.

Wednesday, August 19, 2015

இரத்தக்கட்டு எதனால் ஏற்படுகிறது ?



மனிதனுக்கு ஏற்படும் உபாதைகளில் மிகவும் முக்கியமானது ரத்தக்கட்டு. அடிபட்ட இடத்தில் ரத்தம் வெளியேறாமல், கன்றிப்போய், சிவந்து,  வீக்கத்துடன் பார்க்கவே பயங்கரமாக காணப்படும். ரத்தக்கட்டு ஏற்படக் காரணம், முதலுதவி சிகிச்சை, ரத்தக்கட்டு பாதிப்பில் இருந்து உடல்  உறுப்புகளைப் பாதுகாக்கும் விதம் என எல்லாம் பேசுகிறார் டாக்டர் அரவிந்த்.


‘‘ஒருவருக்கு அடிபட்டவுடன் உடலில் இயல்பாகவே ஏற்படும் செயல்முறை ரத்தக்கட்டு என அழைக்கப்படுகிறது. ரத்த நாளங்களில் ரத்தக்கட்டு  ஏற்படுவதற்கான செயல் முறைகள் ‘உறைவு உருவாக்கம்’ (Thrombus Formation) எனப்படும். ஒருவருக்கு அடிபட்ட இடத்தில் 3 நிமிடங்களில் இருந்து 8 நிமிடங்களுக்குள் இயல்பாகவே ரத்தக்கட்டு ஏற்பட்டு விடும். இவ்வாறு அடிபட்டவுடன் மனித உடலில் ரத்தக்கட்டு ஏற்படுவதற்கு ரத்த வட்டுகள் (Platelets) மிக முக்கியமான காரணியாக விளங்குகின்றன .

இந்த ரத்த வட்டுகளின் எண்ணிக்கை நமது உடலில் ஒன்றரை லட்சம் முதல் நான்கு லட்சம் வரை இருக்கலாம். இவற்றின் எண்ணிக்கை ஒன்றரை  லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், ரத்தக்கட்டுக் குறைபாடுகள் ஏற்படும். ரத்த வட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை த்ரோம்போசைட்டோபீனியா (Thrombocytopenia) என்றும் ரத்தவட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை த்ரோம்போசைட்டோசிஸ் (Thrombocytosis) என்றும் குறிப்பிடுவர். நமது உடலில் ரத்தக்கட்டை ஏற்படுத்துவதற்கென 13 காரணிகள் உள்ளன. இவை உறைதல் காரணிகள் என்று குறிப்பிடப்படுகின்றன.

இவற்றில் V, VII, VIII, IX, X ஆகிய உறைதல் காரணிகள் ரத்தக்கட்டு ஏற்படுவதற்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த உறைதல்  காரணிகளில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். ஒருவருக்கு விபத்தில் காயம் ஏற்பட்டால், உடனே முதலுதவி  சிகிச்சையை ஆரம்பித்துவிட வேண்டும். இதனை சுருக்கமாக டாக்டர்கள் ‘Rice’ என அழைப்பர். ‘R என்பதற்கு ரெஸ்ட் என்று பொருள். அதாவது,  அடிபட்ட பாகத்துக்கு அதிகமாக அசைவுகள் கொடுக்காமல் இருந்தால், ரத்தக்கட்டு உடனடியாக ஏற்பட உறுதுணையாக இருக்கும். அடிபட்ட இடத்தில்  ஐஸ் கட்டிகளைக் கொண்டு ஒத்தடம் கொடுப்பதை Ice Compression என்பர். இதுவும் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தி, ரத்தக்கட்டு ஏற்பட உதவும்.

இதற்கு நாளங்களில் குறுக்களவு குறைதல் என்று பெயர். ரத்தம் வெளியேறும் இடத்தினை பாண்டேஜ் துணியால் கட்டுவதன் மூலம், ரத்தப்போக்கைக்  கட்டுப்படுத்தலாம். இந்த சிகிச்சை முறை Compression என அழைக்கப்படுகிறது. இந்த சிகிச்சையைக் கையாளும்போது, பாண்டேஜ் துணியை  மிக இறுக்கமாகக் கட்டக்கூடாது. அப்படிச் செய்தால், அடிபட்ட இடத்தின் கீழ்ப்பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும். ரத்தக்கட்டுக்கான  முதலுதவி சிகிச்சை முறைகளில், கடைசியாக செய்யப்படுவது ‘E’ Elevation  என்பதாகும். இதில் அடிபட்ட இடம் அல்லது காயம்பட்ட இடத்தினை உயர்த்தி வைக்க வேண்டும். இதனால், ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்பட்டு, ரத்தக்கட்டு ஏற்பட வழி உண்டாகும். இவை அடிபட்ட உடனே  மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் ஆகும்.

இடித்துக் கொள்ளாமலும் காயம்படாமலும் கூட ஒருவருக்கு ரத்தக்கட்டு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்கு ஆழ்ந்த சிரை படிம உறைவு   (Deep Vein Thrombosis) என்று பெயர். இவ்வகை ரத்தக்கட்டு கர்ப்பிணிகள், கருத்தரிப்பு மாத்திரையை அதிகமாக உட்கொள்ளும் பெண்கள், பருமனாக இருப்பவர்கள், நீண்ட நாள் படுத்த படுக்கையாக இருக்கும் வயதானவர்கள் போன்றவர்களுக்கு அதிகம் வரலாம். இவர்களுக்கு ஆழ்ந்த சிரை படிம உறைவு வராமல் தடுக்க வீட்டில் இருந்த வாறே சில எளிய சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம். வீக்கம் ஏற்பட்ட கை மற்றும் கால்களுக்கு அவ்வப்போது அசைவுகள் கொடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.

அதன்மூலம், ரத்தம் தேங்குவதைக் குறைத்து, ரத்தக்கட்டு ஏற்படுவதை தடுக்கலாம். வீக்கம் ஏற்பட்டுள்ள உடல் உறுப்புகளைத் தலையணை வைத்து  உயர்த்தி வைக்க வேண்டும். கால்களில் ஏற்பட்டுள்ள வீக்கத்தைக் குறைக்க காலுறைகளைப் பயன்படுத்தலாம்.இப்படி முதலிலேயே வீக்கத்தைக்  கட்டுப்படுத்தவில்லை என்றால், ரத்தக்கட்டி உடைந்து நுரையீரல், இதயம், மூளை போன்ற இடங்களுக்குச் சென்று தங்கிவிடும். அந்த நேரத்தில்,  மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, வலிப்பு போன்றவை   ஏற்படலாம். அது போன்ற நேரங்களில் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று  சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்...’’

Disqus Comments