.

Thursday, January 8, 2015

சர்க்கரை நோயை பாகற்காய் முழுமையாய் குணப்படுத்துமா?

சர்க்கரை நோயை பாகற்காய்

ரத்தச் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது பாகற்காய் என்பதற்கான நிறைய மருத்துவச் சான்றுகள் வெளிவந்துவிட்டன. இந்தியாவில் மட்டுமல்ல, சீனாவிலும்கூட நீரிழிவு நோயாளிகள் அதிகம் தேடும் காய் பாகற்காய்தான். பாகற்காயில் உள்ள சரண்டின், மொமார்டின் முதலான தாவர நுண்கூறுகள்தான் இந்த மருத்துவச் செயல்பாட்டுக்குக் காரணம் என்று சான்றளித்துள்ளனர்.

அதேநேரத்தில், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துதல் என்பது வெறும் ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் மட்டும் என்று புரிந்துகொள்ளக்கூடாது. உடனடியாக ரத்தச் சர்க்கரை அளவை குறைக்கும் ஒரு பொருள் நீரிழிவு நோய்க்கான முழுமையான மருந்தல்ல.


பாகற்காய் வெறும் ரத்தச் சர்க்கரைத் தாழ்வை ஏற்படுத்துவதுடன், ரத்தக் கொழுப்பு வகைகளைக் குறைப்பதிலும் செல் அழிவைக் கட்டுப்படுத்தும் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்டையும் கொண்டிருப்பதுதான் இந்தக் காயின் சிறப்பு. வெந்தயம், கறிவேப்பிலை போன்றவையும் இப்படி ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கும் என்பதுதான் நமது பாரம்பரிய உணவுக் கூறின் சிறப்பு.

பாகற்காய் சாப்பிடுவதால் நீங்கள் சாப்பிடும் பிற நவீன மருந்துகளின் செயல்பாட்டில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இரண்டின் bio availabilityயும் ஒன்றோடு மற்றொன்று மாறுபடாதிருக்கக் குறைந்தபட்சம் 45 நிமிட இடைவெளி இருப்பின் நல்லது.

அதே நேரம் பல சித்த மருந்துகளுக்குப் பத்தியமாகப் பாகற்காய் நீக்கப்பட அறிவுறுத்தப்படுவதால், சித்த மருந்து எடுத்துக்கொள்ளும் காலத்தில் உங்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பின், பாகற்காய் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கலாம்.

அதிகச் சர்க்கரையைச் சாப்பிடுவது, உடலுழைப்பு குறைவு, அதிக உடல் எடை அல்லது அதிக மனஉளைச்சல் ஆகியவை மட்டுமே நீரிழிவு நோய்க்கான முழுமையான காரணம் இல்லை. பிளாஸ்டிக் பைப்பில் தண்ணீர் வர ஆரம்பித்த பின் நீரிழிவு நோய் அதிகரித்ததா, பிளாஸ்டிக் பொருள்களில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் சைசரால் இந்நோய் பெருகியதா, 1960களுக்குப் பின்னர் பல மில்லியன் டன் உரங்களை பூமியில் கொட்டி, நச்சுப் பூச்சிக்கொல்லிகள் மூலம் உணவுப் பயிர் விளைவித்ததால் தோன்றியதா, பாஸ்சுரைஸ்டு பாலில் உள்ள ஒரு புரதம், கணையத்தைத் துன்புறுத்தியதால் பிறக்கிறதா, இல்லை நம் சுற்றுச்சூழலில் கண்ணுக்குத் தெரியாத வைரஸ்கள் நமது கணையத்து ஐலட் (ISLET) செல்களைச் சிதைத்ததால் தாக்கம் பெருவாரியாகப் பெருகுகிறதா... எனப் பல்வேறு ஆய்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. மொத்தத்தில், சந்தேகிக்கும் எல்லோரையும் நாம் கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கின்றோம்.

பாரம்பரியச் சித்த மருத்துவப் புரிதல்படி பார்த்தால், மேக நோயில் ஒரு வகையாகவே நீரிழிவு பார்க்கப்படுகிறது. அன்றைய புரிதலில் அளவுக்கு அதிகமான உணவு முதல் கட்டற்ற உடலுறுவு போதைவரை பிரமேகம் எனும் சர்க்கரை நோய்க்குக் காரணமாகப் பேசப்படுகிறது.

இதைப் பல வகைகளில் சீர்ப்படுத்த வேண்டும். இல்லையென்றால், பல பின்விளைவு நோய்களை (அவஸ்தைகளைத்) தரும் என்று இன்று சொல்லப்படுவதை, அன்றே பேசியிருக்கிறார்கள்.

எனவே, நீங்கள் எந்தத் துறை சார்ந்த மருந்துகளை உட்கொண்டுவந்தாலும், உணவில் கவனம், சரியான உடற்பயிற்சி, உள்ளத்தையும் உடலையும் ஒருங்கே சீரமைக்கும் யோக-ஆசனப் பயிற்சி ஆகிய அனைத்தும் சேர்ந்திருந்தால் மட்டுமே படிப்படியாக நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். நோய் சரியான கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் படிப்படியாக மருந்துகளை, மருத்துவரின் ஆலோசனையுடன் தவிர்க்கத் தொடங்கலாம்.

தொற்றா வாழ்வியல் நோயின் (Non Communicable disease) தலையாய நோயாக உள்ள இந்த நீரிழிவு நோயைப் பற்றிய புரிதலிலும், அதற்கான மருந்துகளைத் தேடுவதிலும், உருவாக்குவதிலும் உலகெங்குமே பல சிக்கல்களும், தடைகளும், வணிகப் பிடிகளும் நிறைந்திருக்கின்றன.

‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்ற வேதனையில் உழலும் வெகுஜன மக்களைத் தங்கள் வணிகப் பிடிக்குள் சிக்க வைக்கத் தினம் ஒரு மருந்தும், மருத்துவமனையும், புது உணவும் இந்நோய்க்காகச் சந்தையில் விற்பனைக்கு வருகின்றன. குடும்ப மருத்துவரின் ஆலோசனையும், துல்லியமான மருத்துவமும் பாரம்பரிய உணவின் பக்கபலமும், மகிழ்வான மனமும் திறம்பட்ட வாழ்வியலும் மட்டுமே இன்றளவில் இந்நோயைத் தவிர்க்கவும் கட்டுப்படுத்தவும் சீரிய வழி!
Disqus Comments