.

Monday, February 22, 2016

இரைப்பை கேன்சர் தடுப்பது எப்படி?

இரைப்பை கேன்சர் தடுப்பது எப்படி?

முறையான உணவு முறை இன்றி வாய்க்கு பிடித்ததை எல்லாம் சாப்பிடுதல், பரபரப்பான வாழ்க்கை முறையால் ஏற்படும் டென்ஷன் போன்ற பல காரணங்கள் இரைப்பை கேன்சரை உருவாக்குகிறது. அல்சர், வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளின் பாதிப்பு, புகைபிடித்தல், மது போன்ற பழக்கங்களால் 30 வயதிலேயே இரைப்பை கேன்சர் வர வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இரைப்பை கேன்சர் வராமல் தடுப்பது குறித்து வயிறு மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சரவணன் விளக்கம் அளிக்கிறார். இரைப்பை கேன்சர் அதிகளவில் ஆண்களையே தாக்குகிறது. இப்போது 30 வயது முதல் 35 வயதுக்குள் இந்த நோயின் தாக்கம் அதிகம் உள்ளது.


இரைப்பையில் கேன்சர் உருவாக ‘ஹெலிகோபேக்டர் பைலோரி’ என்ற கிருமியும் காரணம். இது முதலில் இரைப்பையில் அல்சரை உருவாக்குகிறது. அந்த அல்சரே, கேன்சர் எனும் அடுத்த கட்டத்தை அடைகிறது. புகைபிடித்தல், புகையிலை போன்ற பழக்கம் உள்ளவர்களுக்கும் இரைப்பையில் கேன்சர் ஏற்பட வாய்ப்பு அதிகம். வயிற்றுப் பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சையின் காரணமாக இரைப்பையின் உள்பக்க திசுக்களின் மீது பித்தநீர் பட்டுக்கொண்டே இருக்கும். நாளடைவில் இதுவே கேன்சராக மாறவும் வாய்ப்புள்ளது. மதுப்பழக்கம் மற்றும் மசாலா கலந்த உணவுகளும் இந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் இரைப்பையின் உள்பகுதியில் ஏற்ப டும் பாலிப்ஸ் என அழைக்கப்படும் சிறு சிறு கட்டிகளும் நாளடைவில் கேன்சர் கட்டிகளாக மாறலாம். பரம்பரைக் காரணங்களாலும் இந்நோய் ஏற்படலாம்.

இரைப்பையில் ஏற்படும் கேன்சரை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். முதல் கட்டமாக பசி குறைந்து எடை குறையும். அப்போதே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆனால் பசியின்மை மற்றும் எடை குறைதலை மக்கள் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்வதால் கேன்சரை துவக்கத்தில் கண்டறிந்து சிகிச்சை செய்து கொள்ள முடியாமல் போகிறது. வெளிப்புற அறிகுறிகளை வைத்தே எந்த இடத்தில் கேன்சர் வந்துள்ளது என தெரிந்து கொள்ள முடியும்.

உணவுக்குழாய் மற்றும் இரைப்பை சேரும் இடத்தில் கேன்சர் இருந்தால் உணவு விழுங்குவதற்கு சிரமம் ஏற்படும். உணவுக்குழாய் கேன்சர் எனில் அதன் பாதிப்பு இரைப்பையின் மேல் புறத்தில் வரும். சிறு குடலோடு சேரும் இரைப்பையின் கடைசிப் பகுதியில் கேன்சர் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அப்பகுதி அடைபட்டு விடும். இதனால் சிறு குடலுக்குள் உணவைத் தள்ள இரைப்பை சிரமப்படும். அப்போது வயிற்றுக்குள் பந்து உருள்வது போன்ற உணர்வு இருக்கும். பின்னர் வாந்தி ஏற்படும். சிலருக்கு இரைப்பை கேன்சர் எந்த அறிகுறியும் இன்றி வளர்ந்து பின்னர் கல்லீரல் அல்லது நுரையீரலை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. இதன் அடுத்த கட்டமாக கல்லீரல் வீக்கம் இருக்கலாம். இது கேன்சரின் முற்றிய நிலை. கல்லீரலை அல்ட்ராசவுண்ட் மூலம் ஸ்கேன் செய்து கண்டறியலாம். இரைப்பை கேன்சர் முற்றும் வரை விடாமல் ஆரம்ப அறிகுறிகளை முறையாக பரிசோதிப்பதன் மூலம் நோயை குணப்படுத்த முடியும்.

பாதுகாப்பு முறை: இரைப்பை கேன்சரைத் தவிர்க்க வயிற்றில் அல்சர் ஏற்படுவதற்கான காரணிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சத்தான உணவுமுறை, உடற்பயிற்சி அவசியம். டென்ஷன் குறைக்க யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட மனப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அசைவம், மசாலா கலந்த உணவுகள் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். புகைபிடித்தல் மற்றும் புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள் அதைக் கைவிடுவது நல்லது. ஜீரணப் பிரச்னை, பசியின்மை மற்றும் எடை குறைதல் உள்ளிட்ட பிரச்னைகள் துவங்கும் போதே அதற்கான பரிசோதனைகள் செய்து கேன்சரா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம்.   – ஸ்ரீதேவி

ரெசிபி

சிக்கன் சாண்ட்விச்: தேவையான அளவு சிக்கனை பொடியாக நறுக்கி உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். கோதுமை ரொட்டித் துண்டில் ஒரு பக்கத்தில் தக்காளி சாஸ் தடவி அதன் மீது பட்டர் வைத்து சிக்கன், கொத்தமல்லித் தழை தூவி இன்னொரு பிரட் துண்டில் பட்டர் தடவி அதன் மேல் வைத்து சாப்பிடலாம்.

உருளைக் கிழங்கு சாலட்: சிறிய அளவுள்ள உருளைக்கிழங்குகள் பத்து வேகவைத்து தோலை உரித்துக் கொள்ளவும். பூண்டு துருவல் ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு டீஸ்பூன், ஆலிவ் ஆயில் ஒரு டீஸ்பூன், உப்பு மற்றும் மிளகுத்தூள், விரும்பினால் தக்காளி சாஸ், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து கலந்தால் உருளைக்கிழங்கு சாலட் ரெடி.

சோயா தோசை: 200 கிராம் சோயா பருப்பை 12 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். புழுங்கல் அரிசி 100 கிராம், வெந்தயம் சிறிதளவு சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்த சோயா மாவுடன் சேர்த்து 12 மணி நேரம் வைத்திருந்து புளிக்க விடவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப், கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கலந்து தோசையாக வார்க்கவும்.

டயட்

வயிற்று  பகுதியில் ஏற்படும் கேன்சர் அடினோகாஸ்டினோமோ என அழைக்கப்படுகிறது. வயிற்றுப் பகுதியில் எச்.5 என அழைக்கப்படும் பாக்டீரியா கிருமியின் தாக்குதலே கேன்சரை உருவாக்குகிறது. உணவில் காய்கறி, பழங்கள் சேர்க்காமல் இருப்பது, உணவில் அதிக உப்பு, காரம் சேர்ப்பது, சூடான உணவாக எடுத்துக் கொள்வது, அல்சர் மற்றும் செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், புகை பிடிப்பது, புகையிலை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்களையும் இந்நோய் எளிதில் தாக்குகிறது. செரிமானப் பிரச்னை, வயிற்று வலி, லேசான மயக்கம், வாந்தி, பசியின்மை, நெஞ்சு எரிச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். பால், பால் பொருட்கள், வைட்டமின்-சி சத்துள்ள பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மூன்று வேளை வயிறு முட்ட சாப்பிடுவதற்கு பதிலாக 6 வேளை பிரித்து உண்ணலாம். பேரிக்காய், வாழைப்பழம், கருப்பு திராட்சை, எலுமிச்சை, பப்பாளி, சாத்துக்குடி, முட்டைக்கோஸ், கேரட், காளான், பச்சை மற்றும் மஞ்சள் நிற காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சோயா பருப்பு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.  உணவில் மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும்’’ என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

*  பாற்சொரிக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் சேர்த்து சூப் வைத்து அதிகாலையில் குடித்தால் பசியின்மை குணமாகும்.
*  பிரண்டையின் இளந்தண்டை நெய் சேர்த்து வதக்கி சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.
*  புதினா இலைச்சாறு, ஆரஞ்சு பழச்சாறு இரண்டையும் சம அளவில் கலந்து குடித்தால் வாந்தி, ருசியின்மை தீரும்.
*  புதினாவை காய வைத்து பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் இரைப்பை பலம் அடையும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.
*  புளியாரை கீரை சாற்றில் ஓமத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
*  பெருங்காயம் ஒரு பங்கு, வெந்தயம் பத்து பங்கு எடுத்து இரண்டையும் வறுத்து பொடி செய்து கால் ஸ்பூன் பொடியை மோரில் கலந்து குடித்தால் கடுமையான வயிற்று வலியும்        குணமாகும்.
*  பொன்னாங்கண்ணி கீரையுடன் பருப்பு சேர்த்து அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கல்லீரல் சார்ந்த நோய்கள் குணமாகும்.

Disqus Comments