.

Monday, September 14, 2015

அதிகளவில் சிசேரியன் நடக்க காரணம் என்ன?



கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி, குமட்டல், ருசியின்மை போன்றவற்றுக்கு மாதுளை, சாத்துக்குடி, மாங்காய், சீரகத் தூளை தேனில் கலந்து சாப்பிடுதல், ஏழாவது மாதத்தில் வரும் பொய் வலி, சிறுநீர்தாரைத்தொற்று, மலச்சிக்கலைத் தவிர்க்க சீரகம் – சோம்பு கஷாயம் கொடுத்தல் போன்ற கை வைத்தியங்களை வீட்டிலிருந்த அனுபவம் மிக்க பெரியோர் செய்துவந்தனர்.


கர்ப்பிணிகள் பசிக்கும் போது உணவருந்தி, தவிக்கும்போது நீரருந்தி பிரசவம் வரையிலும் இயல்பாக வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தனர். அப்பெண்ணுக்கு மனதளவில் மகிழ்ச்சியளிக்கக்கூடிய சூழலை அக்குடும்பம் உருவாக்கித் தந்தது. கர்ப்பம் தரித்த ஏழாவது மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்வு நடத்தப்பட்டு தாய் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.

ஒரு பெண்ணின் ஆசை, நிராசைகளை ஒரு தாய்தான் நன்கு அறிந்து வைத்திருப்பார் என்பதாலும், தாயிடமிருந்து தாய்மையைக் கற்றுக் கொள்வதற்காகவும்தான் தாய் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். மகிழ்ச்சிகரமான சூழலில் சுகப்பிரசவத்திலேயே குழந்தை பெற்றுக்கொண்டனர். இப்போது நாம் இயற்கை வாழ்வியலிலிருந்து முற்றிலுமாக விலகிப் போய்விட்டோம்.

முந்தைய தலைமுறைப் பெண்களிடம் உடல் உழைப்பு அதிகம் இருந்தது. அது இப்போது வெகுவாகக் குறைந்து விட்டது. ஹார்மோன் உற்பத்திக்கும் உறுதியான எலும்புக்கும் பிரதானமாக இருப்பது வைட்டமின் டி. இதற்கு மூலக்கூறான சூரிய ஒளியை நகரங்களில் வாழும் கர்ப்பிணிகள் பலர் உள்வாங்குவதில்லை.

நம் மண்ணுக்குப் பொருந்தாத மாறுபட்ட உணவு முறையும் இதற்கான காரணங்களில் ஒன்று. கார்பரேட் மருத்துவமனைகளின் வளர்ச்சியால், கருத்தரித்தல் முதல் பிரசவித்தல் வரை மருத்துவமனையை சார்ந்தே வாழ வேண்டிய நிலைமை இருப்பதால் கருத்தரித்தல் என்பது ஒரு நோயாக பார்க்கப்படக்கூடிய சூழல் நிலவுகிறது. வலிக்கு பயந்தும் நல்ல நேரத்துக்காகவும் பல சிசேரியன்கள் நடைபெறுகின்றன.

தனியார் மருத்துவமனைகள், சுகப்பிரசவத்தைக் காட்டிலும் சிசேரியனில்தான் அதிக வருவாய் கிடைக்கிறது என்கிற நோக்கோடு செய்வதும் உண்டு. நோய்த்தொற்று ஏற்பட்டிருத்தல், அதீத ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளவர்கள், குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னரே பனிக்குடம் உடைந்து போதல், குழந்தையின் தலை திரும்பாதிருத்தல், கொடி சுற்றிக்கொள்ளுதல் போன்ற சூழ்நிலைகளில்தான் சிசேரியன் செய்யப்பட வேண்டும்.

இந்த அடிப்படையில் அணுகும்போது 90 சதவிகிதம் பேருக்கு சுகப்பிரசவத்துக்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தேவையற்ற சிசேரியன் மூலம் பெண்ணின் உடல், மனம் இரண்டுமே பாதிப்புக்குள்ளாகின்றன. பருமன், இடுப்புவலி, மாதவிடாய் கோளாறுகள் வருவதோடு அறுவை சிகிச்சையில் பக்கவிளைவுகளும் ஏற்படும்.
Disqus Comments