விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் போன்றவற்றைப் பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா? சாப்பிட்டால் ஜீரணமாகுமா? நெஞ்சு கறிக்குமா? எதுக்கிக்கொண்டே இருக்குமா? இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம்.
பித்தம் சிறிது எண்ணெய்ப்பசையுடன் கூடியது, செயலில் கூர்மையானது, சூடானது, லேசானது, துர்நாற்றமுடையது, இளகும் தன்மையுடையது, நீர்த்தது ஆகிய குணங்களைக் கொண்டது. தொப்புள், இரைப்பை, வியர்வை, நிணநீர், இரத்தம், கண்கள், தோல் இவற்றை இருப்பிடமாகக் கொண்டுள்ளது. உடலுக்குப் பித்தம் பல நன்மைகளைச் செய்கிறது.
உண்ட உணவை சீரணிக்கச் செய்தல், உடலுக்குத் தேவையான வெப்பம், விருப்பம், பசி, தாகம், ஒளி, தெளிவு, பார்வை, நினைவாற்றல், திறமை, மென்மை போன்ற நல்ல செயல்களைச் செய்து உடலைப்பாதுகாக்கிறது.
தன் நிலையிலிருந்து பித்தம் சீற்றம் கொண்டு உடலில் அதிகரித்து விட்டால் - தோலில் மஞ்சள் நிறம் உண்டாகுதல், சோர்வு, புலன்களுக்கு வலுவின்மை, உடலில் சக்திக்குறைவு, குளிர்ச்சியில் விருப்பம், எரிச்சல், வாயில் கசப்புச்சுவையை ஏற்படுத்துதல், நாவறட்சி, மூர்ச்சை, தூக்கம் குறைதல், கோபம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
இந்த பித்தம் தொடர்பான பிரச்சனைகளையும், அதனை போக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் இப்போது பார்ப்போம்.
இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.
இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.
ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.
அகத்திகீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.
பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.
கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.
எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.