.

Friday, October 16, 2015

பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள் !!பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள் !!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளம் தாய்மார்களின் கவலை எல்லாம் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது. இளம் தாய்மார்களின் கவலை போக்கவே இந்த கட்டுரை.
குழந்தைக்கு முதல் மற்றும் முக்கியமான உணவே தாய்ப்பால் தான்.

குழந்தை பிறந்தது முதல் ஒரு வருட காலம் வரை தாய்ப்பால் கொடுப்பது சிறந்து.

குழந்தை பிறந்து முதல் நான்கு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதற்குப் பிறகு பசும்பால் அல்லது எருமைப்பால் கொடுக்கலாம். ஆனால் பால் சுகதாரமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

முடிந்தவரை நள்ளிரவில் குழந்தைக்கு பால் கொடுப்பதைத் தவிர்க்கப் பாருங்கள். காரணம், நாளடைவில் குழந்தையின் பற்களில் சொத்தை விழ இது காரணமாக அமையலாம் என்பதோடு, பால் காதுக்குள் நுழைந்து அப்படியே அசையாமல் குழந்தை தூங்கிவிடலாம். காதில் சில தொற்று நோய்கள் உண்டாகக்கூடும்.

நான்காவது மாதம் :

குழந்தை பிறந்து நான்கு மாதம் ஆகிவிட்டால், பருப்புத் தண்ணீர் அல்லது கேரட் தண்ணீரை கொடுத்து பழக்கலாம்.

ஐந்தாவது மாதம் :

குழந்தை பிறந்து ஐந்து மாதங்கள் ஆனவுடன் காய்கறி மற்றும் பழங்களைக் கொடுக்கத் தொடங்கலாம்.

பழங்களில் ஆப்பிள், வாழைப்பழம், பழுத்த பப்பாளி ஆகியவை உங்களது முதல் விருப்பமாக இருப்பது நல்லது.

மலை வாழைப்பழம் கொடுக்கலாம். பச்சை வாழை மற்றும் ரஸ்தாளி அளிப்பதைத் தவிர்க்கலாம்.

வைட்டமின் சி சத்து நிறைய அடங்கியவை - சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவை குழந்தைக்குத் தவறாமல் கொடுக்கலாம். பெற்றோருக்கு இந்த சிட்ரஸ் வகைப்பழங்கள் அலர்ஜி என்றால், குழந்தைக்கு சுமார் ஒன்றரை வயது ஆன பிறகு இதுபோன்ற பழங்களைக் கொடுத்துப் பார்க்கலாம்.

குழந்தைகளால் சீக்கிரம் ஜீரணிக்கக் கூடியவைகளும், அவர்களால் விரும்பப்படுவதுமான பிசைந்த வாழைப்பழங்களும், கடைந்த ஆப்பிள்களும் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் கொடுக்கும் உணவு வகைகளில் சிறந்தது.

பெரும்பான்மையான எல்லா பழங்களையும், காய்கறிகளையும் மிக்ஸியில் அரைத்து குழந்தைகளுக்குகக் கூழ் போலாக்கி கொடுக்கலாம். பருப்பு வகைகளையும் இப்படி கொடுக்கலாம்.

ஆறாவது மாதம் :

ஆறாவது மாதம் முட்டையில் உள்ள மஞ்சள் கருவைக் கொடுக்கலாம். இட்லியும் கொடுக்கத் தொடங்கலாம். அரை ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொடுக்கலாம்.

இட்லிக்கு சர்க்கரையைத் தொட்டு கொடுப்பதைவிட, தெளிவான ரசம் போன்ற வற்றைத் தொட்டுக் கொள்ளலாம். ஏனென்றால் இனிப்பு மட்டுமல்லாது மீதி சுவைகளும் குழந்தையின் நாக்குக்கு பிடிபடுவது நல்லது. அப்போதுதான் வளர்ந்தபிறகு பலவகை உணவுகளை குழந்தை உண்ணத் தயராகும்.

சிறுகச்சிறுக புதிய உணவு வகைகளில் குழந்தையின் அனுபவத்தை வளர்க்க வேண்டும். குழந்தை ஆறு மாதக் குழந்தையாகும்போது உணவில் சிறு பகுதி புரதம் செறிந்த இறைச்சி, மீன், முட்டை, கோழிக் குஞ்சியின் இறைச்சி இவைகளைச் சேர்க்கலாம். ஆனால் இவை நன்றாகப் பக்குவப் படுத்தப்பட்டதாகவும், மிருதுவாகவும் உள்ளதாயும் இருத்தல் அவசியம்.

ஏழாவது மாதம் :

ஏழாவது மாதத்தில் சப்போட்டா போன்ற பழங்களைக் கொடுக்கலாம்.

தோசை, பால் குறைவான சப்பாத்தி, தானிய சுண்டல், மிக்ஸ்ட் ரைஸ், கிச்சடி, உப்புமா, பழங்கள் சாப்பிடக் கொடுத்துப் பழக வேண்டும்.

பத்தாவது மாதம் :

குழந்தைக்குப் பத்து மாதம் ஆனதும் சாதத்தையும் பருப்பையும் குழைத்துப் பிசைந்து வெண் பொங்கல் போலாக்கி காய்கறித்துண்டுகளையும் சேர்த்துக் கொடுக்கலாம்.

குழந்தைகள் காய்கறிகளைக் துப்பிவிடுகிறது என்றால் அவற்றை சூப்பாக்கி கொடுக்கலாம். தினமும் ஒருமுறை இப்படி சாப்பிடலாம். நடுவே வெரைட்டிக்கு ரொட்டித் துண்டில் வெண்ணெய் மற்றும் ஜாம் தடவித் தரலாமே.

காய்ந்த திராட்சை, பேரிச்சம்பழம் ஆகியவை குழந்தையின் உடலுக்கு நல்லது. ஆனால் இவற்றை சாப்பிட்டபிறகு மறக்காமல் பற்களைச் சுத்தம் செய்து விடுங்கள்.

எப்போதுமே ஒரே நாளில் இரண்டு வித புதிய உணவுகளைக் குழந்தைக்குக் அறிமுகப்படுத்த வேண்டாம். சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகே அடுத்த புதிய உணவுப் பொருளை அறிமுகப்படுத்துங்கள். அப்போதுதான் குழந்தைக்கு வயிற்றுப்போக்கோ வேறு ஏதாவது சிக்கலோ ஏற்பட்டால் அது எந்த உணவினால் என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.

அதிகப்படியான உப்பும், சர்க்கரையும் வேண்டாமே :

முதலில் காரம் இல்லாத உணவு வகைகளைக் கொடுத்து, பிறகே கொஞ்சம் கொஞ்சமாக காரம் மற்றும் மசாலா சேர்ந்த பொருட்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம்.

உணவில் மிக அதிகமான சர்க்கரையையும், உப்பையும் சேர்க்காதீர்கள், அதிகப்படியான உப்பு உடம்பில் நீர் இல்லாமல் செய்துவிடும், அதிகப் படியான சொத்தைப் பல்லை உண்டாக்கும் பிற்காலத்தில் இதனால் பலவிதமான பிரச்சினைகள் உருவாகும். முக்கியமாக 1 வயது வரை உள்ள குழந்தைகள் இனிப்பு வகைகளை குறைக்க வேண்டும். குழந்தையின் சுவை உறுப்பு நன்றாக வேலை செய்யக்கூடியது. ஆகவே, அதற்கு அதிகப்படியான உப்பும், சர்க்கரையும் தேவையில்லை.

குழந்தைகளிடம் உணவைத் திணிக்காதீர்கள் :

சில சமயங்களில் குழந்தை எல்லா வித உணவுகளையும் புறக்கணிக்கக்கூடும். இது அநேகமாக வழக்கத்தில் இருந்து மாறுபடுவதால் ஏற்படுவது.

குழந்தை திட உணவை புறக் கணித்தால் அதனைச் சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்தாதீர்கள். திட உணவின் அமைப்பும், ருசியும் பாலினின்றும் வெகுவாக வேறு படுவதாலும், விழுங்கும் முறை வழக்கமான ஊறிஞ்சிக் குடிக்கும் முறையிலிருந்து வேறுபடுவதாலும் குழந்தை புறக்கணிக்கக் கூடும்.

குழந்தை உணவு உட்கொள்வதில் ஆவலாக இல்லாவிடினும் கவலைப்படாதீர்கள். அதனைக் கட்டாயபடுத்தாதீர்கள். மாறாக வேறு ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள் வேறுபட்ட தானியம் அல்லது வேறு வகையான பழக்கூழ் போன்றவை. அப்பொழுதும் குழந்தை அவைகளை புறக்கணித்தால் சில நாட்கள் சென்ற பிறகு மறுபடியும் முயற்சி செய்யுங்கள்.

ஒவ்வொரு புதிய உணவு வகைகளையும் குழந்தை ருசி பார்க்கட்டும். அதன் ருசியையும் அதன் கெட்டிதன்மையும் பழக்கப்படுத்திக் கொள்ளட்டும்.

குழந்தைக்கு முதலில் கொஞ்சம் கொடுங்கள், அதைச் சாப்பிட்டு முடித்த பிறகு இன்னும் கொஞ்சம் கொடுங்கள். அவர் சிறிது அதிகமாக சாப்பிட்டால் அதை அவனுக்குக் கொடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகப்படுத்தி அவன் பசிக்கும் ஏற்ப கொடுங்கள்.

குழந்தையைப் பெருக்க வைக்கும் எந்தவிதமான உணவையும் கொடுக்காதீர்கள் உதாரணமாக, அதிகப்படியான வெண்ணெய் அல்லது நெய், கிரீம் அல்லது தித்திப்பான முட்டையும், பாலும் சேர்ந்த திண்பண்ட வகை இவைகள் குழந்தையைப் பெருக்க வைக்கும், எவ்வளவு எலும்பும் தோலுமாக இருந்தாலும் அநேகமாக முடிவில் தடித்த குழந்தையாக ஆகி, பிற்காலத்தில் கொழுத்த மனிதனாவான்.
புளிக்காத ஃபிரிட்ஜில் வைக்காத தயில் சாதம் குழந்தைகளுக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். இதுபோன்ற தயிரில் நல்ல பாக்டீயா இருப்பதால் உடல்நலனுக்கு மிகவும் நல்லது.

தினம் தோறும் நான்கு அல்லது ஐந்து முறையாவது குழந்தைகளுக்கு காய்கறி உணவுகளையும், பழங்களையும் கொடுங்கள். குழந்தைகளுக்கு நார்ச்சத்து மிகவும் முக்கியம். அவை அதிகம் உள்ள முழுத் தானிய பிரெட் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுங்கள்.

சில குழந்தைகள் கையில் எதை கிடைத்தாலும் வாயில் போட்டுக் கொள்ளும். இது போன்ற குழந்தைகளுக்கு கையில் பிடித்துக் கொள்ளும் வகையிலான ரொட்டி, அப்பம் அல்லது ஆப்பிள், வாழைப்பழம், காரட் போன்றவற்றை கொடுக்கலாம்.

அதிகமான கடின உணவைக் கடித்துத் தின்பது குழந்தையின் ஈறுகளும், பற்களும் ஆரோக்கியமாக வளர உதவி புரிகின்றது. குழந்தைக்கு குறிப்பாக பல் முளைக்கும் சமயம் இது சௌகாரியமாப அமையும்.

இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங் கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.

குழந்தைகளுக்கு நிறைய கலர்ஃபுல்லான காய்கறிகள், பழங்கள் என்று அதிகமாக கொடுக்கலாம். சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், பி புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு இரும்புச் சத்து, புரசச்சத்து அதிகம் தேவைப்படும். எனவே கொழுப்பில்லாத மட்டன் சூப்பில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் சிறிதளவு கொடுத்துப் பாருங்கள். குழந்தைக்கு ஜீரணமானால் இந்த சூப்பை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடுக்கலாம். இதைத் தவிர சிக்கன் சூப், வேகவைத்து மசித்த பசலைக்கீரை, முருங்கைக்கீரை, பருப்புசாதம் கொடுக்கலாம். வளர வளர குழந்தைகளுக்குத் தேவையான சத்துகளும் மாறும் அதற்கேற்ப கவனித்து குழந்தைகளுக்கு உணவளியுங்கள்.
Disqus Comments