நிலத்திலே மனிதர்களால் விளைவிக்கின்ற நன்செய், புன்செய் பயிர்களின் நன்மைகளை எளிதில் சொல்லிவிட முடியாது. இதில் அரிசியானது சுவையும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகவும் விளங்கி வருகிறது. இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டு வகையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா, பர்மா, சீனா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படும் அரிசி உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் உண்ணும் உணவாகவும் விளங்கிவருகிறது. ஆனால் இன்று நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பதுதான்.
பிறந்தது முதல் அரிசி உணவு சாப்பிட்டு பழகியவர்கள் இதைக்கேட்டதும் வாடி வதங்கி, தங்களுக்கு பெரும் நோய் ஏற்பட்டுவிட்டது என்பதுபோல் முடங்கி விடுகிறார்கள். உண்மையில் மற்ற தானியங்களைப்போலவே அரிசியும் பல்வேறு நன்மைகளை தந்து நம்மை காத்து வருகிறது. உண்மையில் அரிசியை பட்டை தீட்டியும், குக்கரில் வைத்து சாப்பிடுவதால்தான் நமக்கு நோய் உண்டாகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை. உடலை வளர்த்தால்தான் உயிரை வளர்க்கமுடியும் என்பதில் தெளிவாக இருந்தார்கள் நமது முன்னோர்கள். எனவே உடலுக்கு எது தேவையோ அதை மட்டுமே உண்டு நலமாக வாழ்ந்தார்கள். இதில் தமிழர்களின் முக்கிய உணவான சோறு சமைப்பது என்பதே தனிக்கலையாக விளங்கியது எனலாம். இதில் தமிழர்கள் தனித்தன்மை பெற்று விளங்கினார்கள்.
சோறு வடிப்பது என்பது பழைய அரிசியைத் தவிடு, நொய் நீக்கி நன்றாக தீட்டி, முழு அரிசியாய் ஆய்ந்து எடுத்து இளவெந்நீரால் கழுவி சற்று ஆற விட்டுவைத்து கொள்ள வேண்டும். அரிசிக்கு மூன்றுபங்கு நீர்விட்டு அடுப்பிலேற்றி அது நுரைவிட்டு கொதிக்கும் பொழுது அரிசியை அதில் போட்டு முக்காற்பங்கு வெந்தவுடன், கரண்டியால் துழாவி வடித்து கொள்ள வேண்டும். கஞ்சி வடிந்தவுடன், அந்த அடுப்பு தணலில் சோற்று பானையை வைத்து விட வேண்டும். அதன் பிறகு நீர் முற்றிலும் வற்றி பக்குவமாய் இருக்கும் சமயத்தில் எடுத்து கொள்வதே சோறு. இந்த சோறே உணவுக்கு ஏற்றது. வாதம் பித்தம் கபம் ஆகிய முக்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஏற்றது. பத்தியத்திற்கும் உகந்தது. ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு பண்பு உள்ளது என்பதையும் சொல்லிவைத்தார்கள்.
முழு அரிசிசோற்றை மிதமான சூட்டுடன் சாப்பிட்டால் முப்பிணிகளையும் நீக்கி உடலுக்கு வன்மை தந்து நலத்துடன் வாழவைக்கும். நன்றாக சமையாத சோற்றை உண்பதால் மலம் கட்டும். மறுநாளும் செரிக்காமல் இருக்கும். இதனால் உடலில் இதன் சத்துக்கள் ஊறாது. குழைந்த சோற்றை உண்டால் இருமல், மந்தம், பீளை, மேகம் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும். மிகுந்த சூட்டுடன் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டால் ரத்தம் சூடாகும், நீர்வேட்கை அதிகரிக்கும், பெருத்த வயிறு ஏற்படும். எனவே முழு அரிசிசோற்றை மிதசூட்டில் சாப்பிடுவதே நன்மை தரும்.
இதில் கார் அரிசியை கொண்டு வடிக்கப்படும் சோறு உடலில் உள்ள சிறு நஞ்சுகளை நீக்கி புண்களை ஆற்றும். ஈர்க்கச்சம்பா அரிசிசோறு கடவுளுக்கு படைக்கும் உணவிற்கு பயன்படுத்தப்படும் அரிசியாகும். இது பார்த்தவுடன் விருப்பத்தையும் நாவிற்கு சுவையை தரும். புழுகுசம்பா அரிசி சற்று அளவில் நீண்டு இருந்தாலும் இந்த அரிசியை சமைத்து உண்பதால் உடலில் வனப்பு ஏற்படும். நல்ல பசி எடுக்கும். தீராத தாகம் நீங்கும்.
கோரைச்சம்பா அரிசியை உண்பதால் வெப்பத்தால் ஏற்படும் வெறி, பெண்களுக்கான வெள்ளைபடுதல், உடலில் உண்டாகும் நமைச்சல் நீங்கி, உடல் குளிர்ச்சி உண்டாகும். குறுஞ்சம்பா அரிசிசோறு ஆண்மையை பெருக்கி உடலில் குத்துகின்ற வலியை போக்கும். ஆனால் உடல் சூட்டை உண்டாக்கும். மிளகுசம்பா அரிசிசோறு பல நன்மைகளை வாரி வழங்கக் கூடியது. பசியை உண்டாக்கும். பெருவளி என்கின்ற கடுமையான வாத நோய்களை நீக்கும்.சீரகச்சம்பா அரிசி சோற்றை மன்னர்களும், செல்வந்தர்களும் மட்டுமே உண்ணும் பழக்கம் நமது நாட்டில் இருந்து வந்தது.
இனிப்பு சுவையுள்ள இதை உண்பதால் உடலில் ஏற்படும் அனைத்து வளி நோய்களையும் நீக்கும். சாப்பிட்டு முடிப்பதற்குள்ளாக செரித்து மீண்டும் பசியை ஏற்படுத்தும் அளவிற்கு எளிமையானது. கல்லுடைச்சம்பா என்ற அரிசி சோறு அதிகமான ஆற்றலை தரக்கூடியது. மிகுந்த பலசாலியை கூட எதிர்க்கும் உடல் திறனையும் மனத்தெம்பும் ஏற்படுத்தும். நல்லசுவை கொண்ட இதை உண்டுவந்தால் பேசும் திறன் அதிகரிக்கும். குன்றிமணிச்சம்பா சோறு உண்டுவந்தால் உடல் வலித்து ஆண்மை உண்டாகும். வளி நோய்கள் அனைத்தும் போகும்.
அழகும் சுவையும் நிரம்பிய அன்னமழகி என்ற அரிசியை சமைத்து உண்பதால் உடல் வெப்பமாறுபாட்டால் ஏற்படும் சுரங்களை நீக்கி உடலுக்கு நன்மை தரும். மோர்ச்சோறு உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு இவைகளை போக்கும். இரவில் நீரூற்றிய சோற்றை பழையது என்பார்கள். விடியற்காலையில் சோற்றில் உள்ள நீரோடு பழையதை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். உடலில் ஒளி உண்டாகும். வெறிநோய் முற்றிலும் நீங்கும். நன்றாக பசியெடுக்கும்.
பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்கும். இரவில் நன்றாக தூக்கம் வரும். மிகுதியாக உண்டுவிட்டால், அப்பொழுதே உறக்கம் கண்களை தழுவும். பொதுவாக எந்த உணவாக இருந்தாலும் அளவாக தேவைக்கு ஏற்ப சாப்பிடுவதால் கெடுதல் என்பதே உண்டாகாது. அதுவும் உணவே மருந்து. மருந்தே உணவு என்று வாழ்க்கை முறையை வகுத்து கொண்டு வாழும் தமிழர்களின் உணவே, இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களால், பெரிதும் விரும்பும் உணவாகவும் மாறி வருகிறது. எனவே அரிசிசோறு உண்டு நலமுடன் வாழ்வோம்.
பித்தத்தை போக்கும் கஞ்சி
சோறு கொதிக்கும் போது இருக்கும் நீரை கொதிநீர் என்பார்கள். வீட்டில் சமையல் செய்யும் பெண்கள், பசியுடன் இருக்கும் சிறுவர்களுக்கு இதை குடிக்க கொடுப்பார்கள். தாங்களும் குடிப்பார்கள். இதுவும் மருத்துவ குணம் கொண்டதுதான். கொதிநீரை குடிப்பதால் நீர்சுருக்கு என்னும் சிறுநீர்நோய் போகும்.சோறு வடித்தவுடன் கிடைக்கும் கஞ்சியை சூட்டுடன் தண்ணீர் கலந்து உப்பிட்டு குடிப்பதால் உடல் பருக்கும். உடலில் ஒளி உண்டாகும். உடலில் உண்டாகும் பித்தம், வெப்பம் நீங்கும். சோறு வடித்த கஞ்சியை எந்த வகையில் குடித்தாலும் சிறு மந்தத்தை உண்டாக்கும் என்றாலும், விழிகளுக்கு குளிர்ச்சியும் கொடுக்கும். உடல் சூட்டால் தோன்றிய பல்வேறு நோய்களை குணமாக்கும்