குங்குமப்பூ என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது, கர்ப்பிணிகள் அதை பாலில் போட்டு குடித்தால், பிறக்கும் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்பது தான். உண்மையிலேயே குங்குமப்பூ சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அதுப்போல் இதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவை உடலுக்கும் நல்லது. குறிப்பாக குங்குமப்பூ செரிமான பிரச்சனையை சரிசெய்யும், இதய நோயைத் தடுக்கும், புற்றுநோயை எதிர்த்துப் போராடும். அதுமட்டுமின்றி தூக்கமின்மையை போக்கவும் இது உதவும். மொத்தத்தில் உடலியக்கம் சீராக இயங்க உதவும். இப்போது வெள்ளையாவதற்கு குங்குமப்பூவை பாலில் போட்டு குடிப்பதற்கு பதிலாக, அவற்றைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போமா!!!
குங்குமப்பூ மற்றும் தேன்
ஒரு ஸ்பூன் தேனில் சிறிது குங்குமப்பூவை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி மாதத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், சருமத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காணலாம்.
குங்குமப்பூ மற்றும் பால்
குங்குமப்பூ சிறிதை பாலில் போட்டு 1 மணிநேரம் ஊற வைத்து, அதில் 1 டீஸ்பூன் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், சோர்ந்து காணப்படும் முகம் பிரகாசமாக இருக்கும்.
குங்குமப்பூ மற்றும் மில்க் க்ரீம்
குங்குமப்பூவை இரவில் படுக்கும் போதே மில்க் க்ரீம்மில் சேர்த்து கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து, மறு நாள் காலையில் முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ, வெயிலினால் கருமையடைந்த சருமத்தை பொலிவாக்கலாம்.
குங்குமப்பூ மற்றும் ரோஸ் வாட்டர்
குங்குமப்பூவை சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, காட்டனில் நனைத்து முகத்தில் தடவி வந்தால், இது நல்ல டோனர் போன்று செயல்படுவதோடு, இளமையான தோற்றத்தையும் தரும்.
குங்குமப்பூ மற்றும் துளசி இலைகள்
குங்குமப்பூ மற்றும் துளசியை அரைத்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி செய்தால், பருக்களின் பிரச்சனை குறையும். மேலும் முகத்தின் பொலிவும் மேம்படும்.
குங்குமப்பூ மற்றும் சந்தனப் பொடி
குங்குமப்பூ, பால் மற்றும் சந்தனப் பொடியை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், முகம் புத்துணர்ச்சியுடனும், வெள்ளையாகவும் இருக்கும்.
குங்குமப்பூ மற்றும் ஆலிவ் ஆயில்
குங்குமப்பூவை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, கழுவினால், சருமம் மென்மையாகவும், கருமையின்றியும் இருக்கும்.