.

Monday, May 25, 2015

சர்க்கரை நோயாளிகள் சிலர் அங்கவீனர்களாவது ஏன்? அதை தடுப்பது எப்படி?



நீரிழிவு நோயாளர்கள் இரத்தத்தில் குளுக்கோசின்  அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காவிட்டால்  அவர்கள் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என்பதை அறிவீர்கள்.

அதேசமயம்  கட்டுப்பாட்டுடன்  இருந்தால் சுகதேசியாக வாழ முடியும். மருத்துவ சிகிச்சை, உணவுக் கட்டுப்பாடு, தேகப்பியாசம் என்ற மூன்றும் நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அவசியமானவையாகும்.

நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காதவர்களில் மூளை நரம்புத் தொகுதியும் குருதிச் சுற்றோட்டத் தொகுதியும் பாதிப்புறும். இதன் விளைவாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதுடன்  உணர்திறனும் குறைவடையும். இதனால்  பக்கவாதம் (STROKE), மாரடைப்பு (MYOCARDIAL  INFACTION),   சிறுநீரகச் செயலிழப்பு, பார்வைக் குறைபாடு, அனல்வாதம் (NEUROPATHY), மாறாத புண், பாலியல் குறைபாடு, அங்கவீனமாதல்  என்பன ஏற்படலாம்.

கட்டுப்பாடில்லாத நீரிழிவு நோயாளர்களில் காஸ்போக்கில்  தோன்றும் மாற்றங்களால் இரத்தக் குழாய்ப்களுக்குள் படிவுகள் ஏற்பட்டு இரத்த சுற்றோட்டத்தில் சீரற்ற தன்மைகள் ஏற்படுகிறது. இதனால்  பாதங்களுக்கான இரத்தச் சுற்றும் பாதிப்படையும்.

அதேவேளை நரம்புத் தொகுதியில் ஏற்படும்  மாற்றங்களால் உணர்திறனும் பாதிப்படைகிறது. இவற்றின் விளைவாக தோல்கள் தடிப்பதுடன்  உணர்திறனும் குறைவடைகின்றது. இவ்வாறான நிலையில் சிறு காயங்கள் பாதத்தில் ஏற்படும் போது நோயாளர்கள் உடனும் உணர்ந்து  கொள்ளமாட்டார்கள்.  நகம் வெட்டும் போது அல்லது பாதத்தில் கல், ஆணி முதலானவற்றால் காயம் ஏற்படும் போதும் உணராது உதாசீனப்படுத்தும் நிலை ஏற்படுகிறது.

நீரிழிவு நோயாளர்களின் விரல்களுக்கிடையில் பங்கஸ் தொற்றும் ஏற்படுவதுண்டு. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால்  பக்றீரியா வகை நுண்ணுயிர் கிருமிகள் இச் சிறு காயங்களூடாக நுழைந்து பெருகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. வெளிப் புண் மாறியது போலிருப்பினும் உள்சென்ற கிருமிகள் வேகமாக இனவிருத்தி  செய்து பெருகி புண்ணை மாற்றவிடாது வேறொரு இடத்தில்  செல்லூலைற்றிஸ் CELLU-LITISஆக வெளிப்படும். 

இதனால்  அப்பகுதியில் திரவம் நிரம்பி கால்கள் வீங்கத் தொடங்கும். விரைவாக  இவ்வீக்கம் பெருத்திடும். இரண்டொரு நாட்களில் வீக்கம்  அதிகரித்து கால்களை அசைத்திட முடியாமல் கடும் வேதனை ஏற்படும். அத்துடன் காய்ச்சலும்  குளிரும் ஏற்படலாம். கால்கள் சிவந்து வீங்கி தளும்பாகிப் பாரமாக இருக்கும். இதனால் ஏற்படும்  வேதனையால் கால்களை  அசைக்கவும் முடியாது போவதுடன் உள்ளே சீழ் பிடித்து சூடாகவும் இருக்கும். இதைக் கவனிக்காது உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் கொப்பளங்களும் ஏற்படலாம்.

நிணநீர்ச் சுரப்பிகளும் LYMPH NODES தடைப்பட வாய்ப்புண்டு. உடனும் சிகிச்சை அளித்தால்  நோய் குணமாகும். ஒன்றிற்கு மேற்பட்ட நுண்ணுயிர்க் கொல்லி ANTIBIOTICS மருந்துகள் பாவிக்க வேண்டும். ஊசி மூலமாக வழங்கப்படும் மருந்துகள் துரித பலனளிக்கும்.

நீரிழிவு நோயாளர்களின் இரத்தச் சுற்றுப் பாதிப்புற்றிளுப்பதால்  மருந்துகளும்  நோய் எதிர்ப்புக் கலங்களும் பாதிப்படைந்த இடத்தை  அடையமுடியாதமையினால்  நோயைக் கட்டுப்படுத்துதல் சிரமமாகிவிடுகிறது. இதனால் சத்திர சிகிச்சை மேற்கொள்ளவேண்டி ஏற்படும்.  சிலவேளைகளில் மருந்து மூலமான சிகிச்சை பலனளிக்காமல் பாதத்தில் அல்லது காலின் ஒரு பகுதியையோ அல்லது விரலையோ அகற்ற வேண்டி ஏற்படுவதுண்டு. இதனாலேயே நீரிழிவு நோயாளர்கள் கால்களை தமது கண்களைப் போல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.  தினமும் பாதத்தை சுத்தம் செய்வதுடன் ஏதாவது காயங்கள், தொற்றுக்கள் ஏற்பட்டிருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.  தாமதமின்றி உரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோயாளர்களில் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு இரத்தச் சுற்றுத் தடைப்பட்டு கலங்கள் இறந்து காலிலோ விரலிலோ, வீக்கம் ஏற்படுவதுண்டு. இப்பகுதிகளும் அகற்றப்பட வேண்டி ஏற்படுவதுண்டு.
நீரிழிவு  நோயாளர்கள் தமது பாதத்தைப் பாதுகாத்துக் கொள்ள உகந்த முறையில் விசேட பாதணிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றை  அணிவதன் மூலமும் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலமும் அங்கவீனமாவதைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.
Disqus Comments