.

Saturday, September 26, 2015

தொடர் ஹச்... ஹச்... ஹச்... தும்மல்




தும்மலுக்கான நெடி வந்தும் தும்மல் வராமல் அவதிப்பட்ட அனுபவம் நமக்கிருக்கும். தும்மல் போட வேண்டி துணியின் நுனியை மூக்கில் விடுவது, வெளிச்சத்தை உற்றுப் பார்ப்பதென பல முயற்சிகளை செய்து தவிப்பது ஒரு வகையென்றால், இருபதிலிருந்து முப்பது முறை விடாமல் தும்மிக்கொண்டே இருக்க நேரிடும் அடுக்குத் தும்மல் இன்னொரு வகை. உடலையே உலுக்கி விடக்கூடியது இந்த அடுக்குத் தும்மல்.
இது போன்ற பிரச்னைகளுக்குப் பயந்துதான் புழுதி பறக்கும் சாலைகளில் பயணிப்பவர்கள் கைக்குட்டையை முகத்தில் கட்டிக்கொள்கின்றனர். நம்மை அவதிக்குள்ளாக்கும் அடுக்குத் தும்மல் குறித்துப் பேசுகிறார் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி சிறப்பு நிபுணர் கைலாஷ்...

‘‘நம்முடைய மூக்கில் Mast என்ற செல் உள்ளது. இந்த செல் மிகவும் உணர்ச்சிகரமானது. மூக்கின் வழியாக நாம் சுவாசிக்கும்போது காற்றில் கலந்துள்ள சிறுசிறு தூசி,  துகள்கள் மற்றும் மிதமான வாசனை ஆகியவற்றை மூக்கில் உள்ள Mast செல் உணரும். அதேவேளையில், மிகவும்மென்மையான இந்த செல் மிளகாய்தூள் நெடி, ஹோமப் புகை, சென்ட், கற்பூரம், ஊதுவத்தி, பெயின்ட் போன்றவற்றின் நறுமணம், ஆசிட், பிளீச்சிங் பவுடர், சிகரெட் புகை போன்றவற்றை நாம் நுகரும்போது அவற்றை தடுப்பதற்காக தும்மலை உண்டாக்கும்.

இதன் காரணமாக தொடர்ந்து தும்மல் வெளிப்பட்டு கொண்டு இருக்கும். அதைப்போன்று ஒருசிலர் காலையில் தூங்கி எழுந்தவுடனே இடைவிடாமல் அடுக்கடுக்காக தும்மிக் கொண்டே இருப்பார்கள். அன்றாடம் நாம் பயன்படுத்தும் படுக்கை, போர்வை, படுக்கை விரிப்பு ஆகியவற்றில் காணப்படும் Mite என்ற கிருமி, ஒவ்வாமையால் ஏற்படும் இந்த தொடர் தும்மலுக்கு (Allergic Rhinitis) முக்கிய காரணமாக அமைகிறது. அடுக்குத் தும்மல் பரம்பரையாக தொடர்ந்து வருகிற பிரச்னை.

வீட்டில் யாருக்காவது இப்பிரச்னை இருந்தால், அவருடைய வாரிசுகளுக்கு கண்டிப்பாக அடுக்குத் தும்மல் வர வாய்ப்பு உள்ளது. ஆனால், இப்பிரச்னை தொற்று கிடையாது. தாய்ப்பால் குடிக்கும் நிலையில் உள்ள குழந்தைகளுக்கு அடுக்குத்தும்மல் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. இக்குழந்தைகள் தாய்ப்பாலை நிறுத்திய பின்னர், தூசு, புகை காரணமாக மாசு அடைந்த இடத்துக்கும், நறுமணம் அதிகமாக உள்ள பகுதிக்கும் செல்லஆரம்பிக்கும்போது, இவர்களுக்கு அடுக்குத்தும்மல் வர வாய்ப்பு உள்ளது.

வேலை செய்யும் சூழல், மகரந்த தூள் அதிகமாக உள்ள இடம் ஆகியனவும் விடாது விரட்டும் தும்மலுக்கு காரணமாகலாம். உதாரணத்துக்கு மாவு அரைக்கும் இடம், பஞ்சு தொழிற்சாலை போன்ற இடங்களில் வேலை செய்பவர்களுக்கு அடுக்குத் தும்மல் பாதிப்பு இருக்கும். நியூசிலாந்து நாட்டினர்தான் இவ்வகை தும்மலால் அதிக  அளவில் பாதிப்பு அடைகின்றனர்.  அங்கு ஏராளமாக மகரந்த தூள் இருப்பதுதான் காரணம். உலக மக்கள் தொகையில் அதிகமானோர் (இருபத்தைந்து சதவிகிதத்தினர்) அடுக்குத் தும்மல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் இவ்வகை தும்மலுக்கான மருந்து, மாத்திரைகள்தான் அதிகம் விற்பனை ஆகின்றன.

அடுக்குத் தும்மலால் பாதிக்கப்பட்ட நபர் தும்ம தொடங்கினால், இருபதில் இருந்து முப்பது தடவை வரை இடைவிடாமல் தும்முவார். கண், காது, மூக்கு ஆகியவற்றில் அரிப்பு ஏற்படும். மேலும் கண் மற்றும் மூக்கில் இருந்து நீர் வடியும். பொதுவாக, நமது உடலில் IgE (Immunoglobulin E)  அளவு 100 இருக்க வேண்டும். அடுக்குத் தும்மலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஆயிரக்கணக்கில் இருக்கும். அலர்ஜி உள்ளவர்கள் அனைவருக்கும் IgE பரிசோதனை பண்ணுவது நல்லது.

அடுக்குத் தும்மலால் அவதிப்படுபவர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். ஐஸ் க்ரீம், திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, அன்னாசி, எலுமிச்சை, வேர்க்கடலை, க்ரீம் பிஸ்கெட்டுகள், கடல் உணவுகள், முட்டையின் வெள்ளைக்கரு ஆகிய வற்றை தவிர்க்க வேண்டும். இதை குணப்படுத்த Mast Cellஐ முதலில் சரி பண்ண வேண்டும். அதற்கு Nasal Sprayஐ மூக்கில் அடிக்க வேண்டும். உறிஞ்சக் கூடாது. அலர்ஜி ஸ்பெஷலிஸ்ட் ஆலோசனைப்படி Antihistamine மாத்திரையைக் குறைந்தது ஆறு மாதங்களுக்கு சாப்பிட வேண்டும். அடுக்குத் தும்மல் பாதிப்பு உள்ளவர்களுக்கு பிற்காலத்தில்ஆஸ்துமா, வறண்ட தோல்வர வாய்ப்பு உள்ளது’’.

நன்றி

குங்குமம் டாக்டர்
            - விஜயகுமார்
Disqus Comments