.

Tuesday, November 10, 2015

வயிற்று போக்கா அலட்சியம் வேண்டாம்....நமது உணவு பழக்க வழக்கம் மற்றும் மாசு கலந்த தண்ணீரால் வயிற்று போக்கு ஏற்படுகிறது. வயிற்று போக்கு சாதாரணம் தானே என அலட்சியம் வேண்டாம். இதனை கவனிக்காமல் விட்டால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகி விடும். வயிற்றுபோக்கு பற்றி மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரசில்லாசாரோன் இஸ்ரேல் தரும் விளக்கத்தை பார்ப்போம்.


ஒரு நாளில் 5 தடவைக்கு மேல் அதிக நீர்த்தன்மையுடன் மல உபாதை தென்பட்டால் அதனை வயிற்று போக்காக கருத வேண்டும். 100 க்கு 80 பேர் வயிற்று போக்கால் பாதிக்கப்படுகிறார்கள். எல்லா குடும்பங்களிலும் வயிற்று போக்கு காணப்பட்டிருக்கும். ஆனால் அது அதிகமாகும் போது மருத்துவ சிகிச்சை அவசியம் தேவை. வயிற்று போக்குடன் ரத்தம், சளி போன்றவை கலந்து வெளியேறினால் அது டிசன்றி எனப்படுகிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஐபிஎஸ் என அழைக்கப்படும் இரிற்ற பிள்பவ்வல் சின்ட்ரோம் என்பதே டயரியாவிற்கு முக்கிய காரணம். இதில் பல அறிகுறிகள் காணப்படும். கொளுத்தி பிடிக்கும் வயற்றுவலி. மலம் போவதில் ஏற்படும் பல தொல்லைகள் இதனுள் உள்ளது. வயிற்று போக்கின் போது குடல் அதிக படியாக காய்வதும் அதிக நீரை வெளிப்படுத்தியும் நீர்த் தன்மையை உறியும் சக்தியை இழக்கும் நிலையும் நிகழ்கிறது.

முக்கிய காரணங்கள்

பெரும்பாலும் குடலில் நோய் தொற்று ஏற்படும் போது வயிற்கு போக்கு ஏற்படுகிறது.

* பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று: பாக்டீரியாக்களால் வயிற்று போக்கு ஏற்படுகிறது.

* வைரஸ் கிருமிகளால் வரும் தொற்று: வைரஸ்கள் பொதுவாக தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளை அதிகமாக பாதிக்கும். அதன் தாக்கம் 3 முதல் 7 நாட்கள் வரை தாய்ப்பாலை செரிக்க செய்யாமல் வயிற்று போக்கை ஏற்படுத்துகிறது.

ஒட்டுண்ணிகளால் ஏற்படும் தொற்று: 

எண்டமீபா கிஸ்டலேடிகா மற்றும் கிரிப்டோஸ் போர்டியம் ஆகிய நுண் உயிரிகளால் அமீபிக் வயிற்று போக்கு ஏற்படுகிறது. குடலில் ஏற்படும் அழர்ச்சி, குடல் புண் ஆகியவற்றால் வயிற்றுபோக்கு ஏற்படுகிறது.சிலருக்கு பால் அருந்துவதால் வயிற்றுபோக்கு ஏற்படுகிறது. ஆன்டிபயாடிக், புற்றுநோய்க்கு எடுக்கும் மருந்து, குடல் புண்ணுக்கு எடுக்கும் மருந்துகளாலும் வயிற்று போக்கு ஏற்படலாம். மன அழுத்தம், பயம் ஆகியன காரணமாகவும் வயிற்றுப் போக்கு ஏற்படலாம்.

அறிகுறிகள்

உடல் சோர்வு, மேல் வயிற்று பகுதியில் அதிக வலி, செரிமானம் இல்லாமை, நீர்த்தன்மையுடன் வயிற்றுப்போக்கு, வாந்தி அல்லது வாந்தி வருவது போன்ற உணர்வு, குறைந்த ரத்த அழுத்தம், காய்ச்சல், உடல் எடை குறைவு, வறன்ட தோல், சிறுநீர் வண்ண மாற்றம். வகைகள்

அக்யூட்டயரியா:

பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஒட்டுண்ணிகள் இவ்வகை வயிற்று போக்கிற்கு முக்கிய காரணம். இவற்றின் பாதிப்பினால் ஏற்படும் வயிற்று போக்கு சில மணி நேரமோ, சிலருக்கு 2 முதல் 7 நாட்கள் வரையோ அதன் அறி குறி தொடரலாம். இவ்வகை வயிற்று போக்கில் ரத்தம், சளி கலந்து மலம் வெளியாகும்.

க்ரானிக்டயரியா: அல்சர் மற்றும் குடல் அழர்ச்சி (crohns)யால் ஏற்படுகிறது. சிலருக்கு மருந்தினாலும், தைராய்டு பாதிப்பு, குடல் அறுவை சிகிச்சை, குடலில் கட்டிகள், ரத்த ஓட்ட குறைவு, போன்ற நோய்களின் பாதிப்பால் 4 வாரங்களுக்கு மேல் தொடரலாம்.

பரிசோதனைகள்

மல பரிசோதனை, ரத்த பரிசோதனை, கோலனோஸ் கோப்பி அல்லது சிக் மாங்டோஸ் கோப்பி ( குடலில் உள்ள நோய் தொற்றை அறிதல்)

குடலில் ஏற்படும் மாற்றம்

ஆஸ்மாட்டிக்டயரியா: சிறு குடல் உணவில் உள்ள நீர்த்தன்மையை உறிஞ்சும் தன்மையை இழந்து உடலில் இருந்து வெளியேற்றுகிறது.

செக்ரீட்டரிடயரியா: குடலில் அதிகளவு குளோரைட் இருந்து அலர்ஜியை ஏற்படுத்தி குடலில் அசைவை அதிகரித்து வயிற்று போக்கை ஏற்படுத்துகிறது.

சிகிச்சை

தற்காலிகமாக ஏற்படும் வயிற்று போக்கிற்கு சிகிச்சை தேவையில்லை. உடலில் நீர்த் தன்மை குறையும் போது எலக்ட்ரோலைட் ( ஓ ஆர் எஸ் ) கரைசல் உட்கொள்ள வேண்டும். அக்கியூட் மற்றும் க்ரானிக் வகை டயரியாவின் போது அதன் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மூலிகை நிவாரணம்

மாதுளம் பழத்தோடு, மருத மரபட்டை, வில்வம், இசப்கால், ஆலமர மொட்டுகள், கருவேல மரம், வெந்தயம், நெல்லிக்காய், சதகுப்பை, ஓமம், சீரகம், இந்துப்பு, தாண்டிக்காய், பெருங்காயம், அத்தி போன்றவை சிறந்த மருந்தாகும்.

உணவு பழக்கம்

வயிற்றுபோக்கின் போது வெது வெதுப்பான நீர் உட்கொள்ளும் போது குடலில் உள்ள விஷங்கள் வெளியேறும். உடலில் நீர்ச்சத்தும் சமநிலைப் படுத்தப்படும். அரோரூட் மாவு, பார்லி, அரிசிக் கஞ்சி சாப்பிடலாம். சோடியம் குளோரைடு கலந்த நீர், இளநீர், சோடா அருந்தலாம். உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று போக்கு என உறுதி செய்தால் மோர், பழரசம், இளநீர் சாப்பிடலாம். காபி, மதுபானங்களை தவிர்க்க வேண்டும்.

வீட்டு வைத்தியம்

தயிர், சர்க்கரை பாகு, இஞ்சி ஆகியன கலந்த கலவை, வெந்தயத்தில் உள்ள குளகுளப்பு தன்மை வயிற்று போக்கிற்கு எதிராக செயல்படும். அடிக்கடி ஆப்பிள் சிடர் வினிகர் சிறிதளவில் அருந்தலாம். வாழைபழத்துடன் புளிகரைசலை இருவேளை சாப்பிடலாம்.கறிவேப்பிலை அரைத்து ஒரு கரண்டி தேன் சேர்த்து சாப்பிடலாம். மாதுளைபழச்சாறு அல்லது மோர் அருந்தலாம். அத்திப்பழம், பேரீச்சை. திராட்சை, உட்கொள்ளலாம். ஒரு கரண்டி மாங்கொட்டை பொடி தேனுடன் கலந்து சாப்பிடலாம்.

வரும் முன் காத்தல்

தன் சுத்தத்தை முறையாக கடை பிடிக்க வேண்டும். சுத்தமான நீரை அருந்துதல், குழந்தைகளை சுத்தமான பேணுதல், வீடு, தரை மற்றும் சுற்றுப் பகுதியை சுத்தமாக வைத்து சூரிய ஒளி படும் நிலையில் அனைவரும் சுத்தத்தை கடைபிடித்தாலே வயிற்று போக்கு ஏற்படாது.
Disqus Comments