விரதம் பல வகைகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. சிலருக்கு ஒரு வேளை, சிலருக்கு 2 வேளை உணவு, வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும் எடுத்துக்கொள்வது, அசைவம் மட்டும் தவிர்ப்பது என்று விரதங்கள் உள்ளது.
நாம் சாப்பிடுகிற உணவு செரித்து, உணவில் உள்ள கொழுப்புகள் ஆற்றலாக மாற்றப்பட குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தேவை. ஆனால் இடைவேளை கொடுக்காமல் அடுத்த வேளை சாப்பாட்டை உள்ளே தள்ளுவதால் உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது, உடலியக்கத்துக்கு தேவையான ஆற்றலாக உபயோகப்படுத்துவது தவிர்க்கப்பட்டு அப்படியே தேங்கி விடுகிறது.
தினமும் அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளி கொடுப்பது கூட விரதம் தான். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. வாரத்தில் எல்லா நாள்களும் மூன்று வேளைகளும் வயிறு முட்ட சாப்பிட்டு பழகிவிட்டு, திடீரென ஒரு நாள் விரதத்தை கடைப்பிடிப்பார்கள். அது தவறு. விரதத்துக்கு 2 நாள்களுக்கு முன்பிருந்தே காரம், குறைவான பருப்பு சாதம் மாதிரி நன்கு வெந்த உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.
அடுத்த நாள், இளநீர், மோர், துளசி சேர்த்த தண்ணீர் மற்றும் பழச்சாறுகள் என திரவ உணவுகளாக சாப்பிடலாம். அதற்கடுத்த நாள், காலை மற்றும் இரவு உணவுக்கு வெறும் பழங்களையும், மதிய உணவுக்கு மிதமான காரமற்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம். 3வது நாளில் இருந்து வழக்கமான உணவுப்பழக்கத்துக்கு மாறலாம். இது ஒரு வகையான விரதம். இன்னொரு முறையில் மாலை வரை வெறும் பழங்களையும் திரவ உணவுகளையும் மட்டும் எடுத்து கொண்டு இரவில் மிதமான உணவு சாப்பிடுகிற முறை.
வாரமோ, மாதமோ ஒரு நாள் குறைந்த அளவு உணவை எடுத்துக்கொண்டு விரதம் இருப்பதே நல்லது. அது உடலில் சில செல்களை வளர்ச்சியடைய செய்யும். பழுதடைந்த செல்கள் புத்துயிர் பெறும். அதனால் இளமையுடன் இருக்க முடியும்.
எனினும் 15 வயதுக்குறைவானவர்கள், 70 வயதைக் கடந்தவர்கள் கடுமையான உடல் உழைப்பு உள்ளவர்கள், வெளியூரில் வேலை செய்பவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் தொடர்ந்து மருந்து உட்கொண்டு வருபவர்கள் ஆகியோர் எந்த வகையான விரதமும் இருக்கக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்.