‘‘டான்சில் எனப்படும் நிணநீர்த்தசை பிறக்கும் போதே குழந்தைகளுக்கு இருக்கும். தொண்டையில் கிருமிகள் எதுவும் நுழையாதபடி பாதுகாப்பதே இதன் முக்கிய பணியாகும்.
இதில் ஏற்படும் பாக்டீரியா கிருமிகளின் தொற்றினால் சளி பிடிக்கும். மூச்சு விட சிரமப்படுவார்கள். இதை மருந்து மாத்திரைகள் கொடுத்தே சரி செய்து விடலாம். வருடத்துக்கு 5 அல்லது 6 முறைக்கு மேல் இப்படி ஏற்பட்டால், மருத்துவரிடம் பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். சில குழந்தைகளுக்கு எந்த மருத்துவமும் செய்து கொள்ளாமலே இயற்கையாகவே கூட டான்சில்ஸ் பிரச்னை சரியாகிவிடும்.
சில குழந்தைகளுக்கு டான்சில் பிரச்னையால் தொண்டையில் உள்ள நிணநீர் கட்டிகள் பெரிதாகி வலியும் காய்ச்சலும் ஏற்படும். டான்சில் தசையில் சீழ் கட்டி இருக்கும். தொற்றுக்கிருமிகளால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கும். இதற்கு ‘அக்யூட் டான்சிலிட்டிஸ்’ என்று பெயர்.சிலருக்கு மூக்குக்கு பின்னால் உள்ள அடினாயிட் நிணநீர் நாளங்கள் பெரிதாகி அடைத்துக்கொள்வதால் கூட டான்சில் பிரச்னை ஏற்படும். இவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். தூங்கும் போது குறட்டை ஒலி பெரிதாக இருக்கும். சரியாக தூக்கம் வராது. ஆனால், கிருமித்தொற்று இருக்காது. இதற்கு ‘க்ரோனிக் அடினோடான்சிலர் ஹைபர்ட்ரோபி’ என்று பெயர்.
மூக்கின் பின் பக்கத்தையும் நடுக் காதையும் இணைக்கும் ஈஸ்டேசி யன் ட்யூப் பகுதியில் உள்ள டான்சில் நிணநீர் நாளங்கள் பெரிதாகி அடைத்துக்கொள்ளும். காதுகளில் திரவம் சேர்ந்து வலி எடுக்கும். இதனால் குழந்தைகளின் கேட்கும் திறன் பாதிப்படையும். சிறிய அறுவை சிகிச்சை ஒன்றை செய்வதன் மூலம் இந்தப் பிரச்னையை எளிதாக சரிசெய்யலாம். சில பெற்றோர் ‘அடிக்கடி குழந்தைகளுக்கு சளி பிடிக்கிறது. அதனால் டான்சில் ஆபரேஷன் செய்தால் சரியாகும்’ என்று நினைக்கிறார்கள்.
இது தவறான எண்ணம். ‘ஐஸ்க்ரீம், குளிர் பானங்கள் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு டான்சில் பிரச்னை ஏற்படும்’ என்பதும் தவறான நம்பிக்கை. தேவைப்பட்டால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மற்றபடி மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்தி விடலாம். டான்சில் பிரச்னை பெரும்பாலும் பாக்டீரியா கிருமிகளால்தான் ஏற்படுகிறது. அதனால் வீட்டிலும் பள்ளியிலும் குழந்தைகள் சுத்தமாக இருக்க கற்றுக் கொடுத்தாலே பிரச்னை தலை தூக்காது.’’
நன்றி
காது, மூக்கு, தொண்டை நிபுணர்
டாக்டர் பாபு மனோகர்...