சமையலின் போது வாசனைக்காக பயன்படுத்தப்படும் ஏலக்காய் வாசனைப்பொருட்களின் அரசி என்று அழைக்கப்படுகிறது. அசைவ உணவில் இதைச் சேர்த்தால் அதன் ருசியே தனிதான்! செரிமான சக்தியைக் கூட்டி, பசியைத் தூண்டுவதில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. வாசனைப் பொருளாக பயன்படுத்தப்படும் ஏலக்காயில் மருத்துவ குணம் நிறைந்துள்ளது.
இதில் கனியும் விதைகளும் மருத்துவப் பயன் கொண்டவை. நறுமணம் கொண்ட விதைகள் வயிற்று வலியினை சரிசெய்கின்றன. ஜீரணத்தை தூண்டுபவை. உடலின் வெப்பத்தை கூட்டி ஜீரணத்தினைத் அதிகப்படுத்தும். இது தசை சுரிப்பு கோளாறுகளுக்கு எதிரானது. நாற்பது ஆண்டுகால ஆய்வுகள் ஏலக்காயில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணெய்களின் மருத்துவத்தை உறுதி செய்கின்றன.
செயல்திறன் மிக்க வேதிப்பொருள்கள்: ஏலக்காயில் பல எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன: போர்னியோல்,கேம்ஃபர், பைனின், ஹீயமுலீன்,கெரியோஃபில்லென், கார்வோன்,யூகேலிப்டோல், டெர்பினின்,சேபினின், இவை இதன் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாகும்.
வயிறு உப்புசம் நீக்கும் இந்திய மருத்துவத்தில் ஆஸ்துமா, மூச்சுக்குழல்அழற்சி, சிறுநீராகத்தின் கல், நரம்பு தளர்ச்சி, மற்றும் பலவீனம் நீக்க பயன்படுத்தப்படுகிறது.
சீன மருத்துவத்தில் சிறுநீர்ப் போக்கு கட்டுப்பாடின்மையினைப் போக்கவும் வலுவேற்றியாகவும் உதவுகிறது. வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது; பாலுணர்வு தூண்டும் பொருளாகவும் உள்ளது. ஏலக்காய் டீ
மன அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், "ஏலக்காய் டீ" குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து (ஒரு கப் டீக்கு இரண்டு ஏலக்காய் போதுமானது!) டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சீக்கிரமே குறைகிறதாம்!
நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு என பல பிரச்சினைகளிலிருந்து, ஏலக்காயை சும்மா வாயில் போட்டு மெல்லுவதாலேயே நிவாரணம் பெறமுடியும். எனினும் இதை அதிகமாக, அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லதல்ல.
விக்கல் போக்கும் வெயிலில் அதிகம் அலைவதால் வரும் தலைசுற்றல், மயக்கத்திற்கு ஏலக்காய் சிறந்த மருந்தாகும். நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும்.
விக்கலை உடனே நிறுத்தும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு. இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி, வடிகட்ட வேண்டும். மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தால், விக்கல் உடனே நின்றுவிடும்.
வாயுத் தொல்லையால் அவதிபடுகிறவர்கள் , கூச்சமின்றி நாடவேண்டிய மருந்து ஏலக்காய். ஏலக்காயை நன்கு காயவைத்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாயுத்தொல்லை எப்போதும் இருக்காது.
குழந்தைகளுக்கு அரு மருந்து குழந்தைகளுக்கு வாந்தி பிரச்சினை இருந்தால் பயப்படாமல் ஏலக்காயை மருந்தாகத் தரலாம். இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப்பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினால், வாந்தி உடனே நிற்கும்.
ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஏலக்காய் நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே திறக்கும்.