வறுமையில் வாடுகிற பலருக்கும் பல நாட்கள், பல வேளைகள் பசியாற்றுகிற உணவு வாழைப்பழம். இது ஒரு பக்கமிருக்க, வயிறு முட்ட விருந்தே உண்டாலும், கடைசியாக ஒரு வாழைப்பழத்தை உள்ளே தள்ளினால்தான் திருப்தியாகிறவர்கள் இன்னொரு பக்கம். இரவு உணவுக்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடுகிற பழக்கம் அனேகம் பேருக்கு உண்டு. மலச்சிக்கலுக்கு அதுதான் மருந்து என்பது காலங்காலமாக மக்களிடம் பதிந்து போன எண்ணம். இது சரியா? தெளிவுப்படுத்துகிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா.
இரவு உணவிற்குப் பின் எந்த பழமும் சாப்பிடுவது நல்லது கிடையாது. அதிலும் குறிப்பாக வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்தது இல்லை. ஏனென்றால், அதில் உள்ள Fructose என்ற சர்க்கரை சத்து கொழுப்பாக மாறி நமது உடலில் நிரந்தரமாக தங்கி விடும். இதன் காரணமாக உடலில் கலோரி அதிகமாகும். உடல் எடை அதிகரிக்கும். ஒரு சிலர் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதை பழக்கமாக கொண்டவர்கள் சாப்பிட்ட உடனே வாழைப்பழம் சாப்பிடக்கூடாது.
யாரெல்லாம் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடலாம் என்பதிலும் கட்டுப்பாடு உள்ளது. பனிரெண்டு வயது வரை குழந்தைகளுக்கு இரவில் வாழைப்பழம் கொடுக்கலாம். இவர்கள் காலை, மாலை என எந்த நேரத்திலும் இதை சாப்பிடலாம். தொடர்ந்து இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஒருசில குழந்தைகளுக்கு சளித்தொல்லை ஏற்படும்.
வயதானவர்களும் நீரிழிவு உள்ளவர்களும் சாப்பிடக்கூடாது. விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்கள் இரவுஉணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். இதன் காரணமாக இவர்களுக்கு உடலில் கலோரி அளவு அதிகரிக்கும். எனவே, இவர்களால் களைப்படையாமல் நீண்ட நேரம் உடற்பயிற்சிகள் செய்ய முடியும்.’’