.

Friday, February 19, 2016

பற்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்குவது எப்படி?

பற்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்குவது எப்படி?


ஒருவருக்கு வாய் சுகாதாரம் மிகவும் இன்றியமையாதது. வாய் நன்கு சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், வாயின் வழியே கிருமிகள் உடலினுள் நுழைவதைத் தடுக்க முடியும். அதற்காக தினமும் 2 முறை பற்களைத் துலக்குவோம். இருப்பினும் பற்களில் படியும் கறைகளைப் போக்க முடியாது.


பலர் பற்களில் படியும் கறைகளைப் போக்க பல் மருத்துவரிடம் சென்று சுத்தம் செய்வார்கள். ஆனால் பற்களை பல் மருத்துவமனை சென்று சுத்தம் செய்தால், பற்களின் எனாமல் குறைந்து, பல் கூச்சம் ஏற்படும்.

இங்கு  பற்களில் படிந்திருக்கும் கறைகளை இயற்கை வழியில் நீக்குவது எப்படி என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி, உங்கள் பற்களை சுத்தமாகவும், பளிச்சென்றும் வைத்துக் கொள்ளுங்கள்.

 தினமும் காலையில் எழுந்ததும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி 15-20 நிமிடம் கொப்பளித்து துப்பி, பின் எப்போதும் போன்று பற்களைத் துலக்கவும். இப்படி தினமும் காலையில் எழுந்ததும் செய்து வந்தால், பற்களில் உள்ள கறைகள் நீங்குவதோடு, ஈறுகளும் வலிமையுடன் இருக்கும்.

2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவில், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, டூத் பிரஷ்ஷை நீரில் நனைத்து பற்களைத் துலக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 1-2 முறை செய்து வந்தால், பேக்கிங் சோடாவில் உள்ள சோடியம் பை-கார்பனேட் பற்களில் உள்ள கறைகளை எளிதில் வெளியேற்றும். குறிப்பாக இச்செயலை மாதத்திற்கு 2 முறைக்கு மேல் முயற்சிக்க வேண்டாம்.

கொய்யா பழம் மற்றும் கொய்யா இலை இரண்டுமே பற்களில் உள்ள கறைகளைப் போக்க வல்லது. எனவே முடிந்தால் தினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள் அல்லது சிறிது கொய்யா இலையை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று துப்புங்கள்.

கற்றாழை ஜெல்லை பற்களில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பற்களில் கறைகள் படிவதைத் தடுக்கலாம்

1 டீஸ்பூன் கிராம்பு பொடியில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, பற்களில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பற்களில் உள்ள கறைகளை நீக்கலாம். மேலும் இச்செயலால் வாய் துர்நாற்றம் வீசுவதையும் தடுக்கலாம்.

2 டீஸ்பூன் வெள்ளை வினிகரில் 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து, அக்கலவைக் கொண்டு தினமும் 1-2 முறை வாயைக் கொப்பளிக்கவும். இப்படி செய்வதன் மூலம் வினிகரில் உள்ள அசிட்டிக் ஆசிட் பற்களில் உள்ள கறைகளை நீக்கும்.

இரவில் படுக்கும் முன் ஆரஞ்சு பழத் தோலின் உட்பகுதியைக் கொண்டு பற்கள் மற்றும் ஈறுகளை தேய்த்து, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வாயை கழுவ வேண்டும். இதனால் பற்களில் உள்ள கறைகள் மட்டுமின்றி, கிருமிகளும் அழிந்து வெளியேற்றப்படும்.

2-3 துளிகள் ரோஸ்மேரி ஆயிலை 1 டேபிள் ஸ்பூன் நீரில் கலந்து, அக்கலவையை வாயில் ஊற்றி 10 நிமிடம் கொப்பளித்து, பின் துப்பவும். அதன் பின் பற்களைத் துலக்கவும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வர, பற்காறைகள், வாய் துர்நாற்றம், சொத்தைப் பல் போன்றவை நீங்கும்.

சீஸ் சாப்பிடுவதன் மூலம் எச்சிலில் அல்கலைன் அளவு அதிகரித்து, அதனால் பற்களில் கறைகள் படிவது தடுக்கப்படும். மேலும் சீஸ் பற்களின் மேல் ஓர் பாதுகாப்பு படலத்தை உருவாக்கி, பற்களில் கறைகளை படிவதைத் தடுக்கும். எனவே உணவை உட்கொண்ட பின் சிறிது சீஸ் சாப்பிடுங்கள்.

உணவு உட்கொண்ட ஒரு மணிநேரம் கழித்து ஒரு ஆப்பிளை உட்கொண்டு வந்தால், பற்கள் சுத்தமாவதோடு, ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக இச்செயலால் பற்களில் கறைகள் படிவது தடுக்கப்படும்.

காரமான உணவுகளை உண்பதன் மூலம் உமிழ்நீர் சுரப்பிகள் தூண்டப்பட்டு, வாயில் எச்சிலின் அளவு அதிகரிக்கும். எச்சில் உற்பத்தி அதிகம் இருந்தால், அது ஈறு நோய்கள் மற்றும் பல் சொத்தையை எதிர்த்துப் போராடி, பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

அத்திப்பழம் பற்களின் வலிமையை அதிகரிக்கும் மற்றும் வாயில் எச்சில் உற்பத்தியைத் தூண்டும். எனவே இப்பழத்தை சாப்பிடும் போது நன்கு மென்று பின் விழுங்குங்கள்.

வேப்பங்குச்சியைக் கொண்டு பற்களைத் துலக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் இதர மருத்துவ குணங்களால், வாய் ஆரோக்கியம் மேம்படுவதோடு, பற்களும் கறைகளின்றி பளிச்சென்று மின்னும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும். ஏனெனில் இதில் சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் அதிகம் இருக்கும். வாயில் உள்ள பாக்டீரியாக்களுக்கு இவை சிறந்த உணவுகள் என்பதால், இவற்றை உட்கொள்வதை நிறுத்தினாலேயே வாயில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

எவ்வளவு தான் வாயை நன்கு பராமரித்து வந்தாலும், வருடத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை சந்தித்து பற்கள் மற்றும் ஈறுகளை பரிசோதித்துக் கொள்வது வாய் ஆரோக்கியத்தை இன்னும் அதிகரிக்கும்.

Disqus Comments