத்துவரை பார்த்து பரிசோதனை செய்து  கொள்வது நல்லது. சுத்தமான நீரை அருந்தியும், வீட்டில் சமைக்கும் ஆரோக்கிய உணவுகளை சாப்பிட்டும் வந்தால் அமீபியாசிஸ்  பிரச்னை உங்கள் அருகில் கூட வராது.’’
Disqus Comments