நல்லெண்ணெயையே எண்ணெய் தேய்த்துக் குளிக்க பயன்படுத்தவேண்டும். எண்ணெய்தேய்க்கும்பொழுது, எண்ணெயை ஒவ்வொரு காதிற்குள்ளும் மும்மூன்று துளிகளும், ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்டிரண்டு துளிகளும், பின் கண்களிரண்டிலும் இரண்டு துளிகளும் விட்டு, பின் மெதுவாக தலை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் தேய்க்க வேண்டும்.
காதில் எண்ணெய் விடுவதினால் தலையில் வரக்கூடிய நோய்களும், கண்களில் விடுவதினால் காதின் நோய்களும், உள்ளங்கால்களில் தேய்ப்பதினால் கண் நோய்களும், தலையில் தேய்த்து குளிப்பதினால் அனைத்து நோய்களும் குணமாகும் என்று சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எண்ணெய் தேய்த்தவுடன் குளிக்காமல் அரை மணிநேரம் கழித்து குளிக்க வேண்டும்; அவ்வாறு குளிப்பதினால் எண்ணெயிலுள்ள சத்துக்கள் உடலினுள் உட்கிரகிக்கப்படும். ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க சுமார் 60 மி.லி நல்லெண்ணெய் தேவைப்படும்.
நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15-30 நிமிடம் ஊறவைத்துப் பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும். அதிகாலையிலேயே (6.30 மணிக்குள்) குளித்து முடித்துவிட வேண்டும். வாரமிருமுறை அதாவது, ஆண்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் குளிப்பது சிறப்பு என்று சித்த மருத்துவம் கூறுகிறது.
எண்ணெயிட்டுக் குளித்தளினால் ஏற்படக் கூடிய பலன்கள் முழுமையாக நமக்குக் கிடைக்க சில வழிகளை சித்தர்கள் கூறியுள்ளனர். சில உணவுகளை நீக்கிவிட்டு சில உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். அதே போன்று செயல்களிலும் சில கட்டுப்பாடுகள் அவசியம்.
1. அதிகம் புளிப்புள்ள பொருட்கள் நீக்கப்படுதல் வேண்டும். புளிக்குப் பதில் குடம்புளி பயன்படுத்தலாம். நெல்லிக்காய், நாட்டுத்தக்காளி பயன்படுத்தலாம். மாங்காய் தவிர்க்கப்பட வேண்டும்.
2. வெண்பூசணி, அறுகீரை, கீரைத்தண்டு, கிழங்குகள், அகத்திக்கீரை, பாகல், கத்தரி, கொத்தவரை, கடலைப்பருப்பு நீக்க வேண்டும்.
3. பால், தயிர், நீக்க வேண்டும். மோர் சேர்த்துக் கொள்ளலாம்.
4. மொச்சை, பட்டாணி, கடுகு போன்ற எளிதில் செரிக்காத உணவுகள் நீக்கப் படவேண்டும்.
5. மது, புகை போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்தினால் பெரும் கேட்டினை விளைவிக்கும்.
6. குளிர்ந்த நீர் பயன்படுத்தாமல் வெந்நீர் குடிக்க வேண்டும்.
7. மாமிசம் நீக்குதல் வேண்டும். என்றாலும் வெள்ளாடு, முயல், பால்சுறா, அயிரை மீன் போன்ற எளிதில் செரிக்கும் உணவுகள் சேர்த்துக் கொள்ளலாம்.
8. புணர்ச்சி ( ஆண், பெண் கூடல் ) தவிர்க்கப்பட வேண்டும்.
9. பகல் உறக்கம் கூடாது.
10. அதிக வெயில், அதிக குளிர்ச்சியுள்ள காற்று, அதிக உடல் உழைப்பு தவிர்க்கப்பட வேண்டும்.
11. பிஞ்சுக் காய்கள், துவரை, சிறுபயிறு, பொன்னாங்கண்ணி, சிறுகீரை போன்ற எளிதில் செரிக்கும் கீரைகள், மிளகு, சீரகம், ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், நெய் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொண்டால் எண்ணெய் குளியலின் பயன்கள் கூடும்.